Lord Skanda-Murugan
 

தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு

 நன்றி: மாதவிப் பந்தல், கே.ஆர்.எஸ் அளிக்கும் ஆய்வுக் கட்டுரை

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! அருட்பெருஞ் சோதி, தனிப்பெருங் கருணை!

தைப்பூசம்-ன்னா என்ன?
பழனிப் பாதயாத்திரை, மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு!
வடலூரிலே வள்ளலார் சோதி தரிசனம்,
திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாம் தைத்திருநாள்!! ...இப்படி பல விழாக்கள்!

என்னவன் முருகனுக்கும் தைப்பூசத்துக்கும் என்ன தொடர்பு?

* முருகன் தோன்றிய நாள் = வைகாசி விசாகம்
* அறுவரும் ஒருவர் ஆன நாள் = கார்த்திகையில் கார்த்திகை
* அன்னையிடம் வேல் வாங்கிய நாள் = தைப்பூசம்
* அசுரரை அழித்தாட்கொண்ட நாள் = ஐப்பசியில் சஷ்டி
* வள்ளியைத் திருமணம் புரிந்த நாள் = பங்குனி உத்திரம்

இப்படி... அன்னையிடம் வேல் வாங்கி,  முதன் முதலாக,  திருக்கையில் வேல் ஏந்திய நாளே = தைப்பூசம்!

இந்த வேல் வாங்கிய நாளிலே, "வேல்" என்றால் என்ன?-ன்னு கொஞ்சம் பார்ப்போமா?
வேல் என்பது தமிழ்த் தொன்மத்தின் தனித்த அடையாளம்!!
வேல், சங்கத் தமிழில் எப்படியெல்லாம் வலம் வருகிறது-ன்னு இந்த ஆய்வுக் கட்டுரையில் சிறிது காண்போம்!


  1. வேல் - பெயர்க்காரணம்:

    வேலுக்கு அப்படி என்ன சிறப்பு-ன்னு கேக்குறீங்களா?
    வெல் = வேல்!

    ’வெல்’ என்ற வினைச்சொல்லே நீண்டு ’வேல்’ என்ற பெயர்ச்சொல் ஆகிறது!
    ஆகவே, வேல் = வெற்றி!

  2. வேல் - தமிழ்த் தொன்மம்:

    ஆயிரம் ஆயுதங்கள் இருப்பினும், தமிழ் மன்னர்களின் தனித்த பெருமிதம் = வேல்!
    ஆண்டாளே, வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி-ன்னு தான் மாயோனாகிய கண்ணனைப் பாடுறா!
    வேலும் சங்கும் சங்கத் தமிழ் மரபு! திருமங்கை ஆழ்வார் கையில் இப்பவும் வேல் உண்டு!

    சங்க காலத் தமிழ் மண்ணில், வேல் வழிபாடே மிகுந்து இருந்தது!
    பின்னாளில் தான் ஆறு முகங்களும், பன்னிரு கரங்களும்! ஆகமம், அது இது-ன்னு நுழைத்த பின்பே, ஒரு சாராரின் தலையீட்டால், மற்ற வழிபாடுகள் மெல்ல மெல்லப் புகுந்தன!

    சிலப்பதிகாரத்தில், வேலுக்கு எனத் தனிக் கோட்டமே இருக்கும்!
    இந்த வேல் வழிபாடு நாளடைவில் நின்று விட்டது! வேல் வழிபாடு-ன்னா நாகரிகம் இல்லாதவர்கள் கும்புடுவது, விக்ரஹாதி மந்திர வழிபாடே நாகரிகம் என்று ஆகி விட்டது:(

    பல தொன்மையான கோயில்களில் முருகன் சிலையே இருக்காது! வெறும் வேல் வழிபாடு தான்!

  3. வேலின் அமைப்பு:

    வேல் எப்படி இருக்கும்?
    அட, இதைச் சொல்லணுமா என்ன? வேலைப் பார்க்காத தமிழரும் உளரோ?
    ஆனா, வேலின் அமைப்பு பற்றி இலக்கியங்கள் என்ன சொல்கின்றன?

    பொதுவாக, வேல், எஃகினால் செய்யப்படும் போர்க் கருவி!
    எஃகு ஒரு கலப்பு உலோகம்! இரும்பு + கரிமம் குறிப்பிட்ட அளவில் கலந்து, உலைக்களத்தில் வடிக்கப்படும் கருவி!

    மன்னர்களின் வேல் எஃகு என்றால், சில வேடர்களின் வேல் கல்லால் செய்யப்பட்டு, நெடுமரத்தில் பொருத்தப்பட்டும் இருக்கும்!
    ஆயர்களும், ஆநிரைகளைக் காக்க, வெட்சி/கரந்தைப் பூச்சூடி, கையில் வேல் வைத்து இருப்பார்கள்!
    - "கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்"-ன்னு ஆண்டாள் பாடுவதையும் நோக்கவும்!

    ஆலயத்தில் அழகுக்காகச் சார்த்தப்படும் தங்க வேல், வெள்ளி வேல், திருச்செந்தூர் வைரவேல் - இதெல்லாம் போர்க் கருவி அமைப்பில் வாரா!
    தமிழ்த் திருமகனாம், முருகன் திருக்கை வேல் = எஃகு வேலே!


  4. வேலின் தோற்றம்!

    * வேலின் முகம் = சுடர் இலை போல இருக்காம்!
    * வேலின் மெய் = நீண்ட நெடு வேலாம்!
    சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்;

    சினம்மிகு முருகன் தண் பரங் குன்றத்து

    அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை -
    (அகநானூறு 59 - மருதன் இளநாகனார்)

    * வேலின் தண்டு இலகுவாகவும், தண்டின் உட்புறம் உள்ளீடற்று (hollow) ஆக இருக்கும்!
    * வேலின் முகமோ,  பளு+ கூர்மை உடையதாக இருக்கும்!

    வேல் எறிந்தால், திரும்பித் தானாக வராது! அதெல்லாம் சினிமாவில் தான்! ஆழி (எ) சக்கரம், திரும்பி வரும், ஆஸ்திரேலிய பழங்குடி இனத்தவரான Aborigines பயன்படுத்திய Boomerang போலே! சங்கத் தமிழில், முல்லை நிலக் காட்டுக் குடிகளின் ஆழி பற்றி இன்னொரு நாள் பார்ப்போம்!

  5. வேலும் ஈட்டியும் ஒன்றா??

    வேலும் ஈட்டியும் வேறு வேறு ஆயுதங்கள்!
    * வேலின் முகம் = அகன்று விரிந்து இருக்கும்! ஈட்டியின் முகம் அகலாது குறுகி இருக்கும்!
    * வேலின் கீழ் நுனி = வட்டமாக முடியும்! ஈட்டியோ நேர்க்கோட்டில் முடியும்!

    வேல் = பெருமை மிக்கது! மன்னர்களும், படைத் தலைவர்களுமே பெரும்பாலும் ஏந்துவார்கள்!
    ஈட்டி = அனைத்து போர் வீரர்களிடமும் உண்டு!

    வேல் எறிவதும், சிறந்த பகைவர்களை நோக்கியே! எல்லார் மேலேயும் வேல் எறிந்து விடுவதில்லை!
    கான முயல் எய்த அம்பினில் - யானை

    பிழைத்த வேல் ஏந்தல் இனிது
    என்ற குறளே இதற்குச் சான்று! முயலுக்கு அம்பு, யானைக்கு வேல்!

  6. வேலின் சிறப்புப் பெயர்கள்:

    கூர் வேல், நெடு வேல், சுடர் வேல், வீர வேல், வெற்றி வேல்...ன்னு வேலுக்குத் தான் எத்தனை எத்தனை அடைமொழிகள்!

    வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
    தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி

    குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்

    துளைத்த வேல் உண்டே துணை

    -
    இது திருமுருகாற்றுப்படையை ஒட்டி எழுந்த பின்னாளைய வெண்பா!


    வேல் வழிபாடு:

    சங்க காலத்தில் வேல் வழிபாடு எப்படி இருந்தது?
    வேலன் வெறியாட்டு
    , வெறி அயர்தல்-ன்னு சொல்லுவாய்ங்க!
    இதில்...."வேல்" ஒரு முக்கியமான பூசைப் பொருள்!

    வெண்மணல் பரப்பி, செந்நெல் தூவி,
    பந்தல் இட்டு, பூ பல பெய்து

    பசுந்தழை, காந்தள், பூக்குலை கட்டி
    -ன்னு அலங்கரித்து (அணி செய்து), வேலை மையமாக நட்டு வழிபடுதல் வழக்கம்!

    பொய்யா மரபின் ஊர்முது வேலன்
    கழங்கு மெய்ப் படுத்துக் கன்னம் தூக்கி
    முருகு என மொழியும் ஆயின்
    கெழுதகை கொல்? இவள் அணங்கி யோற்கே -
    (ஐங்குறுநூறு, கபிலர்)
     

    * அதாச்சும் தலைவியின் காதல் நோய் இன்னதென்று அறியாத தாய்,
    தலைவியின் மேல் ஏதோ பித்து/சூர் இறங்கி விட்டதாக நினைத்து,
    அதைப் போக்க முருகனுக்கு எடுக்கும் பூசை! இதை ஒரு ஆண் (வேலன்) நிகழ்த்துவான்!

    * (அல்லது) தலைவியே, தன் காதலனைச் சேர முடியாது,
    அவன் ஒதுக்கியதால் அவனையே எண்ணியெண்ணி அன்பு மிகுந்து போய்,
    முருகனை முன்னிட்டு ஆடிய வெறிக் கூத்து!

    இதை ஆண்கள்-பெண்கள், இருவருமே வேல் பிடித்து ஆடின செய்திகள், சங்கத் தமிழில் உள்ளன!
    * ஆண் ஆடும் போது = பூசை/குறி! கிடா வெட்டிப் பலி குடுத்து, அதன் குருதியை, அரிசியொடு கலந்து தூவுதல்
    * பேதுற்ற பெண் ஆடும் போது = காதல் வலி! வெறியில் முருகனையே திட்டிப் பூக்களைத் தூவுவாள்!

    தொல்காப்பியரும் இதற்கு ஒரு துறை ஒதுக்கி உள்ளார்!
    முருகனுக்கு உரிய காந்தள் பூச்சூடி ஆடுவது!
    வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்

    வெறியாட்டு அயர்ந்த காந்தளும் -
    (தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல்)

    காதல் வலி மிகுந்து போய் பெண்கள் ஆடிய வேலன் வெறியாட்டு, மிகவும் மனத்தை வலிக்க வைப்பவை!
    ஒரு அழகிய மயில் (மஞ்ஞை), வெறியில் ஆடினா எப்படி இருக்கும்? ஆடி ஆடியே, அழுது அழுது, உள்ளமும் உடலும் தேய்ந்து போனாள்!

    கடியுண் கடவுட்கு இட்ட செழுங்குரல் 
    அறியாதுண்ட மஞ்ஞை ஆடு மகள் 

    வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கு

    சூர் மலை நாடன் கேண்மை

    நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே - (
    குறுந்தொகை 105, நக்கீரர்)

    ஒரு கட்டத்தில், காதல் வலியால், முருகனையே "மடையா"-ன்னு திட்டும் தலைவியின் பெருத்த ஆற்றாமையைக் காணலாம்!

    வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
    கடவுள் ஆயினும் ஆக
    மடவை மன்ற வாழிய முருகே! - (நற்றிணை 34)

    "காதலன் திடீரென்று என்னை ஒதுக்கும் போக்கில் துடிச்சிப் போய் நான் வாழுறேன்!
    இது அறியாமல், வேலன் வெறியாட்டை என் தாய் நடத்துறா!
    உனக்காவது தெரிய வேணாமா முருகவேளே? இந்தப் பூசைக்கு நீயுமா உடந்தை?

    நீ கடவுளே ஆனாலும் ஆகுக! அது பற்றிக் கவலையில்லை!
    மடவை முருகா (மடப்பயலே முருகா)...
    நீ நல்லா இருடா! = மடவை மன்ற வாழிய முருகே!!" -ன்னு...
    இவள்....முருகனிடம் திட்டியும் + கெஞ்சியும் + கண்ணீரால் முருகனைக் குளிப்பாட்டும் காட்சி...

    இதை நினைக்கும் போதெல்லாம் என்னையும் அறியாமல், கண்ணில் தண்ணி தளும்பி நிக்கும்!




    அவன் வேடத்தில் அவள்!
    முருகன் வேடத்தில், வேலொடு வள்ளி!


    இப்படி, பண்டைத் தமிழ்ச் சமூகம், "வேலை" முன்னிறுத்தி, எப்படித் தன் மரபுகளை ஒத்து வாழ்ந்தது என்று அறிந்தோம்!
    இன்றும், தமிழ்க் குடியினர்/கிராமத்தவர்கள், இந்த வேல் வழிபாட்டையே அதிகம் போற்றுகிறார்கள்!

    எங்கள் கிராமத்தில் முருகனுக்கென்று தனித்த ஆலயம் கிடையாது! வாழைப்பந்தல் பச்சையம்மன் ஆலயம் தான்! காவடிப் பூசை, பெருமாள் கோயில் திட்டில் தான் வைக்கப்படும்! அதில் வேலையே நட்டு பூசிப்பார்கள்!
    பின்னர் ஆயா காவடிச் சிந்து முதலடியை எடுத்துக் குடுக்க, பூசையில் வைத்த காவடியை ஒவ்வொருவரும் தூக்குவது வழக்கம்!

    சிலப்பதிகாரத்தில் வேல்:

    பத்துப்பாட்டு நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் வேலைப் பற்றிச் சிறிதளவே சொன்னாலும், அதை ஈடுகட்டவோ என்னவோ....

    சிலம்பில், இளங்கோவடிகள், வேலின் பெருமையை மிக அழகாக, குன்றக் குரவையில் விவரிப்பார்!

    வேல் கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ!

    சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்! -ன்னு முருக பக்தரான நக்கீரர், இரண்டு அடிகளே பாட...

    இரண்டே அடிகளா? இளங்கோ அடிகளா?

    - என்று வேல் விருத்தமாய், அன்றே பாடினார் சமணச் செல்வரான இளங்கோ! இளங்கோவின் பண்பட்ட உள்ளம் தான் என்னே!!

    சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும், 
    ஏரகமும், நீங்கா இறைவன் கை "வேல்" அன்றே!
    -ன்னு தொடங்கும் இளங்கோ, வரிசையாக, "வேல் வேல்"-ன்னு ஒரு வேல் விருத்தத்தை, அருணகிரிக்கும் முன்பே பாடிவிட்டுச் செல்கிறார்!

    சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே!
    குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே!

    இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல் அன்றே!
    திரு முலைப் பால் உண்டான் திருக் கை வேல் அன்றே!

    -ன்னு சிலப்பதிகார வேல் வருணனையில், இசையும் கலந்து, ’பாட்டு மடை’யாகப் பெருகி வரும்!

    வேல் பற்றிய பக்தி-இலக்கிய நூல்கள்:

    பின்னாளில், வேல் பற்றிய பல பக்தி-இலக்கிய நூல்கள் வந்துள்ளன!

    * இதற்கு முக்கிய காரணம் = அருணகிரி!

    தொலைந்து போன வேல் வழிபாடு, தமிழ் வழி வழிபாட்டை மீண்டும் முன்னிறுத்த, அருணகிரி செய்த முயற்சிகள் சொல்லில் அடங்கா!

    ஆலயங்களில், வடமொழி அதிகம் புழங்கத் துவங்கி விட்ட காலத்தில், வடமொழியைப் பகைத்துக் கொள்ள விரும்பாது, அதனொடு கூடவே சென்று, சிறுகச் சிறுகத் தமிழை நுழைக்க, அவர் செய்த முயற்சிகள் பலப்பல!

    இதற்கு, அவருக்கு முக்கிய ஊக்க சக்தி = இன்னொரு தமிழ்த் தெய்வமான திருமாலின் ஆலயங்களில், சில நூற்றாண்டுக்கு முன்பு தான், தமிழ் பரவலாகத் தழைக்கத் தொடங்கியிருந்த புரட்சியைக் கண்டார்!

    வேதங்களுக்கு நிகராக ஆழ்வார் அருளிச் செயல் கருவறைகளவேதங்களுக்கு நிகராக ஆழ்வார் அருளிச் செயல் கருவறைகளில் ஓதுதல்!

    உற்சவங்களில் வேதங்களைப் பின்னுக்குத் தள்ளி, ஆழ்வார்களின் தமிழை முன்னே ஓதிச் செல்ல, இறைவனே தமிழின் பின்னால் வரும் காட்சிகளைக் கண்ட அருணகிரி......

    அதிலே மனம் பறிகொடுத்து, திருமால் "வண்டமிழ் பயில்வார் பின்னே திரிகின்றவன்"-ன்னு பாடினார்!

    இதே நிலை முருகன் ஆலயங்களிலும் வர வேண்டி, அவர் செய்த ஆரம்ப வேலைகள் பலப்பல!

    அதில் ஒன்று தான், வேல் வழிபாடு!
    * வேல் வகுப்பு
    * வேல் விருத்தம்
    இவை வேல் வழிபாட்டை முன்னிறுத்த அருணகிரியார் செய்த பனுவல்கள்!

    தனித்து வழி நடக்கும் என 
    திடத்தும் ஒரு வலத்தும் இரு 

    புறத்து அருகு அடுத்து இரவு

    பகல் துணை அதாகும் 

    திருத்தணியில் உதித்தருளும் 
    ஒருத்தன்மலை விருத்தன் என 

    உளத்தில் உறை கருத்தன் மயில்

    நடத்து குகன் வேலே
     !!
    (- வேல் வகுப்பு, அருணகிரிநாதர்)

    அந்த வழியில் பின்னர் பாம்பன் சுவாமிகளும், வள்ளிமலை சுவாமிகளும், "வேல் மாறல்", "வேற் பதிகம்" போன்ற பனுவல்களை, வேலின் மீது செய்துள்ளனர்!

    பின்னால் வந்த பல கவிஞர்களும், வேலைப் போற்றிப் பாடியுள்ளார்கள்! பாரதியாரின் வேலன் பாட்டு, அதில் மிகவும் பிரபலம்!
    வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை வேலவா!-அங்கோர் 

    வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடியானது, வேலவா!!

    சிக்கல் சிங்காரவேலன் வேல் வாங்கும் காட்சி:

    முருகன் அன்னையிடம் வேல் வாங்கும் காட்சியை, சிக்கல் சிங்காரவேலர் சன்னிதியில், ஒவ்வொரு ஆண்டும் நடித்துக் காட்டுவது வழக்கம்!

    அப்போது சிங்காரவேலர் திருமேனி, வேலின் கொதியால் வியர்க்கிறது என்று சொல்வாரும் உளர்! முருகன் திருமேனியைத் துடைத்து எடுப்பதும் வழக்கம்!

    எந்தத் திருமுழுக்கும் (அபிஷேகம்) இல்லாமலேயே, ஒத்தி எடுக்கும் துணிகள், ஈரமாய் நனைவதைக் காணலாம் என்று கூறுவர்!

    முருகன் வேறு, வேல் வேறு அல்ல!

    வேலுக்கு = உடம்பிடித் தெய்வம்-ன்னே பேரு!
    = உடன் பிடித் தெய்வம்!
    முருகனைப் போலவே வேலுக்கும் ஆறு முகம் உண்டு! ஆறு படைகள் உண்டு! பார்த்து இருக்கீங்களா?

    இன்னிக்கு பார்த்தீங்கன்னா....பல படைவீடுகளிலும் முருகன், தன் கையில் வேல் ஏந்தியே இருக்க மாட்டான்! அவன் தோளிலே தனியாக, சார்த்தியே வைத்திருப்பார்கள்!

    ஏனோ, அதைப் பார்க்கும் போதெல்லாம்....நானே அவன் தோளில் சாய்ந்து கொள்வது போல ஒரு உணர்வு எனக்கு!

    என்னவனைப் போலவே, உயரமும் - நெடிதும் - அழகும் - அறிவுமான = வேல்!
    தழுவ இனியது வேல்!

    அவனைத் தழுவும் போது நழுவினால், போடா-ன்னு அவன் அந்தரங்க வேலைத் தழுவிக் கொள்வதில், இன்னும் சுகம்!:)

    வேல் வேறு, முருகன் வேறல்ல!
    வேலே = முருகன்! முருகனே = வேல்!

    முந்து முந்து.....முருகவேள் என்னுள் முருகவேலாய் முந்து!!

    வெஞ்சமரில் அஞ்சேல் என "வேல்" தோன்றும்...முருகா என்று ஓதுவார் முன்!


    உசாத் துணை (References)

    1. தமிழ் இலக்கிய வரலாறு - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
    2. முருகன் (அ) அழகு - திரு.வி.க
    3. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை (கழக வெளியீடு)
    4. சிலப்பதிகாரம் - நாவலர் ந.மு.வேங்கிடசாமி நாட்டார்
    5. வேல் விருத்தம், வேல் வகுப்பு - அருணகிரிநாதர் & Reforms of Arunagiri - Pongi Publications, Vallimalai
    6. Tamil Traditions on Murugan - Dr. Kamil Zvelebil

    (மாதவிப் பந்தல், கே.ஆர்.எஸ் அளிக்கும் ஆய்வக் கட்டுரை)

     
 தைப்பூசம்: சங்கத் தமிழில் வேல் வழிபாடு
Lord Skanda-Murugan