![]() |
||||
| ||||
தைப்பூச நன்னாளின் சிறப்பு
எழுதியவர் உமா பாலசுப்பிரமணியன்
English translation: "The Significance of Thai Pusam" தை மாதம் பூச நட்சத்திரத்தில் வரும் பவுர்ணமிதினம் ஒரு சிறந்த நாளாகும். இத் தினத்தில் பல நல்ல விஷயங்கள் அமைந்துள்ளன. இந் நாளில்தான் உலகம் தோன்றியது என ஒருசாரார் கூறுவர். சிவபெருமானும் உமாதேவியாரும் தில்லையில் வியாக்ரபாதருக்கும், பதஞ்சலிக்கும் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் தந்த நாளும் இந்நாளே.தில்லை வாழ் அந்தணர்கட்கு, இருக்க இடமும், மேரு மலை போன்ற எழுநிலை மாளிகைகளையும், தேர் வரிசைகள், திருக்கோயில் கோபுரங்கள், கனகசபை முதலிய யாவும் செய்வித்து அந்தணர்கள் மூலம் திரு விழாக்களையும் நடத்தி வைத்தான் இரணியவர்மன் என்னும் மன்னன்.“தாது மாமலர் முடியாலே “ என்று தொடங்கும் திருப்புகழில், வீறுசேர் வரையரசாய் மேவிய மேரு மால்வரை என நீள் கோபுர மேலை வாயிலின் மயில் மீதேறிய பெருமாளே...மேற்கண்ட செய்தி தெரிகிறது.
தில்லையில் திருக்கூத்துமன்னன் இறைவன் திருக்கூத்தை தரிசிக்க விரும்பி, கௌடதேச அரசாட்சியை தம்பியிடம் கொடுத்துவிட்டு, பின் தில்லையிலேயே காத்திருந்தான். அதை அறிந்த வியாக்ரபாதர் இவனுக்கு புலிக்கொடியையும் தந்து சோழ மன்னனாக்கி வைத்தார்.
இதையே அருணகிரியும். “மநு நெறியுடன் வளர் சோணாடர் கோன் “ என இவரைக் குறிக்கிறார். இப்படிப்பட்ட, சூரியனின் குமாரனான மநு வழி வந்த ஐந்தாவது மநுவிற்குப் பிறந்த இரணிய வர்மன், வியாக்ரபாதருடனும், பதஞ்சலியுடனும், தேவர்களுடன் கூடி தில்லையில் திருக்கூத்தை தரிசித்தார்.இதைத்தான் அருணகிரிநாதர் “அவகுண“ எனும் திருப்புகழில்“மவுலியில் அழகிய பாதாள லோகனும் மநு நெறியுடன் வளர் சோணாடர் கோனுடன். உம்பர்சேரும் மகபதி புகழ் புலியூர் வாழும் நாயகர்“ என்கிறார்.இங்ஙனம் இவர்கள் யாவருக்கும் திருக்கூத்தைக் காட்டிய நாள் தைப் பூச நாளாகும். அருணகிரியாருக்கு நடராஜரே முருகனாகவும், முருகனே நடராஜராகவும் சற்றும் பேதமின்றி தரிசனம் தரப்பட்டது என்று நோக்கிடில் நாம் போற்றுதலின்றி வேறு என்ன பேறு உள்ளது! தாரகாசுரன் வதம் முருகனை வழிபடும் ஆலயங்கள் யாவிலும் தைப் பூசம் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. தந்தையாகிய சிவபிரானிடமிருந்து பதினோரு ஆயுதங்களும், தாய் உமையிடமிருந்து சக்தி வேலையும் பெற்று, தேவர்களுக்கு நீங்காத துயர் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை வென்று வீழ்த்திய நாளும் தைப் பூசமேயாகும். “தார காசுரன் சரிந்து வீழ வேருடன் பறிந்து சாதி பூதரங் குலுங்க முதுமீனச் சாக ரோதையங்கு ழம்பி நீடு தீகொளுந்த அன்று தாரை வேல் தொடும் கடம்ப !" என அருணகிரியார் திருப்புகழில் தாரகாசுரனை வீழ்த்தியது பற்றிக் கூறுகிறார். வேல்கொண்டு அசுரர்களை முருகன் அழித்தார் என்பதின் தத்துவத்தையும், கருத்தையும் யாவரும் அறிந்துகொள்ள வேண்டும். நம் மனத்திலே பல அசுரர்கள் குடி கொண்டு தகாத செயல்களைச் செய்கின்றனர். அதனால் சங்கிலித் தொடர்போல் நாம் மேலும் மேலும் பல வேண்டாத செயல்களைச் செய்து பாவத்துக்குள்ளாகின்றோம். முருகன் என்னும் அருளாளனை வழி பட்டால் நம் உள்ளத்தில் எழும் அழுக்குகளையும், அவலங்களையும், நமக்கு ஏற்படும் மிடிகளையும் கவலைகளையும், வினைகளையும் மற்ற எல்லா தகாத செயல்களையும் ஒரு சேர தன் ஒளி பொருந்திய கூரிய வேலால் தகர்த்தெறிவான் என்பது திண்ணம். உமையவள் முருகனுக்குக் கொடுத்த சாபம் ஒருசமயம் பிரமனை முருகன் சந்திக்க நேர்ந்த பொழுது, பிரமன் முருகன் சிறுவன்தானே என வணங்காது நிற்க, முருகனும் அவரை யார் என்று கேட்க, நான்முகனும் தான் வேதத்திற்கு அதிபதி என்று சொன்னார்.
![]() “ஓமென உறைக்கும் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ போமெனில் அதனையின்னே புகலென இறைவன் சொற்றான்" முற்றொருங் குணரும் ஆதி முதல்வ கேள் உலகமெல்லாம். பெற்றிடும் அவட்கு நீ முன் பிறருணராத வாற்றல் சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாருங்கேட்ப இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பதல்லால் என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின் என்னத் தன்றிருச்செவியை நல்கச் சண்முகன் குடிலை யென்னும் ஒன்றொறு பதத்தின் உண்மை உரைத்தனன்...(கந்த புராணம்) (வண்டாக இருந்து உணர்ந்தார் என்பதைக் குறிக்கிறது) தந்தையார் முருகனிடம் “ உனக்கு அப்பொருள் கூற வருமோ? எனக் கேட்ட போழ்து, தம்மாற் கூற முடியும் என்றும், ஒருமுறை தந்தையான சிவபிரான் ரகசியமாகத் தாய் உமையவளுக்கு உபதேசித்த பொழுது, தாம் தாயின் கூந்தலில் ஒரு வண்டாக இருந்து அந்த ரகசிய உபதேசத்தை உணர்ந்ததாகக் கூறினார் வடிவேலன். இதை அறிந்த பார்வதியும் குழந்தையாயினும் ரகசியத்தைக் கேட்டதனால் சாபத்திற்கு உள்ளாவான் எனக் கூறியதன் பேரில், முருகனும் சாபம் தீரத் தவம் இருந்தார். அதனால் மகிழ்ந்த சிவபிரானும், பார்வதியும் கோபம் தணிந்து, காட்சி கொடுத்து சாபத்தை தவிர்த்து அருளினர். அவ்வாறு செய்த நாளும் தைப் பூசமே. முருகனின் அருள் பெற்ற திரு அருட்ப்ரகாச வள்ளலார் சிதம்பரம் ராமலிங்க அடிகளார் தை மாதம் பூச நட்சத்திரம், பௌர்ணமி அன்று தான் ஜோதி வடிவில் இருந்த இறைவனுடன் கலந்தார். யாவற்றுக்கும் மேலாக சிவபெருமான் இத் தினத்தில் தான் மும் மலங்களாகிய திரிபுரத்தை சிரித்தே அழித்தார். அதை விரிவாகப் பார்க்கலாம். பிரமன் கொடுத்த வரம் ஒரு கால கட்டத்தில் தாரகாக்ஷன், வித்யுன்மாலி, கமலாக்ஷன் என்ற பெயர்களுடைய மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் பிரம்ம தேவனைக் குறித்து தவம் இருந்து, சிரஞ்சீவித் தன்மை வேண்டினர். ஆனால் பிரம்மனோ அது சர்வேஸ்வரனாகிய சிவபிரானுக்கு மட்டுமே உரித்தது எனக் கூறி, வேறு ஏதாவது கேட்கச் சொன்னார். அதன்படி மூவரும் விண், மண், நடு ஆகிய மூன்று இடங்களிலும் சஞ்சாரம் செய்யக் கூடிய, பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களினால் ஆன அழிவில்லாக் கோட்டைகளைக் கேட்டனர். "தை மாதத்தின் பூச நட்சத்திரத்தின் போது, முப்புரங்களும் ஒரே இடத்திற்கு, ஒரு கணத்தில் ஒரு சிறிய பகுதி நேரத்திற்கு வரும்போது சிவனால் மட்டும் அழிக்கக் கூடியதான கோட்டைகளை வேண்டுமானால் தருகிறேன் " எனக் கூறி, பிரம்மனும் வரம் கொடுத்தார். மயன் மூலமாக நகரம் நிர்மாணிக்கப் பட்டது.அவற்றுடன் சகலவிதமான போகங்களும் செல்வங்களும் அளித்து, அசுரர்களுக்கு மிகுந்த வீரமும் தைரியமும் கிடைக்க பிரம்மா அருளினார். யாவையும் நிர்மாணித்த மயன் அசுரர்களுக்கு நல்ல புத்திமதிகளையும் செய்தார். "தேவர்களுக்குத் தேவனான சிவனை சிவலிங்க ரூபமாக வழிபட்டு, இறைவனின் அன்பைப் பெறுதல் வேண்டும்.வழிபட்டவர்களுக்கு நன்மையும், எதிரிகளுக்கு அழிவையும் தருபவன் சிவன் ஆவான்," எனக் கூறி பூஜைக்குரிய சிவலிங்கங்களையும் அசுரர்களுக்குக் கொடுத்தார். அசுரர்களும் நியம நிஷ்டைகளுடன் சிவ பூஜை செய்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு தேவர்களையும், தேவிகளையும் அவர்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு, முழு உலகங்களுக்கும் அந்தப் பறக்கும் கோட்டைகளை இறக்கி, அமர்ந்து, அங்கிருந்தவர்களை நொறுக்கி அழித்து, கொடுமை செய்தனர்.இதனால் வருத்தமுற்ற விஷ்ணு, பிரம்மா, மற்றும் தேவர்கள் முதலியோர் யாவரும் மேரு மலையில் கூடி, யாகம் செய்வதற்கு முடிவெடுத்தனர். யாகத்தினின்றும் வெளிவந்த பூதங்கள் யாவும், அசுரர்களை அழிக்க முடியாது அழிந்து போயின. தங்களை அழிக்க பூதங்களை ஏவியதால் கோபமடைந்த அசுரர்கள், தேவர்கள் யாவரையும் மேலும் மேலும் துன்புறுத்தினர். அதனால் தேவர்கள் பயந்து இங்குமங்கும் அலைந்து ஓடி ஒளியும் நிலைமைக்கு ஆளாயினர். மீண்டும் திரிபுராதியர்கள் நியம நிஷ்டையுடன் செய்த சிவபூஜையினால்தான் வலுவாக இருந்த அவர்களை தோற்கடிக்க முடியவில்லை என எண்ணிய விஷ்ணுவும், பிரம்மாவும், அவர்களை சிவபூஜை செய்யாதிருக்க ஏதாவது தந்திரம் செய்ய எண்ணி, விஷ்ணு புத்தராகவும், பிரமன் சீடனாகவும் அவதரித்து, அசுரர்களுக்கு அநாசார போதனைகளைச் செய்து, அவர்களைத் தீவிர சிவ உபாசனைகளினின்றும் வழுவிடச் செய்தனர். மேலும் புத்தரே பெரும் கடவுள் என நம்பச் செய்து, சிவ வழிபாட்டுக்குரிய சாதனங்கள் யாவையும் அவர்களை விட்டு நீங்கச் செய்து, ருத்திராட்சம், திருநீறு ரட்சைகள் யாவற்றையும் களையச் செய்து, தம் தந்திரத்தில் வெற்றி பெற்றனர். ஆனால் திரிபுராதி சகோதரர்கள் மட்டும் இந்தப் புரட்டுக்கு மயங்காது, சிவ பூஜை செய்வதில் தீவிரமாக இருந்தனர். இதைக் கண்டு திடுக்குற்ற நாராயணனும், மற்ற தேவர்களும் மானசரோவர் ஏரிக்குச் சென்று, கழுத்தளவு நீரில் நின்று, ஸ்ரீ ருத்ர மந்திரத்தை ஜெபித்தனர். அதைக் கண்ணுற்ற சிவபிரான் அவர்கள் எதிரில் தோன்றி, "விரஜா ஹோமம் செய்து பெற்ற திருநீறை அணிந்து, பாசு பத விரதத்தை மேற்கொண்டால், நினைத்தது நிறைவேறும்" எனக் கூறி அருளினார். அப்பொழுது குழந்தை முருகன் தன் தந்தை மடிமீது ஆனந்தத் தாண்டவம் ஆடினார். சிவபிரான் கூறியபடியே அவர்கள் பாசு பத விரதத்தை மேற்கொண்டனர். யுத்தத்துக்கு வேண்டிய ஆயுதங்களையும், தேர், வில், மற்ற அஸ்திரங்கள் போன்றவைகளையும் நந்தி தேவர் மூலமாக சிவபிரான் தேவர்களுக்கு அனுப்பி வைத்தார். பின் தேவர்களும் யுத்தத்திற்கு ஆயத்தமாயினர். தேரின் அற்புதம் திரிபுரம் எரித்தது ![]() "ஆட்டி வடவரை வாட்டி யரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி" |