Lord Skanda-Murugan
 

மொரீஷியஸில் முருக வழிபாடு

மௌருஷியஸ்சின்  மலைப் பகுதி
மௌருஷியஸ்சின் மலைப் பகுதி

மூலக் கட்டுரை ஆங்கிலத்தில் கேசவன் சொர்ணம்

Original article In English: "The Murukan Cult in Mauritius: Essence of Tamil Ethnic Identity" by Khesaven Sornum

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

முன்னுரை

தொன்மைக் காலம் முட்பட்டே அழகின் உருவானவர், ஞானத்தைத் தருபவர் மற்றும் எண்ணற்ற சக்தி மிக்கவர் என தமிழ் இனத்தவரால் போற்றி வணங்கப்பட்டு வருபவர் 'முருகக் கடவுள்'.

பிரபலமான தமிழ் மொழி நூலான தொல்காப்பியத்தில் அவரை 'சீயோன்' எனவும், பல்வேறு ஸ்துதிகள் முலம் அவர் பக்தர்களால் ஆராதிக்கப்படுபவர் என்றும் குறிப்பிடுகின்றது. உலகில் பல்வேறு இடங்களிலும் வசிக்கும் தமிழர்களால் போற்றி வணங்குபவர் முருகப் பெருமான். 18 ஆம் நூற்றhண்டில் 'பிரான்ஸ்' நாட்டவர் 'மொரீஷியஸ்' தீவை தங்கள் வசம் எடுத்தக் கொண்ட பொழுது கைவினைக் கலைஞர்களாகவும், வியாபாரிகளுமாக சென்று அங்கு குடியேறியவர்களே அங்குள்ள தமிழர்கள்.

அவர்களே பல வழிபாட்டுத் தலங்களைக் அங்கு கட்டினார்கள் . அதன் பின்னர் குறிப்பிட்டக் கால தொழில் ஒப்பந்தத்தின்படி சீனா, ஆப்ரிக்கா, மற்றும் மடகாஸ்கர் போன்ற இடங்களில் இருந்தும் அங்கு பணிபுரிய வந்த பல்வேறு இனத்தவர்களுடன் அவர்கள் சேர்ந்து இருந்தாலும், இந்தியாவில் இருந்து சென்ற தமிழர்கள் அங்கு சென்ற பின்னர் கூட தங்களுடைய கலாச்சாரங்களை மாற்றிக் கொள்ளாமல் அங்கு வாழ்ந்து வந்தனர்.

அங்கு வந்த தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற கலாச்சாரங்களை தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டு தாம் தனித் தன்மை வாய்ந்த தமிழ் இன மக்கள் என்பதை தங்களுடைய செயல்பாடுகளில் காட்டிக் கொண்டு இருந்தபடி வாழ்ந்து கொண்டு இருந்தனர். மொரிஷியஸ் தீவில் இருந்த மற்ற இன மக்கள் அங்கு இருந்த தமிழ் இன மக்களை தமிழர்கள் என்று கருதாமல் அவர்களை முருக பக்தர்கள் என்ற கோணத்தில் பார்க்கின்றனர்.

நாமக்கல் கவிஞரான இராமலிங்கப் பிள்]ள எழுதினார் 'தமிழர்கள் என்ற தனி இனம் ஒன்று கிடையாது, ஆனால் அவர்கள் தனித் தன்மை வாய்ந்தவர்கள்' என்று கூறியதில் வியப்பு இல்லை.

map of Mauritius

மானில அளவில் 'திமிதி', 'கன்ஜி' மற்றும் 'கோவிந்தன்' (Tīmiti, Kanji, Gōvinthan) போன்ற பலவிதமான விழாக்கள் அதிக அளவில் நடைபெற்றாலும், 'காவடி' எடுத்து நடத்தப்படும் 'தைபூசம்' எனப்படும் தேசிய அளவில் நடைபெறும் விழாவே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அது மட்டும் தேசிய அளவில் நடைபெறும் இந்த விழாவின் மூலம் முன்னர் தமிழர்களை சிறு கூட்டம் என கருதிய எண்ணத்தை மாற்றிக் கொண்டு மிகவும் பிரபலமான இனம் என எண்ண வைத்து உள்ளது. தமிழர்களின் நிலை மொருஷியஸ்சில் எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கின்றது என்பதை கோலாகலமாக தேசிய அளவில் கொண்டாடப்படும் 'காவடி' எடுத்து வணங்கும் விழாவான 'தைபூச' பண்டிகை தினத்தை ஐம்பது ஆண்டுகளாக தேசிய விடுமுறை நாளாக அறிவித்து இருப்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு குறிப்பிட்ட இனம் என்பது அந்த மக்களின் கலாச்சாரம் மற்றும் அவர்களின் மதசார்ப்புக் கொள்கையைக் குறித்தே அமைகின்றது. அங்கு நடக்கும் விழாக்களின் தன்மையைப் பார்த்தாலே மொரிஷியஸ் நாட்டில் முருகன் பக்தி இயக்கம் எந்த அளவு அங்குள்ள மக்களின் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்து உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். எது எப்படியோ அங்கு தமிழர்களால் நடத்தப்படும் அனைத்து அனைத்து விழாக்களிலும் தமிழ் மொழியின் உபயோகமே பிரதான பங்கை பெறுகிறது.

மௌருஷியஸ்சின் ஆன்மீக பூங்காவில் எட்டு அடி உயரச் சிலை
மௌருஷியஸ்சின் ஆன்மீக பூங்காவில் எட்டு அடி உயரச் சிலை

மொரிஷியஸ்ஸில் முருகன் பக்தி இயக்கம் தோன்றிய வரலாறு

முதன் முதலாக 'பிரெஞ்சு' நாட்டினர் அந்தத் தீவை ஆண்டு வந்த பொழுதுதான் அங்கு கைவினைத் தொழிலாளர்களாகவும், வியாபாரிகளாகவும் வந்த தமிழக மக்களால் முருகன் பக்தி இயக்கத்தின் விதை போடப்பட்டது. அவர்கள் தங்களுடைய மதத்தில் இருந்த ஆழமான நம்பிக்கையின் காரணமாக கோவில்களைக் (ஆலயம்) கட்டலாயினர். ஆகம முறைப்படி சில ஆலயங்கள் அமைக்கப்பட்டன. 'போர்ட் லுயீஸ்' (Port Louis) என்ற இடத்தில் உள்ள 'சொக்கலிங்கம் மீனாட்சி அம்மன் கோவில்' அதற்கு ஒரு உதாரணம். முருகன் ஆலயங்களில் மிகப் பழமையானது 'கிளமன்சியா' (Clemencia) என்ற இடத்தில் உள்ள 'தண்டாயுதபாணி கோவில்' ஆகும்.

இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் தொழில் ஒப்பந்தத்தின்படி அங்கு வந்த தொழிலாளிகள் (சக்கரை) கரும்பு தோட்டங்களில் வேலையில் அமர்ந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபட அந்த இடங்களில் அவர்களால் கோவில்கள் அமைக்கப்பட்டன. அதற்கு பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த முதலாளிகள் ஒத்துழைப்புத் தந்தனர். அவர்கள் அங்கு வந்த தொழிலாளிகள் கோவில்களை அமைக்க பொருளாதார உதவிகள் மட்டும் அல்ல இடமும் தந்து அறுவடைக்கு முன் அந்த ஆலய விழாக்களை நடக்தவும் ஏற்பாடுகள் செய்து தந்தனர்.

1960 ஆம் ஆண்டிலேயே 110 க்கும் மேற்பட்ட கோவில்கள் தோன்றி இருந்தன. 'மொரிஷியஸ்' நாட்டில் இருந்த தமிழ் ஆலய சங்கத்துடன் பதிவு செய்து கொண்டு அதனுடன் இணைந்து இருந்த மற்ற கோவில்களுக்கும் மானியத் தொகைகளை அரசாங்கம் தந்தது. இப்பொழுது உள்ள கோவில்களில் முப்பது ஆலயங்களில் முருகனே பிரதான தெய்வமாக வணங்கப்பட்டுக் கொண்டு இருக்கையில் மற்ற சில கோவில்களில் 'அம்மனும்' 'சிவனும்' முக்கிய தெய்வங்களாக வழிபடப்பட்டுக் கொண்டு இருந்தாலும் அங்கும் முருகனுக்கு சன்னதிகள் உள்ளன. ஆகவே அனைத்து கோவில்களிலும் முருகனுக்குக் காவடி எடுக்கும் திருவிழா நடைபெறுகின்றது.

முருக பக்தி இயக்கத்தில் தீவீரமாக பக்தி கொண்டிருந்த 'இராஜரத்தின முதலியார்' என்பவர் 1874 ஆம் ஆண்டிலேயே 'போர்ட் லுயீஸ்' நகரில் தன் குழுவினருடன் காவடி யாத்திரை செல்ல அனுமதிக்கும்படி விண்ணப்பித்து இருந்தார்.

அது முதல் மெல்ல மெல்ல முருகன் இயக்கமும் வளர்ந்து வந்தது. அங்குள்ள கோவில்களில் பூஜைகளை செய்ய தமிழ்நாட்டில் இருந்து குறிப்பிட்ட கால ஒப்பந்த அடிப்படையில் அர்சகர்கள் அழைத்து வரப்பட்ட போதிலும் உள்ளுரில் இருந்த பல இளைஞர்கள் அந்த கோவில்களில் அர்சகர்களாகப் பணிபுரிய ஆர்வமுடன் இருந்தார்கள். கடந்த இருபத்தி ஐந்து வருடங்களாக தை பூசத் திருவிழாவைத் தவிற வேறு பல உற்சவங்களும் அங்கு உள்ள கோவில்களில் நடைபெறுகின்றன. அவற்றில் 'பங்குனி உத்திரம்', 'சித்திரா பௌர்ணமி', 'ஆடிக் கிருத்திகை', 'ஆவணி மூலம்', 'வைகாசி விசாகம்', 'கந்த சஷ்டி', 'கார்த்திகை தீபம்' போன்றவை அடங்கும்.

'திருப்புகழ்' பாடல்கள் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றது. 'திராவிடர்' கால கட்டிடக் கலை அமைப்பில் பல கோவில்கள் புதுப்பிக்கப்படுகின்றன. 'கலியுக வரதன்' என்ற பெயரில் முருகன் பக்தி இயக்கம் வளர்ந்து கொண்டிருக்க, அவர்களின் முயற்சிகளுக்கு பத்திரிகைகளும் தமது தார்மீக ஆதரவை கொடுத்துக் கொண்டு இருக்கும் நிலையில், வரும் காலத்தில் மொரீஷியஸ் தீவு முருகன் பக்தி இயக்கத்தினால் மேலும் பெருமை அடையும் என்பது திண்ணம். 'தமிழ்நாடு' மற்றும் 'இலங்கையில்' இருந்து முன்னரே வந்துள்ள அர்சகர்களும் முதியோர்களும் கூடுமானவரை அனைத்து கோவில்களிலும் ஒரே முறையில் அமைந்த வழிபாட்டு முறையை கொண்டு வர முயலுகின்றனர்.

Piton de la Petite Rivière Noire
மௌருஷியஸ்சின் கரும்புத் தோட்டமும் அதை சுற்றி உள்ள மலைப் பகுதியும்

வழிபாட்டுத் தலங்கள்

அங்கு குடியேறி இருந்த தமிழர்கள் தங்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அனைத்து தமிழர்கள் வீட்டிலும் 'முருகனின் படம்', 'வேல்', மற்றும் 'செம்புக் கலசம்' உள்ளதைக் காணலாம். அவை முருக வழிபாட்டிற்கு தேவையான முக்கிய பண்டங்கள். தாங்கள் வேலை செய்யும் கரும்புத் தோட்டங்களில் அங்கு கிடைக்கும் இடத்திற்கு ஏற்ப சில இடங்களில் பெரியதாகவும் சில இடங்களில் சிறிய அளவிலும் கோவில்களை அங்குள்ள தமிழர்கள் நிறுவி உள்ளனர். மலைகள், காடுகள் போன்ற இடங்களில் இருந்த இயற்கையின் அற்புதங்களில் பண்டையத் தமிழர்கள் மனது மயங்கியது. அதனால் மலைப்புற பகுதிகளில் வசித்தவர்கள் நாளடைவில் மெல்ல குடிபெயர்ந்து கடல் மூலம் பயணம் செய்து வேறு பல இடங்களுக்கும் செல்லத் துவங்கினர். இயற்கையின் அற்புதங்கள் அவர்களை கவர்ந்து இழுத்திட அவையே இறைவன் வாழும் இடம் என எண்ணி இயற்கையையே வழிபடத் துவங்க, அந்த வழிபாடு மெல்ல முருக வழிபாட்டில் அவர்களைக் கொண்டு வந்துவிட்டது.

மொரீஷியஸ்ஸில் அவரவர்கள் இருந்த இடங்களின் சூழ்நிலைக்கு ஏற்ப முருகன் இயக்கத்தின் வழிபாட்டுத் தன்மை அமைந்து இருந்தது. காவடி ஊர்வலங்கள் பொதுவாக நதிக் கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து துவங்குகின்றன. அதனால்தான் பல முருகன் ஆலயங்கள் கரும்பாலைப் பகுதிகளிலும் மலைப் பகுதிகளை ஒட்டியே அமைந்து உள்ளன. அதன் காரணம் முருகன் மலை மீது இருப்பதையே விரும்புகின்றார் என அவர்கள் நம்புவதுதான். 'தொல்காப்பியத்தில்' கூட அவர் உள்ள இடத்தை 'சீவன் மேய மெய்வரை உலகம்' ('Cēyon meya maivarai ulagam') என்று கூறப்பட்டு உள்ளது. 'நக்கீரர்' கூற்றின்படி முருகன் அமர்ந்து உள்ள முக்கியமான இடங்கள் 'படை வீடுகள்' என அழைக்கப்பட்டன. அதைப் பற்றி 'திருமுருகாற்றுப்படையிலும்' குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் ஆறு படைவீடுகளின் பெயர்களும் கூறப்பட்டு உள்ளன. தமிழர்களைப் பொறுத்தவரை முருக வழி பாட்டின் முக்கியத் தலம் 'பழனி மலை'தான் என்று கருதப்படுகின்றது. அதை தமிழர்களின் 'மெக்கா' என்று கூடக் கூறலாம். 'கார்ப்ஸ் டீ கார்டே' (Corpus de Garde) என்ற மலையில் உள்ள முருகன் கோவிலே மொரீஷியஸ் தமிழர்களின் படைவீடாக கருதப்படுகின்றது.

கடவுளே நான் தணிகை மலையைப் பார்த்தது இல்லை பழனி மலையும் பார்த்தது இல்லை அதனால் என்னுள் எற்படும் துயரத்திற்கு அளவே இல்லை ஆகவே என்னைப் பொறுத்த மட்டில் 'கொடரீ போர்னஸ் மலையே ' (Quatre Bornes Malai ) நீ வாழும் படை வீடு

இப்படிப்பட்ட மனம் உருகும் பாடல்கள் 'பீ. திரௌமலே செட்டி' ( P. Tiroumale Chetty) எனும் மொரீஷியஸ் கவிஞர் இயற்றிய 'மொரீஷியஸ் முருகன் பாமாலையில்' உண்டு. இப்படிப்பட்ட எண்ணம் எழக் காரணம் ' நதிகள், மனிதர்கள், மிருகங்கள் மற்றும் மரங்களில் என அனைத்திலும் ஆண்டவன் இருக்கின்றார் என்ற தத்துவத்தை இங்குள்ளவர்கள் நம்புவதினால்தான்' என்று 'வால்யூஸ் வைஸ்லீ' என்ற பத்திரிகையின் ஆசிரியரான 'ஜான் ஸ்பயர்ஸ்' (John Spiers, the English editor of Values Wisely) என்பவர் கூறுகிறார். மொரீஷியஸ் முழுவதிலும் முருக வழிபாடு உண்டு.

Kavadi child, Sri Lanka

வேல்

ஈட்டியைப் போலத் தோற்றம் தரும் 'வேல்' முக்தியைக் கொடுப்பதை காட்டும் ஒரு சின்னம். ஞான சக்தியைக் குறிப்பதும் அதுவே. முருகனின் அவதாரமாக அதை வணங்குவது உண்டு. முருகனைக் குறிக்கும் புனிதச் சின்னம் அது.

காவடிகளில் முன்னிலை வகுப்பது சக்தி வேலாகும். ஊர்வலம் செல்லத் துவங்கும் முன்னர் வேலுக்கு அபிஷேகம் செய்வது முக்கிய சடங்கு. பல முருக பக்தர்கள் தங்கள் உடலில் ஒரு வேலின் உருவத்தைப் பச்சைக் குத்தி இருப்பார்கள். காவடி எடுத்துச் செல்பவர்கள் தங்களுடைய நாக்குகளிலும், உடலின் பல பகுதிகளிலும், கன்னங்களிலும் வெள்ளியிலான சிறிய வேல்களைக் குத்திக் கொண்டு நடப்பது உண்டு. காவடிகளிலும் பால் குடங்களிலும், மற்றும் எலுமிச்சை பழங்களிலும் சிறு வேல் ஒன்றைக் குத்தி அதற்கு மாலைப் போட்டு ஊர்வலத்தில் எடுத்துச் செல்வார்கள். 'வெற்றிவேல் முருகனுக்கு வேல்', 'வெற்றிவேல் முருகனுக்கு வேல்' என்ற கோஷங்களை எழுப்பியபடிச் செல்வார்கள். மொரீஷியஸ்ஸில் வேல் என்ற வார்த்தையை ஆயிரக்கணக்கானவர்கள் தமது பெயர்களில் வைத்திருக்கின்றனர். உதாரணத்திற்கு தங்கவேல், பழனிவேல், குமரவேல், வடிவேல், கதிர்வேல், செந்தில்வேல், மற்றும் வேலன் போன்றப் பெயர்களைக் கூறலாம் . குழந்தைகளுக்கு பெயர் வைக்கையில் முருகன் பெயருக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

பட்டினி விரதம்

தமிழர்கள் கடவுள் பக்தி மிக்கவர்கள் , அந்த உணர்வு முக்கியமாக முருகனின் விழாக்கள் நடைபெறும் சமயத்தில் அதிகம் காணப்படும் . அதன் விளைவாகத்தான் பக்திபூர்வமாக நாள் முழுவதும் உணவு அருந்தாமல், பட்டினி விரதம் இருப்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து , சைவ உணவை மட்டுமே உண்டு ஆலயங்களுக்குச் செல்வார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் முருகனுக்கு உகந்த நாளாக செவ்வாய் கிழமைகளைக் கருதுகின்றனர். ஒவ்ஒரு மாதமும் சஷ்டி மற்றும் கிருத்திகை தினங்களில் பலர் விரதம் அனுசரிக்கின்றனர்.

காவடியில் கலந்து கொள்ளும் முதல் பத்து நாட்களும் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். சைவ உணவு உண்டபடியும் , வெறும் தரையில் படுத்து உறங்கியும், மது அருந்துவதைத் தவிர்த்தும் , பெண்களுடன் உறவு கொள்வது போன்றவற்றையும் தவிர்கின்றனர். வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் உட்கொள்வது, கல்யாணங்கள், சாவு வீடுகளுக்கு செல்லுதல் போன்றவற்றைத் தவிர்பதும் மிக முக்கியம் எனக் கருதுகிறார்கள். அதனால்தான் தை மாதங்களில் மொரீஷியஸ் தீவில் திருமணங்கள் நடைபெறுவது இல்லை . காவடி எடுத்துச் செல்பவர்கள் தங்களுடைய வாய்களை துணியினால் கட்டிக் கொண்டோ அல்லது நாக்குகளில் அலகுகள் குத்திக் கொண்டோ இருக்க வேண்டும். சிலர் ஆணி மற்றும் ஊசிகள் குத்திய படுக்கையில் படுத்தும், ஆணிகள் குத்திய காலணிகளை அணிந்து கொண்டும், தங்கள் உடம்புகளில் அலகு குத்திக் கொண்டு அதன் மூலம் தேர்களை இழுத்துக் கொண்டும், கடும் வெய்யிலிலும் வெறும் கால்களுடன் நடந்தும் சென்றபடியும் இருந்தவண்ணம் வழிபாடு செய்கின்றனர்.

இதயத்தை உலுக்கும் புலம்பல்கள் என்ற துதிப் பாடல்கள்

இறந்து போனவர்களுக்கும், பூஜைகள் செய்யும் பொழுதும் முருகனின் அருளை மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் வகையில் அமைந்த பல புனிதமான தெய்வத் திருப்புகழ் பாடல்கள் , துதிப் பாடல்களை போன்றவற்றைப் பாடுவது மொரீஷியஸ் தீவில் மிக சாதாரணமான ஒன்று. அதைப் புலம்பல்கள் என்று கூறுவார்கள். அவை 'அவினாசிப்பட்டு', 'ஆறுமுகஸ்வாமி விருத்தம்', 'முருகன் பாமாலை' போன்றவை. அந்தப் பாடல்களைப் பாடுபவர்கள் பாடுவதைச் சற்று நிறுத்தும் பொழுது 'ஹரஹரா', 'ஹரஹரா' என மற்றவர்கள் உரத்த குரலில் கோஷம் இடுவதும் உண்டு. ஆலயம் செல்லும் வழி நெடுக அது ஒலிக்கும். அந்தப் பாடல்களைப் பதிவு செய்த ஒலி நாடாக்களையும் ஊர்வலங்கள் நடக்கும் பொழுது ஒலி பரப்பியவண்ணம் செல்வார்கள்.

உன்னை நான் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு கும்பிடும் பொழுது அவை இரண்டுமே கலங்கமற்றவனின் இதயத்தைக் கொண்டதா என்பது தெரியவில்லை. அப்படி செய்கையில் இதயத்தில் தீய எண்ணங்களை வைத்து இருக்காமல் கும்பிடுகின்றேனா என்று எனக்குத் தெரியவில்லை. என் தெய்வமே, உன் பக்தர்களில் ஒருவனான நான் ஒரு எளிமையான சேவகன். இந்த மாயையான உடலை விட்டு நான் வெளியேற்றும் வரை நான் அமைதியாக வாழ அருள் புரிய வேண்டும் ஒரு குதிரையை விட வேகமாக மயில் மீதேறி நீங்கள் என்னிடம் வர வேண்டும் - அவினாசிப்பட்டு

ஊர்வலம்

வேல், பால் குடம் மற்றும் காவடி போன்றவற்றை எடுத்துக் கொண்டு ஆலயத்திற்கு பக்தர்கள் செல்கின்றனர். அதற்கு முன்னர் ஒரு பக்கம் நாதஸ்வர இசைகள் ஒலித்துக் கொண்டிருக்க, வீதிகளில் தேர்களை மெதுவாக இழுத்துக் கொண்டு செல்லும் முருக பக்தர்கள் நடந்தபடியே தொண்டை கிழியும் வகையில்… 'ஹரஹரா', 'ஹரஹரா' என கோஷம் இட்டபடி நடந்து செல்வார்கள். அது அனைவரும் யாருமே அழைக்காமல் தாமாக வந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. பக்தர்கள் வாயில் இருந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் கடவுளின் நாமத்தைக் கேட்டு உணர்ச்சி பொங்க சாமி வந்து ஆடியபடி காவடிக் கூட்டம் செல்வதும் உண்டு. சாலை ஒரங்களில் நின்று கொண்டிருக்கும் பக்தர்கள் தேங்காய், பழங்கள், வெற்றிலை போன்றவற்றை காணிக்கையாகத் தந்து கற்பூரம் ஏற்றி வணங்குவர். சிலர் வழி நெடுக சூறைத் தேங்காய்களை உடைப்பதும், நோயுற்றவர்கள் சாலையில் வழியை மறைத்தபடி படுத்துக் கொண்டு காவடிகளை தூக்கிச் செல்பவர்கள் தங்களை தாண்டிப் போக வேண்டும் என்ற தமது வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இருந்தவாறு வழிபடுவதும் உண்டு. காவடியைத் தூக்கிக் கொண்டு செல்பவர்கள் உணர்ச்சி வசப்பட்டு தங்கள் மீது தெய்வம் வந்து விட்டது போல உணருவது உண்டு. தெய்வங்கள் மீது மனம் நெகிழ்ந்து உணர்ச்சியுடன் பாடிக் கொண்டே தன்னை மறந்த நிலையில் அவர்கள் நடந்து செல்வது சர்வ சாதாரண காட்சி.


For more information, contact the author:

Khesaven Sornum, Lecturer
Tamil Department
Mahātma Gandhi Institute
Moka, Mauritius
E-mail: uttama.bmgi@intnet.mu

Other articles from the First International Conference on Skanda-Murukan
Note: Mauritius hosts the Second International Conference on Skanda-Murukan