Lord Skanda-Murugan
 

புராணங்களில் ஸ்கந்தர் கதைகள்

Original article in English: "Skanda Legends in the Puranas"

மூலக் கட்டுரை ஆங்கிலத்தில்: என். கங்காதரன்

ஸ்ரீ க்ருன்சபேட:  குறுன்ச்சா 
மலையை உடைத்த ஸ்கந்தன்

ஸ்ரீ க்ருன்சபேட: குறுன்ச்சா மலையை உடைத்த ஸ்கந்தன்
ஸ்ரீ தேவசேனாபதி:  தேவசேனாவின்
கணவரான ஸ்கந்தன் அதாவது
தேவர்களின் சேனையின் தளபதி

ஸ்ரீ தேவசேனாபதி: தேவசேனாவின் கணவரான ஸ்கந்தன் அதாவது தேவர்களின் சேனையின் தளபதி

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

கடந்த பல ஆண்டுகளாக இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஸமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட புராணங்களே முக்கிய குறிப்பேடுகளாக கருதப்பட்டு வருவதின் காரணம் பல்வேறு செய்திகளைக் கொண்ட கதைகள் அதில்தான் எழுதப்பட்டு உள்ளன. அதில் திருமால், சிவன், மற்றும் மற்றவர்களைப் பற்றி பல் வேறு கதைகள் நிறையவே உண்டு. இதிகாசங்களையும், புராணங்களையும் சேர்ந்து படித்தால் மட்டுமே வேதங்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

திருமாலுடைய திருவிக்கிரம வரலாறு பற்றிய கதையை போலவே சில புராணக் கதைகள் வேதத்தில் உண்டு என்றாலும் பல்வேறு புராணக் கதைகளும் தனித் தன்மையுடனே விளங்குகின்றன. முருகனைப் பற்றிய கதைகள் புராணங்களில் எழுதப்பட்டு உள்ளன என்றாலும் அந்த புராணக் கதைகளுக்கு அடிப்படை செய்திகள் வேதங்களிலும் உண்டு. ஸ்கந்த பற்றிய புராணக் கதைகளும், அவை எப்படி நாளடைவில் வளர்ந்துள்ளன என்பதைப் பற்றியும் இனி பார்ப்போம்.

ஸ்கந்தரின் தோற்றம்: பொதுக் கருத்து

சிவபெருமானின் புதல்வரே ஸ்கந்த என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. அவரைப் பற்றிய வரலாறு அனேகமாக அனைத்து புராணக் கதைகளிலும் ஒரே மாதிரியாகத்தான் காணப்படுகின்றது. அரக்கன் தாரகாவினால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிடுமாறு தமது சார்ப்பில் அக்னிதேவரை அனுப்பினார்கள். சிவபெருமானும் பார்வதியும் தாம்பத்திய உறவில் இருந்த சமயத்தில் அவர் செல்ல, அதனால் சிவபெருமானின் உறவு தடைபட, அவருடைய விந்து கீழே விழுந்தது. கோபமுற்ற சிவபெருமான் அதை எடுத்து விழுங்குமாறு அக்னி தேவனுக்குக் கட்டளை இட்டார்.

சிவபெருமானின் கட்டளையின்படி அக்னி தேவன் அதை எடுத்து விழுங்க முயன்றார் . ஆனால் அவரால் தன் உடலுக்குள் அதை வைத்து இருக்க முடியாமல் போனதினால், கங்கை நதியில் சென்று அதைத் துப்பி விட்டார். அதனால் கங்கையும் கர்பமுற்று ஒரு குழந்தயைப் பெற்று எடுத்தப் பின் அந்தக் குழந்தயை தன் கரை ஓரத்தில் ஒதுக்கினாள். அதைக் கண்ட கிருத்திகை நட்சத்திரம் ஒரு மனித உரு எடுத்து வந்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வரலானாள். அதனால்தான் முருகனுக்கு கார்திகேயா என்ற பெயர் அமைந்ததாக கூறுகின்றனர்.

இதைப் பற்றி பல்வேறு புராணங்களிலும் முரண்பாடுகள் உள்ளன எனவும், மார்கண்டேய புராணம், நாரதப் புராணம், மற்றும் குமாரப் புராணம் இவைகளில் ஸ்கந்த பிறந்த வரலாறு பற்றி கூறப்படவில்லை எனவும் தெரிகின்றது.

ஸ்கந்த தோற்றம்: பல்வேறு புராணக் கதைகள்

விஷ்ணு புராணங்களும், வாயு புராணங்களும் காட்டுப் புதர்களில் அக்னிக்குப் பிறந்தவர் ஸ்கந்த என்ற செய்தி சிறிய அளவில் கூறப்பட்டு உள்ளது. மத்சய புராணத்தில் தேவர்கள் தாரகா என்ற அசுரனினால் துன்புறுத்தப்பட்டதை பற்றியும், சிவன்-பார்வதியின் திருமணம், ஸ்கந்த பிறப்பு என அனைத்தையும் விரிவாகக் கூறி உள்ளன. மத்சய புராணக் கதையின்படி சிவபெருமானின் உயிரணுவை பார்வதியே முதலில் பெற்று அதை வெளித் தள்ள, அது அக்கினி மூலம் மற்ற அனைத்து கடவுட்களின் வயிற்றிலும் செல்ல, அதை அவர்களாலும் தங்களுக்குள் வைத்து இருக்க முடியாமல் வெளியேற்ற, ஒரு நீர்த் தேக்கமாக அது மாறியது. அந்த நீர்த் தேக்கத்தில் இருந்த நீரையே ஆறு கிருத்திகைகளும் குடித்தபின் பார்வதிக்கும் தர, அதைக் குடித்த பார்வதியும் கர்பம் அடைந்தாள் என்றும் அதன் மூலமே ஆறு தலைகளையும், சக்தி என்ற ஆயுதத்தினையும் ஏந்தியவாறு அகில உலகினையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புதக் குழந்தையாக பார்வதியின் வலதுபுறத்தில் இருந்து ஸ்கந்த வெளி வந்தார் என்றும் கூறுகின்றது.

அசுரர்களில், முக்கியமாக மாரா என்பவனைக் கொல்லவே ஸ்கந்த பிறந்ததினால் குமரன் என்று அவர் கூறப்பட்டாலும் ஆறு கிருத்திகை தேவிகளும் ஒன்றாக இணைந்து அவரைப் பெற்றதினால் கார்திகேயா என்றும் விசாகா எனவும் அழைக்கப்பட்டார். இந்திரனே கார்திகேயா மற்றும் விசாகாவை ஒன்றாக்கி அவருக்கு குஹதேவன் எனப் பெயரிட, குழந்தை பிறந்த ஆறாவது நாளில் பிரும்மா. விஷ்ணு, இந்திரன் தலைமையில் இதர தெய்வங்களும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த நல்ல நாளில் இந்திரன் தன் மகளான தேவசேனாவை அவருக்கு மனைவியாக திருமணம் செய்து கொடுத்தார். எந்த ரூபத்தினையும் எடுக்கக்கூடிய குக்கட்டா என்ற விளையாட்டு பொம்மயை த்வாத்சா என்ற முனிவர் கொடுக்க, விஷ்ணுவும் பல்வேறு ஆயுதங்களைத் தந்தார். அக்னி பகவான் ஒளி மயமான தேஜஸ்ஸைக் கொடுக்க, வாயு பகவான் வாகனம் ஒன்றினைத் தந்தார். அனைத்துக் கடவுளும் அவரைப் புகழ்ந்து போற்ற, முருகனும் தாரகாவை வதம் செய்தார். அக்னி தேவனே சிவபெருமானின் உயிர் அணுக்களை கங்கையில் போட, அதை நாணற் புதர்களில் அவள் தள்ள, அது குஹா என்ற குழந்தையாகப் பிறந்து அசுரன் தாரகாவைக் கொன்றது.

கருட புராணக் கதையில் அக்கினித் தேவனின் மகனாக நாணற் புதர்களில் ஸ்கந்த பிறந்தது, மற்றும் தக்ஷன் செய்த செயல்களை எல்லாம் விவரித்துவிட்டு, சாகா, விசாகா மற்றும் நைகமேயா என்பவர்களும் அக்கினிக்குப் பிறந்தவர்களே எனவும், குமரன் கிருத்திகைகள் முலம் பிறந்ததினால் கார்த்திகேயா என்ற பெயர் பெற்றதாகவும் எழுதப்பட்டு உள்ளது. பாகவதப் புராணத்திலும் ஸ்கந்த அக்னி மற்றும் கிருத்திகைகளுக்குப் பிறந்தார் எனவும், நிஷாகாவின் தந்தையே அக்னி எனவும் கூறப்பட்டு உள்ளது.

ஸ்கந்த புராணக் கதைகளின் மூலம் நாணல் புதரில் இருந்து பிறந்த ஸ்கந்த எப்படி படிப்படியாக முழு உருவம் பெற்றார் என்ற விவரம் கிடைக்கின்றது. சித்திரை மாத வளர் பிறையில் முதல் நாள் அன்று பிறந்த முருகனுடைய பல பாகங்கள் இரண்டாம் நாளில் வளர்ந்து, மூன்றாம் நாள் அவை ஒரு உருவைப் பெற்றன. நான்காம் நாளன்று அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பன்னிரண்டு கண்கள், ஆறு தலைகள், ஆறு கைகள், ஆறு கால்களுடன் முழு உருவம் பெற்றிட, ஐந்தாவது நாளன்று அனைத்து கடவுளும் ஒன்று சேர்ந்து அவரை அழகு படுத்தினர். ஆறாவது நாள் எழுந்து நின்ற முருகனுக்கு அனைத்து சமஸ்காரங்களையும் பிரும்மா செய்து முடித்தார்.

ஆனால் சிவ புராணக் கதை அவை அனைத்தையும் விஸ்வாமித்திர முனிவரே செய்ததாகவும், சிவபெருமான் சக்தி என்ற ஆயுதத்தையும், கௌரி, வாகனமாக மயில், அக்னி பகவான் ஆடு போன்றவற்றைத் தந்ததாகவும் கூறுகின்றது. மேலும் மத்சய புராணத்துடன் முரண்பட்டு முருகனுக்கு சேவலைத் தந்தது கடல் தேவனே என அது மேலும் கூறுகின்றது. பிரும்மானந்த புராணத்தில் மற்றவர்கள் அவரவருக்குக் கொடுத்த பரிசுகள் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. விஷ்ணு மயில் மற்றும் சேவல், வாயு பகவான் கொடி, ஸரஸ்வதி இசைக் கருவி, பிரும்மா ஆடு மற்றும் சிவபெருமான் ஒரு செம்மறி ஆட்டையும் தந்தார்கள் என்று தெரிவிக்கின்றது. மேலும் சிவபுராணத்தில், நாணற் புதரில் விழுந்த விந்து ஒரு குழுந்தையாக மாறி, மார்சிக மாதத்தின் (டிஸம்பர் மாதம்) வளர் பிறையின் ஆறாவது நாளன்று பிறந்தது என்றும், சிவன்-பார்வதி திருமணம், ஸ்கந்த பிறப்பு, தாரகா வதம் போன்றவற்றை பற்றியும் விவரமாகக் கூறி உள்ளது.

பத்ம புராணத்தில் அவர் பிறப்பு பற்றி வேறு விதமாகக் கூறப்பட்டு உள்ளது. சிவனும் பார்வதியும் இணைந்து இருந்த பொழுது அக்னி பகவான் அங்கு கிளி உருவில் வர, அவர்களுடைய உறவு தடைப்பட்டது. அதனால் வெளியில் சிந்திய தன் விந்துவை எடுத்து விழுங்குமாறு அக்னி பகவானிடம் சிவபெருமான் கூறினாராம். ஆனால் அதில் இருந்து சில துளிகள் புமியில் விழ, அங்கு ஒரு நீர்த் தேக்கம் ஏற்பட்டது. அதை அறியாத பார்வதி அதில் சென்று குளிக்க, அப்பொழுது அந்த ஆறு கிருத்திகைகளையும் அங்கு அவள் கண்டாள். அவர்கள் தாமரை இலையில் தந்த தண்ணீரையும் பருகினாள்.

சிவனின் விந்து கலந்து இருந்த அந்த தண்ணீரைப் பருகியதால் கர்பமுற்று ஒரு ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். அவளுடைய வலது பக்கத்தைக் கிழித்தபடி வெளி வந்தார் குமரன். இடப்புறத்தைக் கிழித்துக் கொண்டு விஷாகா வெளி வந்தாள். இரண்டு குழந்தைகளும் தேய்பிறையின் பதினைந்தாவது நாள் பிறந்த பின், சித்திரை மாதம் வளர் பிறையின் ஐந்தாவது நாள் ஒன்றhக இணைந்தார்கள் . ஆறhம் நாள் அந்த குழந்தைக்கு குஹா எனப் பெயர் இட்டு தேவர்கள் படைத் தலைவனாக நியமிக்கப்பட்டார். வஸ்த முனிவர் அதற்கு ஒரு விளையாட்டு பொம்மை போல ஒரு சேவலை தந்தார்.

பிரும்ம புராணமும் கார்த்திகேயன் பிறப்பு வரை பற்றிய செய்தியை பத்ம புராணத்தில் கூறப்பட்டு உள்ளது போலவே கூறினாலும், மேற் கொண்டும் கௌதமி நதியின் பெருமைப் பற்றியும் அதைச் சுற்றி உள்ள இடங்களைப் பற்றியும் விவரிக்கின்றது. வாயு புராணக் கதையின்படி சிவனும் பார்வதியும் இணைந்து இருந்த பொழுது அதைக் கலைக்க இந்திரனே அக்னியை அனுப்பியதாகவும், அதனால் பார்வதி வெகுண்டெழுந்து, அக்னியால் தன் உறவு தடைப்பட்டதினால் அவரே தன்னுடைய கருவை சுமக்க வேண்டும் என சாபமிட்டாராம். அதன்படியே அவளுடைய கருவை அக்னி சுமக்க வேண்டி வந்தது. ஆனால் அவரால் அது முடியாமல் போக அதை கங்கையிடம் கொடுத்தாராம். மேலும் அசுரர்களை அழிக்க அவதாரம் எடுத்ததினால் ஸ்கந்தன் என்ற பெயரை ஸ்கந்த பெற்றதாகவும் கூறுகின்றது.

வாமன புராணத்திலோ ஸ்கந்த பிறப்பு பற்றிய செய்தி வேறு விதமாகக் கூறப்பட்டு உள்ளது. குருன்சா என்ற அரக்கனின் வதம் பற்றிய கேள்விக்கு பதிலாக அது அமைந்து உள்ளது. அந்தக் கதையின்படி சிவபெருமானின் விந்துவை கொண்டு சென்ற அக்னி அதை குடிலா எனும் நதியில் போட்டு விட்டார். நதியில் மிதந்து சென்ற அது உதயகிரி மலைப் பகுதியில் இருந்த நாணல் புதரில் போய் ஒதுங்கி விட அங்குதான் கார்த்திகேயர் பிறந்தாராம். ஆறு கிருத்திகை நட்சத்திரங்களும் அவரை பாதுகாத்து வளர்த்ததினால் அவருக்கு ஷண்முகா என்ற பெயர் ஏற்பட்டது.

பிரும்மைவார்த புராணக் கதைப்படியும் சிவபெருமானின் விந்து ஷண்முகா நதிக் கரையில் இருந்த நாணல் புதரில் சென்று விழ, அங்கு கார்த்திகேயா பிறக்க அவருக்கு அப்போது மயில் அவருக்கு வாகனமாக அமைந்ததாம். மேலும் பவிஷ்ய புராணத்தின்படி மார்சிக மாதத்தின் ஆறாவது நாளன்று அசுரன் தாரகாவை கார்த்திகேயா வதம் செய்தாராம்.

லிங்க புராணத்தில், மன்மதன் அழிக்கப்பட்ட செய்தியும், மேலும் சிவன் பார்வதி இருவருக்கும் பிறக்க இருக்கும் குமரனே தாரகாவை அழிக்கப் போகின்றான் என்றும் எழுதப்பட்டு உள்ளது. அதில் சிவன்-பார்வதியின் தவம் மற்றும் திருமணத்தைப் பற்றி மட்டும் கூறி விட்டு, குமரன் எப்படிப் பிறந்தார் என்பது பற்றிய விவரத்தைக் கூறாமல் விட்டு விட்டது. குமரன் அசுரன் தாரகாவை வதம் செய்ய பிறந்தவர் எனவும், அவரே நகைகள் அணிந்த விளையாட்டுப் பிள்ளையைப் போல ஜொலிக்கும் ஷண்முகன் என்றும் திரிபுரா வதம் பற்றி எழுதப்பட்டுள்ள பகுதியில் கூறுகின்றது. திரிபுராவை வதம் செய்ய சிவபெருமான் சென்ற பொழுது குமரனும் அவருடன் சென்றதாகவும் தெரிவிக்கின்றது. அசுரன் தாரகாவை சக்தி வேல் கொண்டு ஸ்கந்த வதம் செய்தது அனைவரும் அறிந்ததே. ஸ்கந்த புராணக் கதையின்படி சக்தி ரக்தசங்கா என்ற மலைப் பகுதிக்கு உள்ள ஹடகா என்ற இடத்தில் இருந்த சமர்த்கபுரா என்ற பகுதியில் விழுந்து விட்டதால் அந்த இடத்தை ஸ்கந்தபுரா என்று அழைத்தனர். அந்த சக்தியின் பின்புறத்தை எவர் தன் கைகளினால் தேய்க்கின்றனரோ அவர்களை எந்த நோயும் அண்டாது என்ற நம்பிக்கையும் இருந்தது.

ஸ்கந்தரின் திருமணம்

இந்திரனின் மகளான தேவசேனாவை ஸ்கந்த மணம் புரிந்ததாக பிரும்மாண்ட புராணம் தெரிவிக்க, ஸ்கந்த புராணமோ ஸ்கந்த மணம் புரிந்தது எமதர்மனின் மகளான தேவசேனாவையே என்று கூறுகின்றது. வராக புராணத்தின்படி சிவபெருமான் முருகனுக்கு பல கலைகளை கற்றுத் தந்த பின் ஆசி கூறி விட்டு அவரே சேனைக்கு கணவனாக இருக்க வேண்டும் என்று கூறினார். தேவசேனா மற்றும் சேனா இரண்டுமே தேவர்கள் என்பதினால் படைத் தலைவரான குமரனைக் குறித்து கூறப்படும் செய்தியே அந்தப் பெயர்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.

பிரும்ம புராணத்தின் கதைப்படி ஸ்கந்த திருமணமே ஆகாதவர். அதற்கும் ஒரு காரணம் உண்டு. தாரகாவை ஸ்கந்த கொன்ற பின் பார்வதி தேவி ஒரு காரியம் செய்தாள். எந்தப் பெண்ணை ஸ்கந்த நோக்கினாலும் அவள் அவருக்குத் தாயாரான பார்வதியைப் போலவே காட்சி தருவாள். அதனால் இல்லற வாழ்கையில் நாட்டம் இன்றி அனைத்துப் பெண்களும் தனக்கு தாயாரே என்று கூறியபடி ஸ்கந்த பிரும்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

சிவபுராணத்தில் இது குறித்து வேறு விதமாக கூறப்பட்டு உள்ளது. ஒரு முறை ஸ்கந்த உலகை சுற்றி வந்து கொண்டு இருந்த பொழுது வழியிலே வந்த நாரதர் முருகனைத் அவருடையப் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து வைக்க அவருடைய தாய் தந்தை இருவரும் பிள்ளையாருக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாகக் கூறினர். அதைக் கேட்ட ஸ்கந்த கோபம் கொண்டு அவருடைய தாய் தந்தை இருவரும் என்ன சமாதானம் கூறியும் அதை ஏற்காமல் இனி திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டு குருன்சா மலைக்குச் சென்று விட்டார்.

ஆகவே திருமணம் ஆகாததினால் முருகனை குமரன் என்று அழைத்தனர். இதைதான் தமிழில் உள்ள புராணக் கதைகளில் உலகைச் சுற்றி வரும் போட்டியில் தன் பெற்றோர் தனது சகோதரன் வினாயகருக்கு சாதகமாக நடந்து கொண்டு பழத்தை அவருக்குக் கொடுக்கவே தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணிக் கொண்டு பழனி மலைக்கு சென்று அமர்ந்து விட்டார் என்று எழுதி உள்ளனர். அது போலவே சமஸ்கிருத நூல்களிலும் ஸ்கந்த வள்ளியை மணந்து கொண்டது குறித்து எந்தக் குறிப்புகளும் காணப்படவில்லை .

புராணங்களில் கந்தன் வரலாற்றுக் கதைக்கு உள்ள முக்கியத்துவம்

வீ.எஸ்.அகர்வால் என்பவர் 'குமார வித்தியா மற்றும் அதிசயக் குழந்தையைப் பற்றிய வரலாற்றைக் கூறி, குமார அக்னி என்ற ருத்திரனும் முருகனும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்தவே' மத்சய புராணம் எழுதப்பட்டதின் காரணம் எனக் கூறி உள்ளார். பிரும்ம நூல்களில் சிவபெருமானைப் பற்றிக் கூறுகையில் அவரை எட்டு அவதாரங்களான ருத்திரன், சிவன், பசுபதி, உக்கிரா, அசானி, பாவா, மகாதேவா மற்றும் இசானா என்ற பெயர்களில் உள்ளவர் என்று கூறுகின்றனர். இந்த எட்டு அவதாரங்களும் தனித் தனியாக இருக்கும் வரை உயிர் அற்றவை. அவை அனைத்தும் இணைந்தே குமரன் என்ற ஒன்பதாவது அவதாரம் எடுத்தன என்கின்றது .

ஸ்கந்தனின் உள்ளே அடங்கி உள்ளவை ஆறு சக்கரங்களின் சக்தி அல்லது ஆறு கிருத்திகைகள். அதனால்தான் அவர் கார்த்திகேயர் ஆனார். ஓவ்வொரு சக்கரமும் ஓவ்வொரு கிருத்திகை சக்தியை குறிக்கும். மத்சய புராணத்தில் சிவபெருமானின் முக்கிய சேவகனான விராகா, ஸ்கந்த மற்றும் வினாயகரைப் பற்றி தெயவாகக் கூறப்பட்டு உள்ளது. இந்த புராணக் கதையின்படி சிவபெருமானுக்கு அதிக சேவகம் செய்த யானை தலையைக் கொண்டவனை பார்வதி ஒரு வனத்தில் பார்த்தாள். அவனை தன் மகனாக ஏற்குமாறு சிவபெருமான் பார்வதியிடம் கூறினார். அவளும் அதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்து அவனை விராகா என அழைத்தாள். பின்னர் கூறப்பட்டுள்ள புராணக் கதைகளில் அவரைக் குறித்து வேறு விதமாகக் கூறப்பட்டு இருந்தாலும் பார்வதியின் உடலில் இருந்து வெளி வந்தவர்களே வினாயகரும் முருகனும் என்கின்றன . வினாயகரே விராகாவாகவும், விராகாவே ஸ்கந்தனாகவும ஆனார்கள். சேவலைப் பரிசாக த்வாத்சா என்ற முனிவர் கொடுத்ததின் காரணம் அவை எழுப்பிய ஓசைகள் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் வகையில் இருந்ததினால்தான் என்று கூறுகிறது. ஸ்கந்தன் அக்னியின் புதல்வர் என்பதால் அவருக்கு பிடித்த பறவையாக சேவல் அமைந்தது.

குருன்சா வதம்

வாமன புராணத்தில் ஸ்கந்த குருஞ்சா மலையை உடைத்த கதை பற்றிக் கூறப்பட்டு உள்ளது. அசுரன் தாரகாவை ஸ்கந்த கொன்ற பின் மற்றொரு அசுரன் மகிஷா ஓடிச் சென்று குருஞ்சா மலைக்குள் ஒளிந்து கொண்டான். அவனையும் கொன்று விடுமாறு இந்திரன் அவரை வேண்ட, அந்த மலையை உடைக்க வேண்டியதாயிற்று . ஸ்கந்தரின் பாட்டனாரான இமயமலையின் அதிபருடைய மகனே குருஞ்சா என்பவர் . ஆகவே அவரைக் கொல்ல முருகனுக்கு சங்கடமாக இருந்தது. அதனால் இந்திரன் கோபமடைய இருவருக்கும் அந்த விஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்ற இருவரில் எவன் பலசாலி என்று பார்க்க இருவரும் குருஞ்சா மலையை சுற்றி வரவேண்டும் என்றும், எவன் முதலில் குருஞ்சா மலையை சுற்றி விட்டு வருகின்றானோ அவனே இருவருக்குள் பலசாலி என்றும் அதற்கு குருன்சா மலையே நீதிபதியாக இருப்பார் எனவும் முடிவு செய்தனர். அதன்படி இருவரும் மலையை சுற்றி வரத் துவங்க இந்திரனே வெற்றி பெற்றதாக ஒரு பொய்யை குருஞ்சா கூற, அதனால் கோபம் உற்ற ஸ்கந்த அந்த மலையோடு மகிஷாவையும் சாய்த்தான். ஆனால் சிவபுராணத்திலோ பானா எனும் அசுரன் குருஞ்சா மலையைத் தாக்கிய பொழுது ஸ்கந்த வந்து குருஞ்சாவைக் காப்பாற்றியதாக வேறு விதத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஸ்கந்த: மற்ற கதைகள்

ஸ்கந்த புராணத்தின்படி விஸ்வாமித்திரரே முருகனை பிரும்மசாரியாக இருக்கும்படிக் அறிவுறை தந்து அவரையும் ஆசிர்வதித்தார் என்றும், இந்திரன் ஒருமுறை ஸ்கந்த மீது இடியைத் தூக்கி வீச அந்த இடியில் இருந்து புதிதாய் பிறக்கும் குழந்தைகளை தூக்கிச் சென்று விடும் குணமுடையவர்களான காகி, ஹிலிமா, ருத்திரா, விரசபா, அயா, பலாயா, ம[த்திரா என்ற பெண்கள்கள் பிறந்தனர் என்றும் கூறப்பட்டு உள்ளது .

சிவபுராணத்தில் முருகனை பற்றி ஆவலைத் தூண்டும் ஒரு கதை உண்டு. ஒருமுறை நாரதர் முருகனிடம் வந்து எங்கேயோ ஓடிப் போய் விட்ட தன்னுடைய ஆட்டைக் கண்டு பிடித்துத் தருமாறு கேட்டார். முருகனும் அதைத் தேட தன்னுடைய உதவியாளர்களை அனுப்பினார். அந்த ஆட்டை அவர்கள் விஷ்ணு இருந்த இடத்தில் கண்டு பிடித்த பின் எடுத்து வந்தனர். ஸ்கந்த அந்த ஆட்டின் முதுகில் அமர்ந்தபடி உலகம் முழுதும் உலா வந்த பின் ஆடு இன்றி திரும்பி வந்த முருகனிடம் ஆடு பற்றி நாரதர் கேட்க, இனி பலி தர ஆடுகளை உபயோகப் படுத்தாதீர்கள் என ஸ்கந்த அறிவுறைக் கூறிவிட்டு, எதற்காக ஆட்டை பலி கொடுக்க நினைத்தார்களோ அந்த நோக்கத்தைத் தான் நிறைவேற்றி விட்டதாகக் கூறினார். இப்படி பல புராணக் கதைகள் இருந்தும். வள்ளி மணம் பற்றியோ சுராவின் வதம் குறித்தோ அவற்றில் எதுவும் கூறப்படவில்லை.


Dr. N. Gangadharan is retired Professor of Sanskrit at the University of Madras and ex-Director of the Ananthacharya Indological Research Institute, Bombay. He is now Joint Director of the Sree Sarada Education Society Research Centre, Chennai.

Prof. N. Gangadharan, Joint Director,
Sree Sarada Education Society Research Centre
63-B, III Main Rd.
Gandhinagar, Adyar,
Chennai 600 020 India

See also these related research articles about the cult of Skanda-Kumara in Sanskrit sources:

Index of research articles on Skanda-Murukan