Lord Skanda-Murugan
 

சீனாவின் மஞ்சுஸ்ரீ மற்றும் கார்திகேயாவின் உருவ அமைப்பின் ஒற்றுமைகள்

by B.N. Mukherjee
from Buddhist Iconography, pp. 138-141.

Original article: "An Illustration of Iconographic Contact between Kārttikeya and Manjusrī in China"

Kārttikeya-Manjusrī (5th century AD)
Kārttikeya-Manjusrī (5th century AD). From Yun-Kang Caves, Shensi Province, China
Manjusrī

சீனாவின் ஷின்ஷி மாகாணத்தின் அருகில் உள்ள தடாங் என்ற இடத்தில் உள்ள யுங்கங் என்ற மலைப் பகுதியில் குகையின் எட்டாம் வாயிலில் அனைவரையும் கவரும் அற்புதமான ஒரு ஆண் சிலை காணப்படுகின்றது. கி.பி 385-534 அல்லது 500 ஆம் ஆண்டில் ஆட்சி செய்து வந்த 'வை வம்ச' மன்னர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்த சிலை அது என்று தெரிகின்றது. அதற்கு முன்னர் அதாவது கி.பி 460 ஆம் ஆண்டுகளில்தான் கற்பனை வளம் மிக்க சிற்பக் கலைகள் அங்கு தோன்றத் துவங்கி இருந்துள்ளன . ஒரு உயர்ந்த பீடத்தில் அமர்ந்து கொண்டு வலது பக்கம் திரும்பியவாறு தன்னை நோக்கியபடி அமர்ந்து கொண்டு உள்ள மயில் மீது கால்களை வைத்துக் கொண்டுள்ளபடி காட்சி தரும் வகையில் அமைந்து உள்ளது அந்த ஆணின் சிலை.

வாயில் உருண்டையாக எதையோ ஒன்றை வைத்துக் கொண்டு உள்ளபடி காணப்படும் அந்த மயில் மீது அமர்ந்து கொண்டு உள்ள ஆண் ஐந்து தலைகளைக் கொண்டவராக காட்சி தருகிறார். ஆனால் அந்த சிலைக்கு உண்மையில் ஆறு தலைகள் உள்ளன. பார்ப்பவர்கள் கண்களுக்கு எளிதில் புலப்படாத வகையில் அந்த சிலையின் முன் பக்க முகத்தின் பின்புறமாக அமைந்துள்ளது இன்னொரு முகம். அந்த சிலைக்கு ஆறு கைகள் உள்ளன. மேல்புறத்தை நோக்கி நீண்டு கொண்டு உள்ள இரண்டு கைகளிலும் சந்திரனும் சூரியனும் காணப்படுகிறார்கள். இடது புறத்தில் உள்ள நடுக்கையில் வில் ஒன்றும் அதே பக்கத்தின் மூன்றாவது கையோ சேவல் ஒன்றை அணைத்துக் கொண்டு இருப்பது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. வலது பக்கத்தில் உள்ள கீழ் கை ஒரு முத்திரை சின்னத்தைக் காட்டியவாறு தொடை மீது வைத்துக் கொண்டு உள்ள நிலையில் இருக்க உடைந்த நிலையில் காணப்படும் நடுக் கையில் அந்த வில்லில் ஏற்றப்படும் அம்பு இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள்.

அந்த மலையையும் அதில் உள்ள சிற்பங்களையும் நோக்கும்போது அது கார்த்திகேயா எனும் ஸ்கந்த முருகனை போலவே உள்ளது என்றே கருத வேண்டி உள்ளது. அந்த சிலையின் அமைப்பைப் பற்றிக் கூறுகையில் பின்புற முகத்துடன் கூடிய தலை தெரியாதபடி வடிவமைக்கப்பட்டு உள்ள அது ஆறுமுகக் கடவுளே என்கிறார்கள். அனைத்து புராணக் கதைகளிலும் முருகனுக்கு ஆறுமுகம் உள்ளதாகவே கூறி உள்ளார்கள். ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்த ஆலயத்தில் அந்தணர்கள் வணங்கிய இப்படிப்பட்ட ஒரு சிலையைக் கண்டு வியப்பு அடையத் தேவையே இல்லை. ஏன் எனில் குகையின் உட்புறத்தில் மகேஸ்வரரைக் (சிவபெருமான்) குறிக்கும் வகையில் சாய்ந்த நிலையில் அமர்ந்து கொண்டு உள்ள மாட்டின் மீது மூன்று தலைகளுடன் உள்ள ஒருவர் காட்சி தரும் வகையிலான இன்னொரு சிலைக் காணப்படுகின்றது.

சீனாவில் பொதுவாக நிலவும் புராணக் கதையின்படி கௌதம புத்தர் சீன மக்கள் முக்தி எனும் மோட்ஷம் பெறும் வகைக்கான வழி முறைகளைக் கண்டறிந்து அந்த நல்வழி மார்கத்திற்கான போதனைகளை பிரச்சாரம் செய்யுமாறு அனுப்பிய போதிசத்துவ மஞ்சுஸ்ரீ என்பவருக்கும் வாகனமாக மயில் ஒன்று இருந்துள்ளதாக கூறுகிறார்கள். மஞ்சுஸ்ரீ அல்லது வென்-ஷூ-ஷீ-லீ (Wen - Shu - Shi -Li) என்பவர் ஷின்ஷி (Shinshi or Shanxi) என்ற பகுதியில் இருந்த வூ-ஷை-ஷான் (Wu -tai -Shan) என்ற இடத்தில்தான் (பஞ்ஜாக்ஷரா அல்லது ஐந்து முக மலை என்ற பகுதி) அவதரித்தார். ஒரு சிலரின் கூற்றின்படி அவருடைய சேவைகள் முதலாம் நூற்றாண்டிலேயே துவங்கி விட்டதாம். அற்புதமான அந்த ஆண் சிலை உள்ள யுங்கங் மலைப் பகுதி குகைகள் கண்டு பிடிக்கப்படும் முன்னரே ஷின்ஷி மாகாணத்தில் மஞ்சுஸ்ரீ பரவலாக அனைவராலும் அறியப்பட்டு இருந்தார். அனைத்து வகையிலும் உயர்ந்த அறிவு கொண்டவராக கருதப்படும் மஞ்சுஸ்ரீ சீரிய ஆற்றலைக் கொண்ட கார்த்திகேயக் கடவுளுடன் அனைத்து விதத்திலும் ஒத்திருப்பதாகவே கருதப்படுகிறார்.

மஞ்சுஸ்ரீ புத்தமதத்தை சேர்ந்த தேவ கணமானாலும் மஞ்சு குமாரா மற்றும் குமாரபூதா என்றும் அவரைக் குறித்துக் கூறுவதின் மூலம் அவருக்கும் குமார கார்திகேயருக்கும் உள்ள தொடர்ப்பை ஜாடைமாடையாக உறுதி செய்கிறார்கள். அது மட்டும் அல்ல மஞ்சுஸ்ரீயும் கார்திகேயரைப் போல குமார அவதாரமாகவே காட்டப்படுகிறார். சாதனமாலா என்ற நூலில் உள்ள தியானா என்ற பகுதியில் மஞ்சுகுமாரன் வில்லும் அம்பும் ஏந்தியபடி யுங்கங் சிலையின் வடிவம் போல இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அங்கு காணப்படும் சில சிலைகளில் உள்ள மஞ்சுஸ்ரீயும் யுங்கங் பகுதியில் உள்ள சிலையைப் போலவே ஐந்து முகங்களுடன் காணப்படுகிறார். இவற்றை எல்லாம் நோக்கும்போது மஞ்சுஸ்ரீயும் கார்த்திகேயாவும் மாறுபட்டக் கடவுட்களே என்றாலும் இருவருக்கும் இடையே எதோ ஒரு விதத்தில் இனம் புரியாத வகையில் ஒற்றுமை உள்ளது தெரிகின்றது.

யுங்கங்கில் அந்தக் கடவுளின் சிலைக் கண்டு அறியப்பட்ட காலத்திற்குப் பிறகு வந்த குப்தர்கள் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட 'ஆர்யா- மஞ்சுஸ்ரீ- மூலகல்பா' என்ற நூலின் மூலம் இந்த இரண்டு கடவுட்களின் உருவ அமைப்பிலும் நிறையவே ஒற்றுமை உள்ளதாக தெரிய வந்துள்ளன. அதனால்தான் ஐந்தாம் நூற்றாண்டின் முன்போ பின்னரோ ஷின்ஷி மாகாணத்தில் காணப்படும் அந்த இரண்டு கடவுட்களுக்கும் இடையே எதோ ஒரு விதத்தில் தொடர்பு இருந்தது என்பதில் எந்த ஐயமும் கொள்ள முடியாது. புத்த மதம் பெருமளவில் பரவி இருந்த இடத்தில் உள்ள மலைக் குகையில் இருக்கும் யுங்கங் சிலையின் வடிவமைப்பைக் காணும்போது எந்த அளவில் இந்த இரண்டு கடவுட்களுக்கும் (மஞ்சுஸ்ரீ மற்றும் ஸ்கந்தன்) இடையே வித்தியாசம் உள்ளது என்பதைக் கூறுவது கடினம். அதே சமயத்தில் மஞ்சுஸ்ரீக்கும் நீலகண்டர் என்ற சிவனுக்கும் உறவு இருந்துள்ளது என்பது அந்த குகைக்குள் உள்ள சிற்பங்களில் இருந்து தெரிய வருகின்றது. நேபாளத்தில் பல இடங்களில் சிவ லிங்கங்களுடன் மஞ்சுஸ்ரீயின் உருவமும் செதுக்கப்பட்டு உள்ளது. அதனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சிவபெருமான் அந்தணர்களினால் போற்றி வணங்கப்படும் தெய்வம். ஆகவே சிவனுக்கும் மஞ்சுஸ்ரீக்குமான உறவு ஐந்தாம் நூற்றாண்டின் முன் பகுதியில் கண்டறியப்பட்ட யுங்கங் சிலைகளின் காலத்தை ஒட்டியவையா என்பதை சரியான முறையில் கூற இயலவில்லை. அநேகமாக இதுவும் கார்த்திகேயா மற்றும் மஞ்சுஸ்ரீயின் இடையிலான தொடர்பைப் கூறுவது போன்ற ஹேஷ்யமாகவும் இருக்கலாம். ஒரு சாரர் கருதுவது போல கார்திகேயருடன் மஞ்சுஸ்ரீக்கு தொடர்ப்பு இருந்திருக்க வேண்டும் என்பதினால் கூட மஞ்சுஸ்ரீ மற்றும் கார்த்திகேயரின் தந்தை என்ற இருவருக்கும் தொடர்ப்பு இருந்துள்ளதாக கூறப்பட்டு இருக்கலாம்.

மற்றும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். எப்போதும் கார்திகேயருடன் காணப்படும் சேவல் மற்றும் மயில் என்ற இரண்டும் மஞ்சுஸ்ரீயுடனும் காணப்படுகின்றது. ஆகவே யுங்கங்கில் உள்ள சிலையை கார்த்திகேய-மஞ்சுஸ்ரீ என்பதா இல்லை மஞ்சுஸ்ரீ-கார்த்திகேயா என்பதா இல்லை, மஞ்சுகுமாரா எனக் கருதலாமா என்பதே கேள்விக்குறியதாக உள்ளது. மேலும் அந்த இடங்களில் உள்ளவர்கள் கார்திகேயரைப் பற்றி முன்னரே அறிந்து இருந்தார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிகின்றது. இப்படி நிலவும் அனைத்து நம்பிக்கைகளும் மஞ்சுஸ்ரீ தோன்றிய காலத்துக்கு முற்பட்டவை. யுங்கங்கில் உள்ள சிலையைக் காணும்போது அங்கிருந்தவர்கள் கார்திகேயரைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு உள்ளனர் என்பது புலனாகியது. சீன நாட்டின் ஷின்ஷி மாகாணப் பகுதிகளில் இருந்தவர்கள் கார்திகேயரைப் பற்றி அறிந்து இருந்தார்கள் என்பது உண்மை என்றால், நிச்சயமாக அதற்கும் முன்னரே சீனாவின் மத்திய ஆசியப் பகுதிகளில் கார்த்திகேயர் பெருமளவு பரவலாக அறியப்பட்ட, வணங்கி போற்றப்பட்டு உள்ள கடவுளாகவே இருந்திருக்க வேண்டும். அந்த கால கட்டத்தில்தான் இந்திய ஷின்ஷியின் எல்லைப் பகுதியில் கார்திகேயரின் செல்வாக்கு பரவி இருக்க வேண்டும் என்று நம்பத்தக்க வகையில் கூற ஆதாரமாக உள்ளவை இரானின் மத்தியப் பகுதிகள் மற்றும் சீனாவில் இருந்த கார்த்திகேய சிலையின் கைகளில் காணப்படும் சந்திர சூரியனின் சின்னங்கள்.

மத்திய ஆசியாவிலும், சீனாவிலும் புத்தமதம் பரவத் துவங்கியபோது மெல்ல மெல்ல கார்த்திகேயா அல்லது மஹாசேனா அல்லது குமாரா என்பவர் சிறிய அளவிலும், சில சமயங்களில் பூதாகாரமாகவும் காணப்படும் உருவில் இருந்தபடி காக்கும் கடவுளாக ஏற்கப்பட்டு வந்துள்ளார். அதே சமயம் மத்திய ஆசியாவிலும் இந்தியாவிலும் புத்தமத வழிபாட்டுக் கடவுளான மஞ்சுஸ்ரீயின் தோற்றத்தைக் கூட தன்னுடன் இணைத்துப் பேசுவதில் இருந்து கார்த்திகேயர் எந்த அளவு அங்கெல்லாம் எந்த அளவிற்குப் புகழ் பெற்றவராக இருந்துள்ளார் என்பது தெரிகின்றது.


Translated into Tamil by: சாந்திப்பிரியா

See also
Wei Tuo Pú sà (Bodhisattva Skanda) | Skanda in Japanese Buddhism | Kārttikeya in ancient Java | Kārttikeya in ancient Cambodia
Research articles from International Conference on Skanda-Murukan