
Kanthar Anthāthi pārāyanam recited by Chithra Murthy
முருகன் புகழைக் கூறும் திருப்புகழ் முதலான நவமணி நூல்களை இய்ற்றியருளியவர் அருட்கவி அருணகிரிநாதர். ஒருமுறை அவர், மஹாபாரதத்திற்குத் தமது அற்புத வாக்கால் உரை எழுதிய வில்லிபுத்தூராரைச் சந்திக்க நேர்ந்தது. பெரும் புலவரான வில்லிபுத்தூராரைக் கண்டு புலவர் சமூகமே நடுங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. காரணம் அவர், தன்னுடன் வாது செய்து தோற்ற புலவர்களின் காதுகளைக் குறடு கொண்டு தோண்டும் வழக்கத்தைக் கையாண்டு வந்தார். அவரது செருக்கை அடக்க திருவுளம் கொண்ட முருகன், ஒரு திருவிளையாடலை நிகழ்த்த முடிவு செய்தான்.அருணகிரியாரை, வில்லிபுத்தூராருடன் கவிதைப் போட்டியில் மோதவைப்பதென்றும், தோற்றவர் காதை, மற்றவர் அறுத்துவிடலாம் எனவும் முடிவாயிற்று.
அருணகிரிநாதர், போட்டிக்காகப் பாடவேண்டி இருந்ததால், கடினமான தமிழ் நடையைக் கொண்ட 'கந்தர் அந்தாதி' எனும் நூலை இயற்றத் துவங்கினார்.வில்லிபுத்தூராரும் உடனுக்குடன் உரை கூறலானார் .53 செய்யுட்கள் இவ்வாறு நிறைவுற்றபின் மேலும் எப்படிப் பாடினால் அவரை மடக்கலாம் என்று அருணகிரியார் முருகனை எண்ணித் துதித்து நின்ற போது, 'த'கர வர்க்க எழுத்துக்களை மட்டுமே வைத்து அடுத்த செய்யுளைப் பாடுமாறு முருகன் எடுத்துக் கொடுத்தான்.அந்தச் செய்யுள் பின்வருமாறு:
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
உயிர் போகும் காலத்தில், முருகன் அடியிணை பெறும் கருணையைத் தரக்கேட்டு அருணகிரியார் பாடிய மேற்குறிப்பிட்ட 54ஆம் பாடலுக்கு உரை கூற முடியாது தவித்தார் வில்லிபுத்தூரார்! தம் தோல்வியை அவர் ஒப்புக்கொண்டதும், அருணை முநிவர் தாமே அப்பாடலுக்கு உரை செய்தார்.அத்துடன் மொத்தம் நூறு பாடல்களைப் பாடி நூலை நிறைவு செய்தார்.ஆனால் வில்லிபுத்தூராரின் காதை அறுக்க ஒப்புக்கொள்ளவில்லை நம் கருணை முநிவர். '.இனியும் இது போன்ற இழிவுச் செயல்களில் ஈடுபடக்கூடாது.' என்று அறிவுரை கூறியதோடு அவர் கையிலிருந்த குறடாவைப் பிடுங்கி வீசி எறிந்தார் என்பது வரலாறு.
கந்தர் அந்தாதிப் பாடல்கள் அனைத்துமே, சி,சீ,செ,சே,த,தீ,தெ,தே எனும் எட்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டு துவங்குகின்றன. 27 பாடல்களில் திருச்செந்தூரைப் பற்றிய குறிப்புகள் வருவதால், செந்தூரில் இது பாடப்பட்டிருக்கலாம் என்பதும், திருவண்ணாமலைக் கோவிலிலுள்ள யானை திறை கொண்ட விநாயகரையும், உண்ணாமுலை அம்மையையும் காப்புச் செய்யுட்களில் துதித்துள்ளபடியால் இது ஒரு வேளை திருவண்ணாமலையில் பாடப்பட்டிருக்கலாம் என்பதும் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள்.
கந்தர் அந்தாதி பற்றிய குறிப்புகள் மற்ற சில நூல்களிலும் வருவதை, திருப்புகழ் உரை ஆசிரியர் டாக்டர் வ.சு.செங்கல்வராயப்பிள்ளையவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்.
அக்கிளிதான்- வில்லிபுத்தூரான் செவியின் மேலரிவாள்
பூட்டியன்று வல்லபத்தின் வாது வென்று வந்ததுகாண்"
-தணிகை உலா
"எதிரும் புலவன் வில்லி தொழ எந்தை உனக்கந்தாதி சொல்லி ஏழைப்புலவர் செவிக் குருத்தோடெறியுங் கருவி பறித்தெறிந்தே"
-திருமலைமுருகன்
பிள்ளைத்தமிழ் அருணகிரியாரின் கருணைத் திறத்தை எண்ணியே 'கருணைக்கு அருணகிரி' என்று கூறும் வழக்கும் எழுந்தது என்கிறார் டாக்டர் பிள்ளையவர்கள்.
ஒரு தென்னைமரத்திலிருந்து பறித்தெடுத்த தேங்காயுள்ளிருக்கும் சுவைமிக்க இளநீரைப் பருகுவதற்காக நாம் மேற்கொள்ளும் சிரமங்கள் எத்தனையோ; அதேபோலத்தான் கடினமான கந்தர் அந்தாதி பதப்பிரிவு கண்டு அயர்ந்துவிடக் கூடாது.அதன் ஆழம் வரைச் சென்று, பொருட்செறிவை அனுபவித்துணர்ந்து, பிறர்க்கு கற்பித்தும் வரும் திருப்புகழ் அடிமை திரு. சு.நடராஜன் போன்ற ஆன்றோரின் உதவியுடன் நாமும் பொருளுணர்ந்து கற்று கந்தர் அந்தாதியை மனனம் செய்வோமேயானால் ஒரு அருட்கவிதையைக் கற்ற நிறைவு நமக்குக் கிட்டும் என்பதில் ஐயமேதுமில்லை.
பி.கு 'அந்தாதி இல்லா இறைவனுக்கு அந்தாதி' பாடி வில்லிபுத்தூராரைத் திகைக்கவைத்த அருணை முநிவரின் 54ஆவது அந்தாதிச் செய்யுளின் பதப்பிரிவும் பொருளும் பின்வருமாறு:
திதத்த தத்தித்த திதி தாதை தாத - திதத்த தத்தித்த எனும் தாள வரிசைகளைத் தனது நடனம் மூலம் நிலைபெறச் செய்யும் உனது தந்தையாம் பரமசிவனும்
![]() |
தாத - மறைகிழவோனாகிய பிரமனும்
துத்தி தத்தி தா தித தத்து அத்தி - புள்ளிகள் உடைய படம் விளங்கும் பாம்பாகிய ஆதிசேஷனின் முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று ஆனால் அலைகள் வீசுகின்ற திருப்பாற்கடலைத் தனது வாசஸ்தலமாகக் கொண்டு
ததி தித்தித்ததே து - ஆயர்பாடியில், தயிர் மிக இனிப்பாக உள்ளதே என்றுகூறி அதை மிகவும் வாரி உண்ட திருமாலும்
துதித்து இதத்து ஆதி - அதை மிகவும் வாரி உண்ட திருமாலும் போற்றி வணங்குகின்ற பேரின்ப சொரூபியான மூலப்பொருளே!
தத்தத்து அத்தி தத்தை தாத - தந்தங்களை உடைய யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவசேனையின் தாசனே!
திதே துதை - பல தீமைகள் நிறைந்ததும்
தாது - ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்
அதத்து உதி - மரணம்-பிறப்பு இவற்றோடு கூடியதும்
தத்து அத்து - ஆபத்துக்கள் நிறைந்ததுமாகிய
அத்தி தித்தி - எலும்பை மூடி இருக்கும் தோல்பை ஆகிய இந்த உடம்பு
தீ தீ - அக்னியால் தகிக்கப்படும்
திதி - அந்த அந்திம நாளில்
துதிதீ - இவ்வளவு நாட்களாக உன்னைத் துதித்து வந்த என் புத்தி
தொத்ததே - உன்னுடன் ஐக்கியமாகி விட வேண்டும்.
இந்த தெய்வீக கந்தர் அந்தாதி செய்யுட்களை பதப்பிரிவுடனும் பொருட்செறிவுடனும் இந்த இணைய.
தளத்திலேயே கேட்டு மகிழுங்கள்.

சித்ரா மூர்த்தி,
சென்னை
Mrs. Chitra Murthy
A1, Limelight
S-14, MG Road
Sastri Nagar
Adyar, Chennai-20
600020 Tamil Nadu
Cell: 9962577577
|