Lord Skanda-Murugan
 

ஸ்கந்த தண்டாயுதபாணி
பழனி மலைக் கடவுள்
ஸ்கந்த தண்டாயுதபாணி பழனி மலைக் கடவுள்

தென் இந்தியாவில் ஸ்கந்த வழிபாட்டு மரபு

கே. ஆர். வெங்கடராமன்

original English article: "Skanda Cult in South India"

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

முருகனும் ஸ்கந்தனும்

தென் இந்தியாவில் முருகன் வழிபாடு என்பது மிகப் பழமை வாய்ந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை எந்த பக்தி மார்க முறை இருந்தாலும், அவை முருக வழிபாட்டை உள்ளடக்கிக் கொண்டிருக்காமல் இருக்க முடியாது. ஏன் எனில் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மற்ற கடவுட்களின் மீதான பக்தியை விட முருகன் மீது பக்தி கொண்டவர்கள் மிக அதிகம்.

தென் இந்தியாவில் உள்ள பழங்குடி மலை வாழ் இனத்தினரான 'நாகா' என்பவர்கள் (பாம்பை வணங்கும் மலை வாழ் மக்கள்) பாம்பு என்பது முருகனை குறிக்கும்படியாக உள்ளது என்று நினைப்பதினால், கிராமப் புறங்களில் உள்ள முருக பக்தர்களுடன் தங்களையும் இணைத்துக் கொண்டு விட்டனர்.

முருகனுக்கு இருந்த பண்டையக் காலப் பெயர் 'சீயோன்' என்பது (சிவப்பு நிறக் கடவுள்). முருகனைக் குறித்து இயற்றப்பட்ட பழங்குடிப் பாடல்களில் அவரை மலைக் குடி மக்களின் கடவுள் எனவும் வேடர்களின் கடவுளாகவும் கருதியதினால் அவரை 'வேலன்' என்றே அழைத்து வந்தனர். அவர் பெண்களின் மனதில் தீராத காதலை உருவாக்குபவர் என்று நினைத்ததினால் அவர் அருளை அடைய மந்திர சக்திகளையும் கூடப் பயன்படுத்தினர். அதற்காக அவர் ஆலயத்தின் ஆண் பண்டிதர்களும், பெண் பண்டிதைகளும் தேன் சொட்டும் 'வெங்கை' (pterocarpus marsupium) என்ற மலர் மாலையை அணிந்து கொண்டு, பாடல்களை இசைத்தபடி 'வெறியாட்டம்' அல்லது 'குராவை' (Kuravai) என்ற நாட்டியம் ஆடுவது உண்டு.

கிராமப் புறங்களில் அவருக்கு நதிக் கரைகளிலும், மலை சரிவுகளிலும் ஆலயங்கள் உண்டு. காவிரிக் கரைப் பகுதியில் இருக்கும் காவேரிப் பட்டினத்தில் முருகன் திருவிழாக்களில் பெண்கள் தாரை, தம்பட்டைகளுடன் கூடிய இசை வாத்தியங்களுக்கு ஏற்ப நடனமாடும் பல நிகழ்சிகள் நடப்பது உண்டு. இவற்றுடன் அந்த பக்தி இயக்கத்தை பற்றி கூறியது முடிந்து விடவில்லை.

திருப்பரம்குன்றத்தில் திருமுருகாற்றுப்படை
பாடலை பாடியதாகக் கேள்விப்பட்ட முருகன்
நக்கீரர் மற்றும் அவருடன் இருந்த 999
பேர்களையும் விடுவித்தார்.
திருப்பரம்குன்றத்தில் திருமுருகாற்றுப்படை பாடலை பாடியதாகக் கேள்விப்பட்ட முருகன் நக்கீரர் மற்றும் அவருடன் இருந்த 999 பேர்களையும் விடுவித்தார்.

சங்ககாலத்தைச் சேர்ந்த நூல்களில் அவரை 'சேவல் ' கொடி எந்தி, 'மயில் ' அல்லது 'யானை' மீது ஏறி பவனி வரும் அபாயகரமான வெற்றி வீரன் என்கின்றனர். அவர் தேவலோகப் படைத் தலைவர். திருமுறுகாற்றுப்படையில் அவரை இமய மலையின் மன்னான ஹிமாவத்தின் மகளுக்குப் பிறந்தவர், அக்னி மூலம் இமய மலையின் அடிவாரத்தில் இருந்த பூமியில் வந்துப் பிறந்து ஆறு கிருத்திகை நட்சத்திரங்களினால் வளர்க்கப்பட்டவர் என்றெல்லாம் விவரித்து உள்ளது வரை அவருக்கு ஆரியர்களுடன் இருந்த தொடர்ப்பு முடிவடைகின்றது.

மலைப் பகுதிகளில் இருந்த 'குருவா' இனப் பெண்கள் 'சேவல்' கொடிக்கு கடுகு மற்றும் நெய் கலந்த கலவையைத் தடவிய பின், அலரிச் செடியின் பூக்களையும் பச்சை இலைகளையும் கொண்டு பின்னிய மாலையை கடவுளுக்கு அணிவித்தப் பின், ஊதுபத்திகள் ஏற்றி, ஆட்டு இரத்தம் கலந்து பிசைந்த அரிசி சாத உருண்டைகளை நேவித்தியமாகப் படைத்து ஆடல் பாடல்களில் ஈடுபடுவர் என்று திருமுறுகாற்றுப் படை என்ற நூலை இயற்றிய நக்கீரர் எழுதி உள்ளார்.

அந்த நூலின் மற்றும் ஒரு இடத்தில் தர்ம நெறிமுறைகளை அனுசரித்தபடி, ஆறு விதக் கடமைகளையும் செய்த வண்ணம் ஹோம குண்டத்தின் முன் அமர்ந்தபடி இருக்கும் பிராமணர்கள், யாகத் தீயை வளர்த்து, மலர்களை தூவி, மந்திரங்களை ஓதி ஸ்கந்தனை வழிபட்டதாக கூறப்பட்டு உள்ளது.

அந்தப் பாடல்களை அவர் இயற்றிய பொழுது அவர் இருதயத்தில் ஸ்கந்தன் அல்லது குஹா என்பவரே இருந்து இருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. அவர் அவருடைய ஆறுமுகங்களைப் பற்றி இப்படியாக விவரிக்கின்றார் ''ஒரு முகம் உலகத்தின் அஞ்ஞாமை என்ற இருளை அகற்றி வெளிச்சம் தருகின்றது. இரண்டாவது பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றுகின்றது, மூன்றாவது யாகங்களைப் பாதுகாக்கின்றது.

நான்காவது நம்முள் உள்ள ஆத்மன் என்பதை நாமே அறிந்து கொள்ள வைக்கின்றது. ஐந்தாவது முகம் தீய சக்திகளை அழிக்க, ஆறாவது முகமோ மலைப் பெண்ணான தன் மனைவி வள்ளியை நோக்கியபடி உள்ளது''.

முருகனின் முக்கியமான ஆலயங்கள் என்று திருச்செந்தூர், பழனி எனும் திருவிவானக்குடி, திருப்பரம்குன்றம், ஸ்வாமிமலை எனும் திருவீரகம், மற்றும் அழகர் கோவில் என்ற பழமுதிர்சோலை போன்றவற்றை நக்கீரர் சுட்டிக் காட்டினாலும், மற்ற இடங்களில் உள்ள அனைத்து மலை உச்சிகளில் உள்ள ஆலயங்களும் முக்கியமானவைகளே என்கின்றார்.

ஆர்யர்களுக்கு முன் இருந்த 'வேத்தா' மற்றும் 'குருவாவைப்' போலவே முருகனும் மிகவும் அழகானவராக இருந்து இருக்கின்றார். திருமுறுகாற்றுப் படையிலும் அதற்கு முன்னர் இயற்றப்பட்ட பிற பாடல்களிலும் அசுரர்களை அழித்தவர் முருகன் என்ற புகழாரம் அவருக்குச் சூட்டப்பட்டது. தமிழ் பிரபந்தங்களிலும், 'காளிதாஸன்' இயற்றிய குமார சம்பவத்திலும் அசுரர்களை அழித்து தேவர்களை சிறைகளில் இருந்து மீட்கவே முருகன் அவதரித்தார் எனக் மறைமுகமாகக் கூறப்பட்டுள்ளது.

'அவித்யா' என்ற அறியாமையை குறித்த -மோகம், குரோதம் மற்றும் அகங்காரத்தை- உள்ளடக்கிப் பிறந்த மூன்று அசுரர்களான 'சூரபத்மன்', 'சிம்மமுகன்' மற்றும் 'தாரகா' போன்றவர்களின் அறியாமையை அழித்து அவர்களை வெளிச்சத்தில் கொண்டு வரும் வகையில், அவர்களின் அறியாமை என்ற அவித்தியாவை தன் வேலால் அழித்தார்.

ஸ்கந்த சுப்பிரமண்யன்- சிவன்

ஏழாம் நூற்றாண்டு முதல் தொடர்ந்து கண்டு பிடிக்கப்பட்டு வந்த பல சிலைகளின் மூலம் முருக பக்தி தமிழ் நாட்டில் எந்த அளவு பரவி இருந்தது என்பது புரியும். சோழ காலத்தைச் சேர்ந்த பல சிவன் ஆலயங்களில் ஏழு முதல் முப்பத்தி ஐந்து விதமான சிறு சன்னதிகள் இருந்தன.

அந்த சன்னதிகளில் ஒவ் ஒன்றிலும் நிச்சயமாக ஒரு சுப்பிரமண்ய ஸ்வாமியின் சன்னதி இருந்தது. 871-907 ஆம் ஆண்டுகளில் ஆதித்திய சோழனுடன் சம்மந்தப்பட்டிருந்த 'இராஜகேசரி' என்ற மன்னன் ஆட்சியில் 'ஸவயம்பிரதானா' என்ற பாலசுப்பிரமண்ய ஸ்வாமி ஆலயம் 'கண்ணனூரில்' கட்டப்பட்டது. 'கர்ராலி' (Karrali) எனப்பட்ட அந்த ஆலயம் அடி முதல் மேல் பகுதி வரை கற்களால் கட்டப்பட்டிருந்தது.

கருவறைக்கு மேல் நான்கு மூலைகளிலும் உள்ள தூண்களின் மீது யானை சிலைகள் உள்ளன. ஸ்கந்தனின் இந்த - 'கர்ராலி' - ஆலயம் மற்றும் அதற்குப் பின் கட்டப்பட்ட மற்றும் பல ஸ்கந்தன் ஆலயங்களிலும் கற்பக்கிரஹங்களில் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த சிலைகள் அனைத்தும் சிவன் ஆலயங்களில் உள்ளவற்றைப் போன்றே அமைந்துள்ளன.

அந்த ஆலயத்தின் தென் பகுதியில் உள்ள சுவற்றில் உள்ளது 'தக்ஷிணாமூர்த்தியின்' சிலை. 'கண்ணனூரில்' சிதைந்த நிலையில் உள்ள பாலசுப்பிரமண்ய ஸ்வாமியின் ஒரு கை 'சின்ன' முத்திரையைக் காட்டியபடியும், மற்றும் ஒன்று ஜெபமாலையை ஏந்தியும், மூன்றாவது ஒரு சக்தி வேலை தன் கையில் வைத்தபடியும் காட்சி தருகின்றது. திருவேங்கைவாசல் என்ற பதினொன்றாம் நூற்றாண்டை சார்ந்த ஆலயத்தில் உள்ள சுப்ரமணியர் சிலை அபூர்வமானது.

அதில் அவர் 'வீராசனா' (veerāsana) என்ற தோற்றம் தந்தபடி ஜெபமாலை ஒன்றையும், சக்தி வேலைத் தாங்கி பிடித்தபடியும் காட்சி தருகின்றார். அதைத் தவிற தன் கைகளில் ஜெபமாலை ஒன்றையும், அமுதக் கலசத்தை வைத்தபடியும் உள்ள அவரது சிலைகளும் கிடைத்து உள்ளன. ஜெபமாலை, அமுதக் கலசம், முத்திரைச் சின்னம் ஆகியவை தக்ஷிணாமூர்த்தி என்ற - ஞானகுரு- வடிவத்தில் உள்ள சிவனைக் குறிக்கின்றன. அது மட்டும் அல்ல ஞான சக்திகளான சாரதா தேவி, திருபுரசுந்தரி போன்றவர்களையும் அது குறிக்கின்றது. சுப்பிமணியரே ஞான பண்டிதரும் குருவும் ஆனவர்.

ஆறாம் நூற்றாண்டில் மலை வாழ் மக்கள் கொண்டிருந்த வழிபாட்டு முறைகளில் இருந்தும் 'வேத்தா', மற்றும் 'குறவாக்களின்' வழிமுறைகளில் இருந்தும் மாறுபட்டு சைவ அகமங்களின் பாதையில் முருக பக்தி இயக்கம் செல்லத் துவங்கியது. 'குமார தந்திரா' என்பது 'சிவ தந்திராவின்' கிளையாகவே கருதப்பட்டது.

ஸ்கந்தனுக்கும் சிவபெருமானின் குணங்களான மகாயோகி, பூதங்களின் தலைவர், துயர் தீர்ப்பவர் போன்ற அனைத்து குணங்களும் இருந்தனவாம். உமையுடன் சிவன் இருந்து கொண்டு இருந்தாலும் அவர் தூய துறவியின் தன்மைகளையும் கொண்டவர்.

அது போலத்தான் தேவசேனா-வள்ளியின் கணவரான சுப்பிரமண்யரும் பெரும் துறவிதான். ஐம் பூதங்களும் சிவ கணங்களே. ஆகவே பிரகாசமாக வெளித் தெறித்த ஆகாயம், பூமி, வாயு, தண்ணீர் மற்றும் நிலம் அனைத்துமே ஸ்கந்தனின் உருவைப் பெற்றன.

ஸ்கந்தனின் உருவங்கள்

ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுகளில் இருந்த பல்லவ வம்ச காலத்தின் சோமஸ்கந்தா சிற்பங்களின் மூலமே சிவ பார்வதியுடன் சேர்ந்து இருந்த முருகன் சிலைகளை பற்றிய செய்தி முதலில் நமக்குத் தெரிய வந்தது.

சோமஸ்கந்தனின் பித்தளை உலோகச் சிலைகள் சோழர்களின் கலைவண்ணத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரே பீடத்தில் நின்றபடி உள்ள சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் முருகன் உள்ளது போன்ற சிலைகளும் உள்ளன. வட இந்தியாவில் 'குப்தா' மற்றும் 'பலா' மன்னர்கள் காலத்திய 'ஹரா-பார்வதி' சிலைகளைப் போலவே இருந்த 'பல்லவர்' மற்றும் 'சோழர்' கால சிலைகளான உமா-மஹேஸ்வரரின் உலோகச் சிலைகளை விட சோமஸ்கந்தாவின் சிற்பங்கள் அற்புதமானவையாக இருந்தன.

வாழ்கை என்பதை சிவபெருமானும், விவேகத்தை பார்வதியும் மற்றும் பேரானந்தத்தை முருகனும் குறிக்கின்றனர். அந்த மூவரும் இணைந்து இருப்பதே பரப்பிரும்மன் என்ற வாழ்கை -விவேகம்-பேரானந்தம் என்பது ஆகும்.

ஸ்கந்தன் என்ற ஆறு எழுத்துக்களில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்கள் சக்தி ரூபத்தையும், அடுத்த இரண்டு குமாரரையும், கடைசி இரண்டு எழுத்துக்கள் சிவ ரூபங்களையும் குறிக்கின்றன. ஆனந்த வடிவமானவரே மேன்மையான அவர், தொடரும் வாழ்க்கையும் விவேகமுமே ஆனந்தமான அவர்.

ஆக ஷன்முகன் என்ற ரூபத்தில் அவர் சிவன்-பார்வதி இருவரையும் அடக்கி வைத்து இருக்கின்றார். அவருக்கு உள்ள ஆறு முகங்களில் ஐந்து முகங்களில் சிவபெருமானையும், ஒன்றில் பார்வதியையும், பன்னிரண்டு கைகளில் பதினொன்று கைகளில் உள்ள முத்திரை மற்றும் ஆயுதங்களை ருத்திரனாகவும், பன்னிரண்டாவது கையில் சக்தியான தேவியையும் காட்டுகின்றார்.

அந்த சிற்பங்கள் மூலம் ஸ்கந்த தத்துவத்தை மேலும் வெளிக் காட்டுகின்றார். வேதங்களைக் குறிப்பதே அவருடைய வாகனமான மயில். அவரே வேதங்களின் சாரமான ஓம் என்ற பிரணவம். அவருடைய ஆயுதமான சக்திவேல் என்பது பிரும்ம வித்யா எனும் ஞான சக்தியைக் காட்டுகிறது. வலப்புறத்தில் உள்ள வள்ளி மூலம் இச்சா சக்தியையும், இடது புறத்தில் உள்ள தேவசேனா மூலம் கிரியா சக்தியையும் காட்டுகின்றார். வேதங்கள் சப்தங்கள் மூலமே வெளிப்படுவதால் மாயா என்ற உலகை அழகான மயில் மூலமும், நிவுரத்தி என்ற விவேகத்தை சேவல் கொடி மூலமும் காட்டுகின்றார்.

'ஆதி சங்கரர்' தனது 'புஜாங்கப்பிராயத' என்ற ஸ்தோத்திரத்தில் ஸ்கந்தனைப் பற்றி கூறுகையில் அவரை 'மகாவேதபாவ்யா' (வேதங்களின் சாரமானவர்), என்றும், 'மஹாவக்ராயகுண்டா' (வேதங்களில் கூறப்பட்டுள்ள உண்மைகள்) என்றும் வர்ணித்து உள்ளார்.

தென் இந்தியாவில் ஸ்கந்த பக்தி மார்கங்களும், அவர் புகழும்

இராமாயணம், மகாபாரதம்,மற்றும் பிற புராணங்களிலும் ஸ்கந்தனைப் பற்றிய எழுதப்பட்டுள்ள கதைகள் தென் இந்தியாவில் புகழ் பெற்றவை. ஆனால் அவருடைய லீலைகளைப் பற்றியும், அவருடைய அவதாரம் குறித்தும் 'கந்த புராணத்தில்' உள்ள 'சங்கர சம்ஹிதாவில்' எழுதப்பட்டு உள்ளவைகளே நம்பத் தகுந்தவையாகும். அதை தமிழில் 'கந்த புராணம்' என்ற பெயரில் பத்தாம் நூற்றாண்டில் வெளியிட்டனர்.

ஸ்கந்தன் புகழ் பாடும் பாடல்கள் தமிழில் அதிகம் உண்டு. கந்தனின் புகழை கூறும் பாடல்கள் 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதராலும், 17 ஆம் நூற்றாண்டில் குமாரகுருபரராலும் எழுதப்பட்டுள்ளன.

மேன்மையான எண்ணங்களும் வெளித் தெரியாத உள்ளுணர்வுகளும் உள்ளடங்கிய அருணகிரிநாதர் பாடல்களுக்கு இணையானது வேறு ஒன்றும் இல்லை. ஸ்கந்த முருகனின் மீதான அவருடையப் பாடல்கள் நம்மை ஸ்கந்தனின் உள்ளிருக்கும் 'ஸ்வருப லக்ஷணா' என்ற 'நிஷ்கலா பரமானந்த வெளி', அதாவது 'உருவமற்ற பேரானந்த நிலை'க்கு நம்மை அழைத்துச் சென்று விடும்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவினரும் அவர் மீது துதிப் பாடல்களைப் பாடியபடி முருகன் ஆலயங்களை நோக்கிப் படை எடுப்பதும், காவடிகளை தூக்கிக் கொண்டு போவதும், மரக் கழிகளில் கட்டப்பட்ட குடத்தில் பால், சக்கரை, தேன், பழங்கள், பூ மாலைகள் என பலவற்றையும் கட்டி எடுத்துப் போவதும் தென் நாட்டில் மட்டுமே பார்க்க முடிந்த அற்புதமான காட்சியாகும். ஒருவரது வாழ்க்கையில் உள்ள பிறப்பு இறப்பு போன்றவற்றின் குறைகளை அவர் களைந்து விடுகின்றார்.

குகை போன்ற தங்களுடைய இருதயத்தில் அமர்ந்து கொண்டு, தங்களுக்கு வழி காட்டியாக இருக்கும் முருகனை மாபெரும் சித்தர்கள் அன்புடன் …'குருகுஹா' … என அழைக்கின்றனர்.

Index of Research articles on Skanda-Murukan