Lord Skanda-Murugan
 

தென் ஆப்ரிக்காவில் தமிழ் மொழியும் முருக வழிபாடும்

Murugan-Pillaiyar

எஸ். சுப்பிரமணியன்

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

ஒருவருடைய பேச்சும், மூச்சும், செயல்பாடுகளும் அவரவர்கள் பேசும் மொழிக்கேற்ப அமைந்து விடுகின்றது. சைகையினாலோ அல்லது வாய் மொழி மூலமோதான் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஒரு மொழிக்கு (அதாவது அவர்கள் சார்ந்துள்ள இனம்) கிடைக்கும் மரியாதைக் கூட அந்த மொழியை பேசுபவர்கள் பின்பற்றி வரும் தெய்வீக வாழ்க்கை முறைக்கு ஏற்பவே அமைந்து உள்ளது. தெய்வ நம்பிக்கை என்பது எந்த அளவு ஒருவனிடம் ஊறி உள்ளதோ, அந்த அளவிற்கு அது அவனுடைய சமுதாய முன்னேற்றத்திற்கும், மேன்மையான சமூக, கலாசார உறவுகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கவும் உதவுகின்றது என்றாலும் அதன் பெருமைக்குக் மூல காரணமாக இருப்பது அவன் பேசும் மொழிதான். ஒரு மொழியே அனைத்துத் தொடர்புக்களுக்கும் ஒரு பாலமாக அமைகின்றது.

''எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்'' என்பது ஒரு தமிழ் பழமொழி. அதாவது எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கையும் அதன் வடிவங்களுமே மக்களின் கண்கள் என்று கூறப்படுகின்றது. 'எழுத்தே இறைவனுக்கும்' அதாவது ஒலியைக் கொண்ட வார்த்தையே கடவுளைக் குறிக்க, வார்த்தைகளின் ஒலியே பிரும்மன் என்பதால் சமிஸ்கிருத மொழியில் அதை 'அட்சர பிரும்மா' என்று கூறுவார்கள்.

வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் எங்கிருந்தாலும் அன்றாட வாழ்வில் அவர்கள் வழக்கத்தில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் தாய்மொழியே அவர்களுக்கு தெய்வீகத்தை முற்றிலும் புரிந்து கொள்ள உதவும்.

அதனால்தான் மொழியே தெய்வம் எனவும், தெய்வமே ஒரு மொழி எனவும் நம்பப்படுகின்றது. ஆக ஒருவர் உபயோகிக்கும் மொழியே சமுதாயத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் ஒரு தொடர்பு சாதனமாக அமைந்து விடுகின்றது. இந்திய மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வளர்ந்து வரும் நாகரீக உலகில் வாழ்ந்து கொண்டு இருந்தாலும், தெய்வீகத்தில் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடே அன்புடன் பழகும் நற்குணம் படைத்த மக்களாக அவர்களை வைத்து உள்ளது. மேல் நாட்டினரோ நாகரீக வளர்ச்சி என்பது வாழ்வில் மேன்மேலும் கிடைக்கும் சிற்றின்பங்களின் வளர்ச்சியே என நினைக்கின்றார்கள்.

தென் ஆப்ரிக்க நாட்டு இந்து மகா சபாவின் கூட்டுச் செயலாளரான ஆர். குல்லிடீன் (R. Kallideen) என்பவர் ''தாய் மொழியே கலாசாரத்தின் அச்சாணி எனவும், தாய் மொழியை அலட்சியப்படுத்துவது அவர்கள் சார்ந்துள்ள இனத்தின் கலாசார இழப்பிற்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை, சமூதாயத்தில் அவர்களுக்குள்ள மதிப்பும் அழிந்து போக அது வழி வகுத்துவிடும்'' என்று கூறினார்.

தென் ஆப்ரிக்க நாட்டில் குடியேறிய தமிழர்கள் வரலாறு

தென் ஆப்ரிக்க நாட்டில் உள்ள 'நடால்' (Natal) என்ற நகரத்தில் இருந்த ஆங்கிலேய முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருந்த கரும்பாலைகளில் பணி புரிய இந்திய வம்சாவளியினரான தென் இந்தியர்கள் 1860 ஆம் ஆண்டு முதல் 1911 ஆம் ஆண்டு வரை அங்கு அழைத்து வரப்பட்டனர். நடாலில் வந்து குடியேறியவர்களில் மூன்று பிரிவினர் இருந்தனர். தமிழ் மொழி பேச மட்டுமே தெரிந்த கீழ் நிலைத் தொழிலாளிகள், குதிரை கொட்டளங்களிலும், விடுதிகள், நெடுஞ்சாலைகளில் உள்ள உணவு விடுதிகள், அலுவலகங்கள், எஜமானர்களின் வீடுகள் மற்றும் காப்பகங்களில் பணி புரிய வந்த இரண்டாம் பிரிவினர்கள். அவர்களுக்கு தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரியும் என்பது மட்டும் அல்ல தடுமாறியபடி சில ஆங்கில சொற்களை பயன்படுத்தக் கூடியவர்கள். அடுத்தது தமிழில் நல்ல புலமை பெற்றவர்கள், ஆங்கிலமும் நன்கு அறிந்தவர்கள் என்ற மூன்றாவது பிரிவினர்கள். அவர்கள் அங்கு வந்த வணிகர்கள். அவர்கள் அங்கு வந்து குடியேறியயாதும் அங்கிருந்த இந்திய வம்சாவளியினருக்கு உதவியவாறும் அவர்களுக்குள் சமுதாய, கலாசார, இன நல்லிணக்கத்தையும் பெருக்கி வந்தனர்.

முதல் இரண்டு பிரிவினை சார்ந்த மக்கள் தாய் மொழியில் கல்வி பெறாததினால், தம்முடைய வாரிசுகளுக்கு அங்கு வந்து குடியேறிய இந்திய மக்களில் இருந்த நல்ல கல்வி ஞானம் பெற்ற ஆசிரியர் மூலம் கல்வி அறிவு புகட்டினர்கள் . அவர்களை வாத்தியார் என்ற பெயரில் அழைத்து ( குரு) கௌரவித்தனர். அந்த வாத்தியார்கள் மூலமே இரண்டாவது மற்றும் மூன்றாவது வம்சாவளிகள் தமிழ் மொழியைக் கற்றரிந்து தமிழ் சமுதாய கலாசாரத்தை புரிந்து கொள்ளும் வகையில் கல்வி அறிவு பெற்றனர்.

அதற்கு எளிதாக முருகனே வழிபாடு ஒரு மார்கமாக இருந்தது . அதற்குத் தேவையாக இருந்தது ஒரு வேல் மட்டுமே. அந்த கால கட்டத்தில் முக்கியமான சில ஆலயங்களில் வேல் வழிபாடு முடிந்தப் பின் அங்கு வந்திருந்த வாத்தியார்கள் என அழைக்கப்பட்டவர்கள் அங்கேயே கல்வி கற்றுக் கொடுக்கத துவங்க, அவர்களுடைய அறிவுரைகள் வேத வாக்காக அமைந்து இருந்தது. 1868 ஆம் ஆண்டில் போர்ட் டர்பன் (Port Durban) என்ற நகரில் இருந்த கிளேர் எஸ்டேட்டில்தான் (Clare Estate) இப்படிப்பட்ட பாட முறை நடைபெறத் துவங்கியது. வெளிநாட்டில் சென்று குடி புகுந்தவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்தபடி சிறு சிறு ஓலைக் குடிசைகளில் ஆலயங்களை அமைத்துக் கொண்டு அதிலேயே கல்வி கற்க வேண்டி இருந்தது.

சமூக மத வழிபாட்டு முறை

தமிழர்கள் தம்முடைய வம்சாவளிகளின் வழக்கத்தின்படி தனி நபர் தெய்வ வழிபாடு, குடும்ப தேவதை வழிபாடு, கிராமியக் கடவுள் வழிபாடு மற்றும் உயர் நிலைக் கடவுள் வழிபாடு - அதாவது சிவன், சக்தி, நாராயணர், பெருமாள் மற்றும் முருகன் போன்ற கடவுட்களை வழிபடுவது - என அனைத்தையும் தொடர்ந்து கடைபிடித்துக் கொண்டு வந்தார்கள். முதலில் கூறப்பட்ட மூன்று வழிபாட்டு முறைகளையும் தங்களுடைய மனதிற்கு தோன்றிய வண்ணம் செய்து கொண்டிருக்கையில், நான்காவது வழிபாட்டு முறையான உயர்நிலை கடவுள் வழிபாடு துவக்கப்பட்டப் பின்னர்தான் அவர்களுக்கு நடால் மற்றும் பிற இடங்களில் இருந்த இந்தியர்கள் மத்தியில் கௌரவம் கிடைத்தது. ஆக அதன் பின்னர் தென் இந்தியர்கள் தாங்கள் விரும்பியபடி சிவன், விஷ்ணு மற்றும் முருக வழிபாட்டை கடைப் பிடிக்க முடிந்தது.

அதே நேரத்தில் கீழ் நிலை தொழிலாளிகள் முருக வழிபாட்டை பெரிதும் விரும்பினர் என்பதின் காரணம் அவர்களுக்கு அந்த வழிபாட்டு முறை எளிதாகவும் அவர்களுக்கு புரியும்படியான முறையிலும் அமைந்து இருந்தது. மேலும் ஆலய திருவிழாக்களில் இரவு 9 மணி முதல் விடியற் காலை 5 மணி வரை அப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளை எடுத்துக் கூறும் வகையில் நடந்தேறிய கிராமிய நிகழ்ச்சிகள், மற்றும் நடந்தேறிய பாடல்கள் மூலமும் அவர்களால் வழிபாட்டு முறைகளை எளிதில் அறிந்து கொள்ள முடிந்திருந்தது.

அந்த நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் வள்ளித் திருமணம், சூரசம்ஹாரம் போன்ற நாடகங்கள் நடந்தேறின. நடைபெறும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை இரவு முழுவதும் கண் விழித்துக் கொண்டு பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு விதத்தில் விரதம் இருப்பதைப் போன்றதே எனவும், அதன் பலனாக கடவுளின் அருள் தங்களுக்குக் கிடைக்கும் எனவும் தமிழர்கள் நம்பினர். பழங்காலத்தில் இருந்த தமிழ்குடி மக்கள், கடவுளிடம் தமக்கு இருந்த பக்திப் பெருக்கின் காரணமாக அப்படிப்பட்ட கலை நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொண்டது மட்டும் அல்லாமல், தங்களுக்கு இருந்த இயற்கையான நினைவாற்றல்களினால் தம்முடைய அடுத்த வாரிசுகளுக்கு, தாங்கள் கண்டதையும் கேட்டதையும் வாய்மொழிச் செய்தியாக விளக்கிக் கூறி வந்தார்கள். அதன் பயனாக அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த சந்ததியினர் அனைவரினாலும் அவற்றை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

பழைய காலத்தில் முருகனைக் குறிக்கும் வேல் ஒன்றை எந்த இடத்திலாவது பிரதிஷ்டை செய்தப் பின் தமக்குத் தெரிந்த தெய்வீகப் பாடல்களைப் பாடியவண்ணம் பூஜைகளை செய்து அதை வழிபட்டனர். இரும்புக் கம்பிகளைக் கொண்டும் ஓலைகளைப் பின்னியும் கட்டப்பட்ட குடிசைகளில் ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. 1865 முதல் 1949 ஆம் ஆண்டுவரை நன்கு கற்றரிந்த வாத்தியார்கள் அங்கு பூசாரிகளாக இருந்து கொண்டு அவற்றை நிர்வாகிக்கத் துவங்கியதும் அனைவரும் முருகனைக் குறிக்கும் சின்னமே வேல் என்ற கருத்தை ஏற்கலாயினர்.

வேல் என்பது முருகனைக் குறிக்கும் சின்னம் என்பதினால் பண்டையத் தமிழர்கள் எப்பொழுதெல்லாம் தங்களுக்கு குறைகள் தோன்றினவோ அப்பொழுதெல்லாம் அந்த வேலையே முருகனாக பாவித்து வணங்கினர். அது போலவே மன்னர்களும் தாங்கள் போருக்குப் புறப்பட்டுப் போகும் முன்னர் முருகனை வேல் உருவத்தில் வணங்கி ஆசி பெற்றனர். (நற்றிண 244, குறுந்தொகை 263). ஆக சங்க காலத்திலேயே வேல் வழிபாடு என்பது இருந்து வந்துள்ளது எனத் தெரிகின்றது.

1875 ஆம் ஆண்டுவரை, அவரவருக்குத் தெரிந்த சில குறிப்பிட்ட வழி முறைகளில், கிராமியப் பாடல்களைப் பாடியவண்ணம், அங்கு இருந்தவர்கள் முருக வழிபாட்டினை தொடர்ந்து கொண்டு இருந்த நிலையில், அங்கு அவ்வப்பொழுது தற்காலிகமாக விஜயம் செய்யத் துவங்கிய யாத்திரீகர்களினால் முருக வழிபாட்டு முறை சற்று மாற்றம் பெறத் துவங்கியது. அப்படிப்பட்ட யாத்ரீகர்கள், முருகனைப் பற்றிய பாடல் புத்தகங்கள், இலக்கியங்கள், காவியங்கள் மற்றும் பல விதமான புத்தகங்களையும் எடுத்து வரத் துவங்க முருக பக்தி இயக்கம் இன்னும் தீவிரமடைந்தது. 1868 ஆம் ஆண்டு முதல் நாடாலில் யாத்ரீகர்களும் தங்கள் ஊர்களுக்குச் சென்று விட்டுத் திரும்பிய தொழிலாளிகளும், முருகனின் சிலைகளையும் , படங்களையும் எடுத்து வரத் துவங்கினர்.

சாமியாடுதல்

பக்தர்கள் மீது சாமி ஏறுதல் என்பது முருக வழிபாட்டில் முக்கிய அம்சமாக விளங்கியது. சாமியாடிகளைக் கண்ட மற்ற பக்தர்களுடைய மனதில் பய உணர்ச்சி தோன்றி அவர்களை அந்த பய உணர்ச்சியே தீய வழிமுறைகளில் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியது. அது மட்டும் இன்றி அவர்களுடைய வெள்ளைக்கார துரைகள் மற்றும் மேலதிகாரிகளிடம் தினமும் அவர்கள் பட்ட கொடுமைகளில் இருந்து தப்பிக்கவும் வழி வகுத்தது.

சாமியாடி முருக பக்தர்களின் மன நிலைமை இன்னொரு உலகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று விடுகின்றது. காவடியைத் தூக்கிய வண்ணம் போகும் பொழுது பாடப்படும் பாடல்களின் சக்தியினால் சிலர் சாமியாடத் துவங்கி விடுகின்றனர். அந்த நேரங்களில் முருக பக்தர்களான அவர்கள் வெளிக் காட்டும் உடல் பலம், தமிழில் கூறும் செய்திகள், அந்த நேரங்களில் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு சாமியாடி பக்தர்கள் தரும் பதில் போன்றவற்றைக் பார்த்த மற்ற பக்தர்கள் மனதில் கிலி பிடித்து அவர்களை பயத்தில் ஆழ்த்தி விடுவது உண்டு. நடுக் கடலில் தத்தளிக்கும் கப்பல் பத்திரமாக கரை வந்து சேர்வது போல அந்த நேரங்களில் அவர்கள் மனக் கஷ்டங்கள் இல்லாமல் துயரங்களின் நினைப்பில் இருந்து விடுதலைப் பெற்று நின்றனர். சாமி ஏறிவிட்ட பக்தர்களிடம் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கான பதிலைத் தரும் சாமியாடிகள் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கான காரணத்தையும், அந்த கஷ்டங்கள் தீர வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும் என்பன போன்றவற்றை தூய தமிழ் மொழியில் விளக்கிக் கூறத் துவங்க ஆரம்பித்ததும் அதுவரை தாங்கள் இரகசியமாக வைத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் அம்பலம் ஆகும் பொழுது அந்த விஷயங்கள் சாமி ஏறிவிட்ட பக்தர்களுக்கு எப்படி தெரிந்தன என பயந்து போய் நிற்பார்கள்.

பலருக்கும் அவரவர்களுடைய பிரச்சனைகள் தீருவதற்கு சாமியாடிகள் வழி முறைகளைக் கூறுவது உண்டு. அவற்றில் தாங்கள் முன்னர் சில சமயத்தில் வேண்டிக் கொண்டவற்றை பின்னர் செய்ய மறந்து போனவை, பிரார்த்தனைகளை நிறைவேற்றாமல் இருந்தது, ஆலயங்களுக்கு செலுத்த வேண்டிய மறந்து போன நேர்த்திக் கடன்கள், காணிக்கைகள் என அனைத்தும் அடங்கி இருக்கும். அது மட்டும் அல்லாமல் சாமி ஏறிவிட்ட நேரங்களில் தங்களைக் கொடுமைப்படுத்தும் மேலதிகாரிகள் மற்றும் முதலாளிகளின் ரகசியங்களையும் சாமியாடிகள் கூறத் துவங்கி விடுவார்கள். அதனால் பயந்து போய் முருக பக்தர்களையும், சாமியாடிகளையும், அவர்களை முன்னர் கொடுமைப்படுத்தி வந்தவர்கள், ரகசியம் வெளிப்பட்ட பயத்தினால் மேலும் அவர்களை கொடுமைப்படுத்துவதைத் தவிர்த்து விடுவார்கள்.

அதே சமயம் சாமியாடிகளிடம் அவர்களுடைய முதலாளிகளுக்கும் மேலதிகாரிகளுக்கும் அவரவர்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு கேட்பார்கள். அதனால் அந்த பக்தர்களின் முருக பக்தி இன்னமும் தீவிரம் அடைவதுண்டு. சாமியாடிகளினால் கூறப்படும் அனைத்தும் தமிழ் மொழியில்தான் இருக்குமே ஒழிய ஆங்கிலத்தில் பேசுவதில்லை . கானாவை (Ghana) சேர்ந்த ஹவுஸ்கா (Songhay) என்ற இன மலை வாழ் மக்கள் பிற இடங்களில் சென்று குடி அமர்ந்த பொழுது, தாங்கள் குடியேறிய நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாறிக் கொள்ள எப்படி சாமியாடிகளின் உதவியை நாடினர் என்ற ஆராய்ச்சியை பிரான்ஸ் நாட்டு திரை கலைஞ்சரான ஜியான் ராக் (Jean Rough) என்பவர் செய்தார்.

அது போலவே ஆப்ரிக்க நாட்டில் வந்து குடியேறிய தமிழர்களும் அந்த சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சாமியாடிகளின் துணையை நாடினர். அங்கிருக்கும் ஐந்தாம் வம்சாவளியினாருக்கு காவடி என்றால் என்ன என்றும் தமிழ்ப் பாடல்களின் அர்த்தங்களும் புரிந்தாலும், ஐரோப்பிய கலாசாரத்தில் மயங்கி விட்டதினால் தங்களுடைய சமூகத்தினரையும், வயதான பெரியவர்களையும் சற்றும் மதிக்காமல் இருந்திருந்தார்கள் . ஐரோப்பிய கலாசார மயக்கமும், தமிழ் மொழியை கற்பதில் ஏற்கனவே உள்ள சந்தர்ப்பக் குறைவுகளும் சேர்ந்து கொள்ள, தாய்மொழியான தமிழை அவர்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டார்கள். அதே சமயத்தில் முருகப் பெருமானிடம் அவர்களுக்கு இயற்கைலேயே அமைந்து உள்ள பக்தியில் உந்தப்பட்டு அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். சாமியாடிகள் கூறிய செய்திகள் தூய தமிழில் இருந்ததினால் அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூற வேண்டி இருந்தது.

முதல் கட்டமாக 1860 ஆம் ஆண்டு முதல் 1899 ஆம் ஆண்டு வரையிலும், இரண்டாவது கட்டமாக 1900 ஆம் ஆண்டு முதல் 1949 ஆம் ஆண்டு வரையிலும் எழுப்பப்பட்ட ஆலயங்களில் சிவன், சிவசுப்பிரமணியர், மற்றும் சுப்பிரமணியர் போன்றவர்களின் ஆலயங்கள் அடங்கும். அந்த ஆலயங்கள் அனைத்துமே அங்கு குடியேறி தம்மை பொருளாதாரரீதியாக நல்ல நிலைக்கு ஆளாக்கிக் கொண்டு விட்ட தென் இந்திய மக்களால் கட்டப்பட்டவை ஆகும். அந்தக் ஆலயங்களில் சிவன், சக்தி, வினாயகர், முருகன், திருமால் போன்றவர்களுக்கும் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் அவரவர்களுக்கு விருப்பமான தெய்வத்தை வழிபட முடிகின்றது.

காவடித் திருவிழாவும் பக்தியும்

1900 ஆம் ஆண்டு முதல் 1949 வரையிலான காலகட்டத்தில் நடாலில் இருந்து தென் இந்தியாவிற்கு அடிக்கடி கப்பலில் பயணம் செய்து கொண்டு இருந்த மக்கள் தங்களுடைய முந்தைய பழக்க வழக்கங்களின்படி பூஜை முறைகளை தொடர முடிந்தது. முருக வழிபாட்டிற்கு காவடி எடுப்பது முக்கியமானதாகக் கருதப்பட்டது. அந்த திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவதைப் போலவே எளிமையான வாழ்க்கை முறைகளைக் கடை பிடித்து விரதங்கள், வேண்டுதல்கள் போன்றவற்றை மேற்கொண்டனர். அங்குள்ள ஆலயத்திற்கு குடும்பத்தினருடன் சென்று முருகப் பெருமான் மீது பக்திப் பாடல்களைப் பாடினார்கள். ஆனால் அப்படிப்பட்ட பழக்கங்கள் இப்போது மெல்ல மாறத் துவங்கின. இப்பொழுதெல்லாம் சிறிய சடங்குகளை செய்வதில் மட்டுமே பலரும் ஆர்வமாக உள்ளனர். ஆலயங்களில் பூசாரிகளாக இருக்க பலரும் விரும்பினார்கள்.

இறை வழிபாடுகளில் அங்குள்ள சில வாத்தியார்களும் பூஜாரிகளும் முழு அளவிலான தேர்ச்சி பெறாவிடிலும் அந்த ஆலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுபவர்களாக இருப்பதால் பக்தர்கள் இடையே பெரும் மரியாதையும் மதிப்பும் அவர்களுக்கு இருந்தது . அந்த பூஜாரிகள் காவடியில் பாடப்படும் பாடல்களைக் கூட சிறியதாக மாற்றித் அமைத்துக் கொண்டு இருந்த பொழுதிலும் அதையும் பக்தர்கள் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு விட்டனர்.

மக்களிடையே அவர்கள் பெரும் மரியாதை பெற்றிருப்பதையும் அவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும் மக்கள் கூட்டத்தையும் பார்க்கும் பொழுது முதலில் அந்த பூஜாரிகளுக்கு காவடிப் பாடல், சிந்து, கிலிக்கணி போன்ற இசைப் பாடல்களிலும், வார்த்தை உபயோகங்களிலும் தக்க பயிற்சி அளிக்கப்பட்டால்தான் தாய்மொழி வளர்ச்சி அடையும் என்பது தெரிகின்றது.

1993 ஆம் ஆண்டு முதல் காவடித் திருவிழா எப்படி நடைபெறுகின்றது?

இப்பொழுதெல்லாம் ஒலி நாடாக்கள் மூலம் ஆலய பண்டிதர்களால் ஒலி பரப்பப்படும் பாடல் இசையைக் கேட்டவண்ணம் காவடியை தங்களுடைய தோள்கள் மீது வைத்துக் கொண்டு பக்தர்கள் ஆலயங்களை சுற்றி விட்டு வந்து விடுகின்றனர். இப்பொழுதெல்லாம் ஆலயங்களில் மூன்று முறை பிரதர்ஷணம் செய்யும் பொழுது கூட காவடி எடுப்பவர்கள் அந்த பாடல்களை தாங்களும் சேர்ந்து கொண்டு பாடுவது இல்லை. அப்படி பாடுமாறு எவரும் அவர்களுக்கு அறிவுறை கொடுப்பதும் இல்லை. கடமைக்காக நடத்தப்படும் ஒரு சடங்கு போல அந்த விழா மாறி விட்டது. பலருக்கும் காவடி என்றால் என்ன என்றே தெரியாது. அங்கு வருபவர்களுடைய இதயத்தில் பக்தி உள்ளது. ஆனால் அவர்களை சரியான மார்கத்தில் அழைத்துச் செல்லவோ, தாய் மொழியின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துக் கூறவோ, பிரார்த்தனைகளின் முக்கியத்தவத்தைப் பற்றி கூறவோ எவரும் அங்கு முனையவில்லை. நல்லவற்றையும் யாருமே அவர்களுக்கு எடுத்துரைப்பது இல்லை. ஆலயத்தில் உள்ள பண்டிதர்கள் அவர்கள் பணிபுரியும் ஆலயத்திற்கு பெரும் அளவிலான நன்கொடைகளை வசூலிப்பதில் மட்டுமே ஆர்வமாக தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனரே தவிற வேறு எதுவும் செய்வதில்லை என்றாலும் கூட அவர்களே சமூகத்தில் பெரிதும் மதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

மிக எளிய முறைகளில் தவறான வழிகளில் பணம் சேர்க்கத் துவங்கிவிட்ட பூஜாரிகளினால் தெய்வீகமும் குறைந்து தாய்மொழியின் வளர்ச்சியும் சீர்குலைய ஆரம்பித்து விட்டது. குறிப்பிட்ட திருவிழாக் காலங்களில் மட்டும் ஆலயத்தில் வந்து பணி புரிந்து கொண்டு பண்டிதத்தை முறையாக செய்யத் தெரியாமல் இருப்பவரை கூட பூசாரி என்றும், நன்கு பண்டிதம் கற்று அறிந்தவர்களை பண்டிதர்கள் எனவும் அழைக்கலாயினர் . தாய்மொழியைப் பற்றியோ, சமூக கலாச்சாரங்களைப் பற்றியோ தெரியாத ஆலய நிர்வாகக் குழுவினர் நன்கு பயிற்சி பெற்றவர்களை ஆலய வேலைகளில் சேர்ப்பது இல்லை. அவர்கள் வந்து விட்டால் எங்கே தங்களுடைய அறியாமை வெளிப்பட்டுவிடுமோ என்ற பயமே அதற்குக் காரணம்.

தென் ஆப்ரிக்காவில் காவடித் திருவிழா

தமிழ்நாட்டில் நடப்பதைப் போலவே திவீரமான முருக பக்தர்கள் தங்களுடைய உடம்புகளில் எலுமிச்சை, சிறிய பால் குடம், சிறிய தண்ணீர் குடம் மற்றும் கன்னங்களில், நாக்கில் என்று பல இடங்களிலும் அலகுகளினால் குத்திக் கொள்கின்றனர். ஆனால் அதிசயமாக அவர்கள் உடம்புகளில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வெளி வருவது இல்லை. அது வெள்ளையர்களுக்கும், ஆப்ரிக்க நாட்டினருக்கும் வியப்பைத் தருகின்றது. அந்த பக்தர்கள் பக்தி என்ற போர்வையில் முழுமையாக இருப்பதினால் தங்களுக்கு ஏற்படும் உபாதைகளையோ , வலி போன்ற எவற்றையுமே குறித்து எந்த விதத்திலும் கவலைப்படுவது இல்லை. அவர்களைப் பொறுத்தவரை முருகப் பெருமானுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து விட்ட திருப்தியுடன் முருகனின் அருள் மட்டும் தங்களுக்குக் கிடைத்தால் போதும் என்று இருக்கின்றனர்.

அந்த காவடித் திருவிழாக்களில் மூன்று விதமான பக்தர்கள் காவடி எடுக்கின்றனர். தங்களுடைய வேண்டுகோட்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மனத் துயரத்திற்கும் தனக்கு வந்துள்ள பிணிகளுக்கும் பரிகாரம் பெறவும், மற்றும் தன்னுடைய குடும்ப நலனுக்காக என காவடிகள் எடுக்கின்றனர். மூன்றாவது பிரிவை சேர்ந்தவர்கள்தான் உண்மையான சாத்வீகர்கள் என்று பகவத்கீதைக் கூறுகின்றது.

நடாலில் சித்திரா பௌர்ணமி, பங்குனி உத்திரம், தை பூசம் வைகாசி விசாகம், கந்த சஷ்டி மற்றும் கிருத்திகை விரத தினங்களில் முருகனுக்குத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சொந்தக் காரணங்களினாலும், சில பிரச்சனைகளினாலும் அந்த தினங்களில் வந்து காவடி எடுக்க முடியாத பக்தர்கள் சிலர் ஞாயிற்றுக் கிழமைகளில் தமக்கு முடிந்த பொழுது வந்து தம்முடைய கடமையை முடித்து விட்டோம் என்பது போல காவடி எடுத்து விட்டுச் செல்கின்றனர். குறிப்பிட்ட நாட்களில் வரும் அந்தப் புனிதமான பண்டிகைகையை பண்டிகை தினங்களில் மட்டுமே செய்ய வேண்டும் என்ற மரபு உள்ளது என்பதோ அந்தக் தினங்களின் மகத்துவமோ அவர்களுக்கு புரிவதில்லை.

தர்பனில் இருக்கும் ஒரு கொடையாளியான வீ.எம். ரெட்டி என்பவர் அங்கு வாழும் தமிழர் நலனில் பெரிதும் அக்கறை உள்ளவர். அவர் அனுபவம் மிக்க ஸ்ரீலங்காவின் பண்டிதர்களை அந்த நகரத்திற்கு வரவழித்து அவர்களை சில ஆலயங்களுக்கு அனுப்பி வைத்து, அங்கு நடக்கும் சடங்குகளை முறைப்படி நடத்தித் தருமாறு கூறி ஆலயங்களில் நடந்து வந்த சடங்குகளை ஒழுங்குப்படுத்தினார்.

தமிழ், சமஸ்கிரதம், கலாசாரம் மற்றும் வரலாற்று உண்மைகள் எவையுமே தெரியாதவர்கள் ஆலய நிர்வாகிகளாக இருந்து வருவதால் பக்தர்களை காவடிப் பாடல்களைப் பாடும்படி நிர்பந்திக்காமலும், அதற்கு விளக்க உரை தரும் வகையில் ஆன்மீக உரைகள் தரும் நிகழ்ச்சிகளையும் நடத்தாமல் நாகரீக வாழ்க்கை முறைக்கு ஏற்ப, அனுபவம் இல்லாத பண்டிதர்களைக் கொண்டு வியாபாரத்தனமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் நடத்தி விடுவதினால், தாய்மொழி அங்கு வளர்ச்சி பெறவில்லை என்பது மட்டும் இல்லாமல், பல பக்தர்களுடைய ஆன்மீக சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கும் விடைகள் கிடைப்பது இல்லை.

பக்தர்கள் தாய் மொழியைப் பயன்படுத்தி பக்தியில் தங்கள் பங்கினை செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும். அருணகிரிநாதர், அருணாசல கவிராயரின் காவடிச் சிந்து, கந்த சஷ்டி கவசம், பாம்பன் ஸ்வாமிகளின் சரவண கவசம் போன்றவற்றைப் பண்டிதர்கள் படித்து அதற்கு விளக்க உரைத் தந்து பக்தர்களிடையே பக்தியை ஊக்குவிக்க வேண்டும். ஆனால் அவை எதுவுமே இலங்கையில் இருந்து வந்துள்ள பல பண்டிதர்கள் கற்றரியாதவை.

தென் ஆப்ரிக்காவில் ஆலயத்தில் உள்ள பண்டிதர்கள் தாய் மொழியான தமிழை நன்கு கற்றறிந்து கொண்டு அதில் உள்ள ஆன்மீக இலக்கியங்களையும் அதை எழுதியவர்களைப் பற்றியும் நன்கு கற்றறிய வேண்டும். அருணகிரிநாதர், பாம்பன் ஸ்வாமிகள் மற்றும் குமாரகுருபரர் போன்றவர்களைப் பற்றியோ, அவர்கள் இயற்றிய பாமாலைகளைப் பற்றியோ அங்குள்ள பண்டிதர்கள் நிகழ்த்தும் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவது இல்லை. அப்படிப்பட்ட நூல்களையோ, அதில் எழுதப்பட்டிருப்பவைகளையோ படித்து அறிந்திராத ஆலய நிர்வாகிகள், இலங்கையில் இருந்து வந்துள்ள புரோகிதர்கள் மீதும், பூஜாரிகள் மீதுமே முழு நம்பிக்கையை வைத்துக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.

சமீபத்தில் கட்டப்பட்ட ஆலயங்களில் இருக்கும் ஆலய நிர்வாகிகள் தமிழ் நாட்டில் இருந்து மிகக் குறைவான மாத சம்பளத்தில் (சம்பளம் 700 ரண்ட் என்ற தென் ஆப்ரிக்க நாணயம். இது அரசு ஊழியர்களின் கடை நிலையில் உள்ளவர்களின் வருமானத்தில் பாதி கூடக் கிடையாது), வேலை செய்ய சம்மதிக்கும் தமிழ் பண்டிதர்களை அங்கு அழைத்து வருகின்றனர். தமிழ் நாட்டில் உள்ள பெருமை வாய்ந்த சிவாலய மடங்கள் நடாலில் உள்ள ஆலய நிர்வாகிகளுடனும் இது குறித்துப் பேசி இப்படி நிலவும் அவல நிலையை மாற்றி அமைக்க வேண்டும். அப்படி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நடாலில் நிலவும் சீர்கேடான நிலையை மாற்றி தாய்மொழியான தமிழையும், கலாசாரம் மற்றும் பண்பாடுகளையும் வளர்க்க முடியும்.

மூன்றாம் கட்டத்தில் (1950 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டுகளில்) அதாவது 1949 ஆண்டிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தென் ஆப்ரிக்காவில் நடந்த நிறவெறிக் கலவரத்தில் இந்தியர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாயினர். அங்கிருந்த இந்திய மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க மதவெறி பிடித்த வெள்ளையர்கள் ஆதிக்கத்தில் இருந்த அரசாங்கம் முனைந்த பொழுது, அது குறித்து இண்டிகோ என்ற பத்திரிகை 1998 ஆம் ஆண்டு தனது அக்டோபர் மாத இதழில் எழுதியது இது:

"1949 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மதக்கலவரத்தை தூண்டி விட்டவர்கள் வெள்ளையர்களதான். அதன் மூலம் இந்தியர்களுக்கும் அந்த நாட்டில் இருந்த கறுப்பர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த முயன்றனர். அந்த கலவரத்தினால் இந்திய மக்கள் மனக் குழப்பம் அடைந்து அந்த நாட்டு அரசியலில் இருந்து விலகி நிற்கலாயினர். இருந்தாலும் அவர்களில் இருந்த தைரியசாலிகளான சிலர் இன்னும் தீவீரமாக நிறவெறியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதனால் அங்கிருந்த நான்காம் வம்சாவளியினரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வெள்ளையர்களின் அரசாங்கம் முனைந்த பொழுது, வேறு வழி இன்றி தங்களுடைய வாழ்க்கைப் பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என்று எண்ணிய வம்சாவளியினர் ஆங்கிலத்தை கற்றுக் கொண்டும் ஐரோப்பிய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டும் வாழும்படியான சூழ்நிலை உருவாயிற்று" (1998 October Indigo).

ஆக ஆண்களானாலும் சரி பெண்கள் ஆனாலும் சரி, தென் இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக ஆங்கிலத்தை மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. 1950ம் ஆண்டிலும் 1992 ஆம் ஆண்டிலும் ஆட்சியில் இருந்த நிறவெறி பிடித்த வெள்ளையர்களின் அரசாங்கத்துடன் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்திய அரசாங்கம் தனிமைப்பட்டது. அதற்கு முன் அங்கிருந்த தமிழர்கள் பெரும் துயருக்கு ஆளாகி தங்களுடைய குடும்பம், குழந்தைகளின் படிப்பு மற்றும் தொழில் என அனைத்தையுமே துவக்கம் முதல் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று. அத்தனை துன்பங்களையும் ஏற்றுக் கொண்ட அவர்கள் 1980 ஆண்டு வாக்கில் தாங்கள் இழந்த அனைத்தையும் - ஆலயங்கள் உட்பட கல்வி முறைவரை - அனைத்தையுமே மீண்டும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று.

பக்தி

தற்காலத்திய மக்கள் ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள பூசாரிகளிடம் பூ, பழங்கள், பால், வெற்றிலை , தேங்காய், மற்றும் தேன், தயிர் போன்றவற்றைக் கொண்டு போய் கொடுக்க, அதை அவர் தெய்வங்களுக்கு நைவித்தியம் செய்ய அதுவே பக்தி என்று நினைத்தார்கள். பக்தி என்றால் என்ன என்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை என்ற நிலையில் பண்டிதர்களும் அவரவருக்குத் தோன்றிய விளக்கங்களை அதற்குத் தந்து வந்தார்கள். அது போல நன்கு படித்தவர்கள் கூட கலாசாரம் என்பது என்ன என்பதை பற்றி புரிந்து கொள்ளவில்லை . மர்லன் படையாச்சி என்ற தென் ஆப்ரிக்க இந்தியர் அதைப் பற்றி இப்படியாகக் கூறினார்:

"கலாசாரம் என்பதின் உண்மையான தத்துவார்த்தமான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், ஒவ்ஒரு இனத்தவரும் கடைபிடித்து வரும் பழக்க வழக்கங்களே கலாச்சாரம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதாவது இந்து முறையில் நடைபெறும் திருமணங்கள், இந்திய இசைகள், இந்தியர்களின் பழக்க வழக்கங்கள், மற்றும் அதன் முக்கியமான மொழிகளே கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக கருதினர். அவை அனைத்துமே இந்தியர்கள் என்று ஒருவனை அடையாளம் மட்டுமே காட்ட உதவின. ஆனால் அவர்களது அனுதின வாழ்கை முறையோ ஐரோப்பிய பழக்க வழக்கங்களை பின்னிப் பிணைத்தே இருக்க வேண்டியதாயிற்று" (Marlon Padayachee. Indigo p.45).

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டு உள்ளது போல, பக்தி என்பது அன்பே சிவம் என்பதைப் போல. அது இதயத்தில் இருந்தே வெளிப்பட வேண்டும் என்பதை எவரும் போதிப்பது இல்லை. பல முனிவர்கள் எப்படி தம்முடைய வாழ்வில் பக்தியை பெருக்கிக் கொண்டு நல்ல பண்புகளுடன் வாழ்ந்திருந்தனர் என்பதை எவரும் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை. பலருக்கும் கிருபானந்த வாரியார்கள் போன்றவர்கள் செய்துள்ள புனிதப் பணியைப் பற்றித் தெரியாமல் இருந்தது. தற்காலத்திலோ அங்குள்ளவர்கள் ஐரோப்பிய பாணியில் காவடிகளை சுமந்து கொண்டு செல்லவே விரும்புகின்றனர். அத்தகைய மாற்றங்களை திருத்தி, காவடி என்பதை முறைப்படி எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்காமல் அவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். நடந்தேறி வந்த தவறான மாற்றங்களை திருத்தத் துவங்கினால் ஆலய வருமானம் குறைந்து விடக்கூடும் என்ற அச்ச உணர்வே அதன் காரணம்.

"பக்தர்களின் நலனே பிரதானமானது என வெளிப்படையாக பண்டிதர்களும், ஆலய நிர்வாகிகளும் கூறி வந்தாலும், அதே சமயத்தில் அந்த பக்தர்களிடம் இருந்து பெறும் பெரும் நன்கொடைகளை மட்டுமே மனதில் பிரதானமாக வைத்துக் கொண்டு, அந்த பக்தர்கள் அறியாமைகளினால் தொடர்ந்து கொண்டிருக்கும் தவறான ஆன்மீகப் அடிப்படை பாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்துவிடுகிறார்கள்'' (Durban Tribune Herald, 25 October 1998).

தமிழக துதிப் பாடல்களும் நாட்டுப் பாடல்களும் அடியோடு மறக்கப்பட்டு விட்டன. அதை மீண்டும் வெளிக் கொண்டு வரும் பொறுப்பு ஆலய நிர்வாகத்திடமே உள்ளது. சம்மந்தரும், நாயன்மார்களும் பாடல் நெறி என்பது என்ன என்பதைப் பற்றி தமது பாடல்களின் மூலம் விளக்கிக் கூறி உள்ளார்கள். முருக வழிபாட்டின் ஒவ்ஒரு விழாக்களிலும் பல்வேறு முருகன் பாடல்களை ஒலி பரப்பி அதன் அர்த்தத்தையும் விளக்க வேண்டும். அப்படி செய்வதின் மூலம் மட்டுமே ஒவ்ஒருவருக்கும் பக்தி உணர்வு பெருகும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே இருந்த வித்தியாசங்கள்

1950 முதல் 1993 ஆம் ஆண்டுகளின் மூன்றாம் பகுதியில் தென் ஆப்ரிக்காவில் குடியேறி இருந்த தங்களுடைய குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள, அலுவலகங்களில் பணி புரிந்து கொண்டு இருந்தப் பெண்கள், சமூகத்திலும் அரசியலிலும் முன்னேறத் துவங்கினர். அந்தப் பெண்கள் ஐரோப்பிய கலாச்சாரங்களிலும், ஆங்கிலத்திலும் நல்ல திறமைப் பெற்று இருந்தாலும் தமிழ் கலாச்சாரங்களை தொடர்வதில் தீவீரமாக இருந்தனர்.

ஐரோப்பிய கலாச்சாரங்களில் மூழ்கி விட்ட பல ஆண்கள் தமிழ் கலாச்சாரங்களை கைவிட்டு விட்டனர். ஆனால் நன்கு படித்தப் பெண்களோ ஐரோப்பியக் கலாச்சாரத்தில் இருந்த பல எதிர்மறைப் பண்புகளைக் கண்டு, அவை தவறானவை என்பதைப் புரிந்து கொண்டு, தைரியமாக தங்கள் நாட்டுக் கலாச்சாரத்தையும் பக்தியையும் தொடர்ந்து கடைபிடித்து வரலாயினர் (1993-1998). ஆலய திருவிழாக்கள், பண்டிகை தினங்கள், வாராந்திர வழிபாட்டு தினங்களில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் பங்கேற்றதைக் காண முடிந்தது. நடாலில் ஆண்களை விட பெண்கள்தான் தாய் மொழியை உபயோகிப்பதிலும், தமிழ் கலாச்சாரத்தை கடைபிடிப்பதிலும் ஆர்வமாக இருந்தனர் என்பதினால் பெரும்பாலான சமூக விழாக்களில் பெண்களே முதன்மைப் பெற்று வந்தததையும் காண முடிந்தது.

ஆலயங்கள்

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வந்து நியமிக்கப்படும் பண்டிதர்கள் ஆலயத்தில் மிகக் குறைந்த அளவிலான மாத வருமானத்தில் நியமிக்கப்படுவதால் தங்களுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள அவர்கள் புரோகிதர்களாக மாறி விடுகின்றனர். வருமானங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதினால் அவர்கள் பலவிதமான முறைகேடுகளில் ஈடுபட்டதினால் உண்மையான பக்தி கொண்டவர்களும் பக்தர்களும் அவர்களை புரிந்து கொள்ள முடியாமல் திணறினார்கள். அவர்களைக் குறித்த செய்திகளை அனுதினமும் பல பத்திரிகைகளில் வாசகர்கள் ஆசிரியருக்கு கடிதம் என்ற தலைப்பில் எழுதி தங்கள் மனக் குறையை வெளியிடுகின்றனர்.

"ஆலயத்தினர் நம் நாட்டில் நிலவும் பல்வேறு மதங்களில் உள்ள அற்புதமான கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சொற்பொழிவுகள், காலட்சேபம் போன்றவற்றை நடத்துவதில்லை. பல மடாதிபதிகள் மதச் சடங்குகளை சம்பிரதாயமாக செய்த வண்ணம் இருந்தவாறு, பிரார்த்தனை செய்வதினால் உண்மையில் என்ன பயன் கிடைக்கும் என்பதை விளக்கிக் கூறாமல் இருந்து விடுவதினால்தான் மக்கள் திசை மாறிப் போகின்றனர். ஆகவே நாம் பெரிய அளவில் நம்முடைய புராதான மதங்களின் பெருமைகளை மீண்டும் வெளிக் கொண்டு வர முயலவேண்டும்" (Durban Tribune Herald, 25 October 1998).

ஆலயங்கள் தமிழ் பாடல்களை ஒலி பரப்பினால் அதன் மூலம் உண்மையான பக்தி கொண்டவர்கள் தாய்மொழியான தமிழை புரிந்து கொண்டு அதைக் கற்க ஆவல் கொள்ளவும் வழி வகுக்கும். மகான்களின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், ஒலிபரப்பப்படும் பாடல்களின் அர்த்தங்களையும் விளக்கிக் கூறும் திறமை மிக்க சொற்பொழிவாளர்களை அழைக்க ஆலயத்தினர் முன்வர வேண்டும்.

நம் கடமை

1996 ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க நாட்டில் எடுக்கப்பட்ட ஜனத்தொகை கணக்கின்படி அந்த நாட்டில் இருந்தவர்கள் 40.58 மில்லியன் மக்கள். அதில் க்வாஜுலு நடாலல் (Kwa-Zulu Natal) என்ற பகுதியில் மட்டும் 8.4 மில்லியன் மக்கள் இருந்தார்கள். அதாவது மொத்த ஜனத்தொகையில் அவர்களின் எண்ணிக்கை 21 சதவிகிதம் இருந்தது. தென் ஆப்ரிக்காவில் இருந்த ஒரு லட்ச இந்தியர்களில் சுமார் 76 சதவிகித மக்கள் க்வாஜுலு நடாலில் இருந்தனர். அதில் 97 சதவிகித மக்கள் நகர்புறங்களில் வசித்தார்கள். அவற்றிலும் 94 சதவிகித மக்கள் ஆங்கிலமொழியே பேசினார்கள் (1998: October The Leader).

ஜனத்தொகையில் மக்களின் விகிதாசாரம்

ஆப்ரிக்கர்கள் இந்தியர்கள் வெள்ளையர்கள் பிற நிறத்தவர்
82% 9% 8% 1%
30 வயதுக்கும் குறைவானோர்
ஆப்ரிக்கர்கள் இந்தியர்கள் வெள்ளையர்கள் பிற நிறத்தவர்
57% 65% 61% 45%
கல்வி அறிவு பெற்ற இந்தியர்களின் விகிதாசாரம்
படிப்பறிவு இல்லாதவர்கள் முதல்நிலை கல்வி உயர்நிலை வகுப்பு 10 ஆவது வகுப்பு தாண்டியவர்கள் பள்ளிப் படிப்பை தாண்டியவர்கள்
7% 13% 4% 30% 10%

இந்த செய்தியைக் பார்க்கும் பொழுது ஆலய நிர்வாகிகளும், தமிழர் சங்கங்களும் தாய்மொழியான தமிழ்மொழியை கற்பதின் அவசியத்தை விளக்கி, அதன் பண்புமிக்க கலாச்சாரத்தைப் பரப்ப முன் வரவேண்டியதின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நடாலில் 60 சதவிகித இந்தியர்கள் உள்ளதினால் தமிழ்நாட்டில் உள்ள மடங்கள், மற்றும் பிற மையங்களுடனும் தொடர்ப்பு வைத்துக் கொண்டு, தென் ஆப்பிக்காவில் உள்ள பல்வேறு மத, இனப் பிரிவுகளில் உள்ள தமிழர்களின் தேவைகளுக்கேற்ப அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

அந்த விஷயத்தில் தமிழக அரசும் தென் ஆப்ரிக்க நாட்டு தமிழர்களுக்கு உதவி செய்யவும், அவர்களிடையே தாய்மொழியான தமிழ்மொழி வளர்ச்சி பெறவும், தமிழ் கலாச்சாரம் புத்துயிர் பெறவும் தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். அங்குள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் தமிழக நாட்டுப் பாடல்களும், முருகன் பக்தி கீதங்களும் அங்கு நிறைய வினியோகிக்கப்பட வேண்டும். அதற்கு அங்குள்ள நல்லெண்ணம் கொண்ட வசதி படைத்தோர் முன்வர வேண்டும். தமிழர்கள் பிரார்த்தனைகளை தாய்மொழியில் செய்தவாறு இருந்து கொண்டிருக்கவும், அர்ச்சனைகளை மட்டும் பண்டிதர்கள் விரும்பும் முறையில் செய்யும்படியான நிலைமையை உருவாக்க வேண்டும். தற்கால இளைஞர்கள் தாய்மொழியில் ஈடுபாடின்றி இருப்பதினால் அவர்களுக்கு கன்னி, சிந்து, கிலிக்கன்னி, காவடி மற்றும் நாட்டுப் பாடல்களைப் பற்றிய விளக்க உரைகளை தந்து தமிழ் மொழியில் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும்.

மதத் தலைவர்கள் முருகப் பெருமானுடைய பஜனைப் பாடல்கள், மற்றும் பிற சமஸ்காரங்களை பற்றி எடுத்துறைத்து அவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க முயல வேண்டும். முருகப் பெருமானின் பெருமைகளைப் பரப்ப கும்மி, கோலாட்டம், நாடகம், நடனங்கள் போன்றவற்றை நடத்த வேண்டும். அருணாசல ரெட்டியாரின் காவடிச் சிந்து, சூலமங்கல சகோதரிகளின் கந்தர் சஷ்டி கவசப் பாடல்கள், பெங்களுர் ரமணி அம்மாவின் பாடல்கள், கே.பி. சுந்தரம்பாள் பாடல்கள் போன்றவற்றை ஒலி பரப்பி வந்தால் தமிழ் மொழி மீதான ஆவலை அவர்களிடையே மேலும் பெருக்க முடியும்.

ஆலய நிர்வாகிகளும், பண்டிதர்களும் தமிழில் புலமைப் பெற்று இருக்க வேண்டும். அங்கு வரும் தமிழ் பண்டிதர்களும் ஞானிகளும் மடாதிபதிகளும் சொற்பொழிவுகள் செய்து கொண்டும், பாடல்கள் மூலமும் தமிழ் கலாச்சாரத்தை பரப்ப உதவ வேண்டும். அந்த பணிக்கு தமிழ் நாட்டில் உள்ள மடங்களும் ஒத்துழைக்க வேண்டும். திருவிழாக்களில் தமிழ் நாடகங்கள் நடத்தப்பட வேண்டும். ஆலயக் குழுக்கள் ஒவ்ஒரு தமிழ் குடும்பத்தையும் ஒரு மையமாகவே கருதி தமிழ் கலாசாரததை அவர்களிடையே பரப்பி வரவேண்டும்.

தாய்மொழி, இனம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றைப் பரப்ப பிரசாரங்கள், ஊர்வலங்கள் போன்ற ஜனநாயக நெறி முறைகளை கையாள வேண்டும். பத்திரிகைத் துறையின் உதவியையும் பெற வேண்டும். நம்முடைய கலாச்சாரம் எந்த அளவு மனித மேம்பாட்டிற்கு உதவும் என்பதை விளக்கிக் கூற நமக்கு தனியான விளம்பர பிரசார சாதனம் வேண்டும். அதற்கு அரசியல் ஆதரவும் அவசியம் தேவை. இந்திய மொழிகளையும் சமூக கலாச்சாரங்களையும் ஆராய்ச்சி செய்பவர்களுக்கும் பொருளாதார உதவி செய்ய வேண்டும்.

ஐரோப்பிய அமைப்புக்களும், கறுப்பர் சேவை மையங்களும் தொலைக் காட்சி நிலையங்களையும் , திரைப்பட உலகத்தையும் அக்கிரமித்துக் கொண்டு தஙகள் பிடியில் வைத்து உள்ளதால் தமிழ் மொழிப் படங்களையோ , நாடகங்களையோ காண முடியாமல் தடுக்கப்படுகின்றோம். முருகன் மீதான பாடல்களைப் பாடிய வண்ணம் சாமியாடிகளின் முருக பக்தியைக் குறித்து முருக பக்தர்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும்.

பண்டைய தெய்வ வழிபாட்டு முறை தழைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆலயங்கள்தான் உதவ வேண்டும். தனியார் துறை தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மூலம் புராணக் கதைகள், நாடகங்கள், மற்ற நாடுகளில் நடந்து வரும் முருகன் திருவிழாக்கள் போன்றவற்றை ஒளி பரப்ப வேண்டும். பக்தியும் முருகனும் அனைத்து நாட்டிலும் உள்ள தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும்.

ஏன் என்றால் முருக வழிபாடு என்பது அவர்களுடைய உள்ளத்தோடு ஊறிய ஒன்று. தமிழக அரசும் நிறைய அத்தகைய செய்திகள் அடங்கிய ஆடியோ, வீடியோ போன்ற காசட்டுக்களை (ஒலித் தட்டுக்களை) தென் ஆப்ரிக்க நாட்டில் உள்ள ஆலய திருவிழாக்களுக்கு அனுப்பி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தமிழர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை ஒலி பரப்பச் செய்ய உதவிட வேண்டும்.

முருக வழிபாட்டின் உண்மையை தென் ஆப்ரிக்க நாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஒலி பரப்பி வந்தால் தென் ஆப்ரிக்க நாட்டிற்கும் திராவிட பண்பாட்டிற்கும் எந்த அளவு ஒற்றுமை இருந்து வந்துள்ளது என்பது நன்கு புரியும். அது அனைவருடைய ஒற்றுமைக்கும் கருவியாக இருந்து தெய்வீகத்தைப் பரப்பி தமிழர்களின் நலனுக்கும் பாதை அமைக்கும்.


This paper was presented at the First International Conference Seminar on Skanda-Murukan, December 1998

References

  1. Bhana, S. and Pachai, B. A Documentary History of Indian South Africans. Standford Hover Institution Press, 1984.
  2. Compilation of Songs, (Madras: Ratna Nayagar & Sons) 1956.
  3. Edwards, J. Language, Society and Identity, (Oxford: Basic Blockwell) 1989.
  4. Henning, C.G. The Indentured Indians in Natal (1860-1917) (New Delhi: Promilla & Co.) 1993.
  5. Vanamamalai, N. Makkalum Marabukalaum (Madras: New century Book House) 1993.
  6. Kuppusamy, Tamil Culture in South Africa (Durban: Rapid Graphic) 1993.

Journals

  1. Sentamil Selvan 1938, 1956
  2. The Leader 1998 October
  3. Indigo 1998 November

Dr. S. Subramaniyan teaches in the Department of Indian Languages at the University of Durban-Westville in South Africa.

This paper was presented at the First International Conference Seminar on Skanda-Murukan, December 1998

Dr. S. Subramaniyan
Department of Indian language
University of Durban-
Durban 4000 South Africa