Lord Skanda-Murugan
 

கபிலர்மலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு

தமிழ்நாட்டுக் கடவுளருள் முதன்மைக் கடவுளாய் விளங்குபவன் முருகன். ஆறுபடை வீடு கொண்ட முருகனைப் பற்றிச் சான்றோர்கள் கூறும்போது "குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என்பர். அவ்வகையில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலையும் முருகனுக்குரிய குன்றுதோறாடல் திருப்பதிகளில் ஒன்றாகும்.  

அமைவிடம்:

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி - வேலூர் வட்டத்தில் காவிரிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. பரமத்தி வேலூருக்கு மேற்கே 7 ஆவது கிலோ மீட்டரிலும் நாமக்கல்லுக்குத் தென் மேற்கே 24 ஆவது கிலோ மீட்டரிலும் கபிலர்மலை உள்ளது.

தல வரலாறு:

இம்மலையில் கபிலர் என்னும் மகரிஷி இருந்து வழிபட்டதாலும் கபிலை என்னும் பசு இருந்ததாலும் சங்க இலக்கியப் புலவரான கபிலருக்கு வழங்கப்பட்ட மலை என்பதாலும் இப்பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

மூர்த்தி:

இம்மலையில் முருகக் கடவுள் குழந்தைக் குமாரராய் வீற்றிருந்தருளுகின்றார். வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியராகவும் எழுந்தருளியிருக்கின்றார். இதர தெய்வங்களும் இடம் பெற்றுள்ளனர்.

கோயில் அமைப்பு:

கடல் மட்டத்திலிருந்து 150 அடி உயரத்தில் மலையின் நடுவில் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலின் மூலஸ்தானத்தில் இருந்து ஒரு தென்றல் காற்று வீசி முருகன் அருகே எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தீபத்தை எப்போதும் அசைத்துக்கொண்டே இருக்கிறது. சைவத் திருத்தலமான இந்தக் கோயில் தூண்களில் வைணவத் திருத்தலத்திற்குறிய நரசிம்மர் சிற்பம் காணப் படுகின்றது. மேலும் அழகிய வடிவோடு மீன் சிற்பம் முதலான பல்வேறு சிற்பங்களும் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்:

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் முருகனுக்கு உகந்த விஷேச தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. தைப்பூசத்தன்று இங்கு நடக்கும் விழாவில் உள்ளுர் வெளியூர் வெளிமாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவடி எடுத்து வருகின்றனர். தைப்பூசத்தன்று நடக்கும் தேரோட்டத்திற்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு கூடுகின்றனர்.

பேராசிரியர். சு. பாலுசாமி எம்.ஏ. எம்.பில்.
தமிழ்த் துறைத் தலைவர்
பி.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நாமக்கல் கரூர் மெயின் ரோடு
நாமக்கல் - 637 206 தமிழ்நாடு இந்தியா
e-mail: balu_samy6@yahoo.com

home