Lord Skanda-Murugan
 

அருணகிரிநாதரின் மயில் விருத்தம் - 3

அசையும் அண்டங்கள்

Valli Amman
Valli Thirumanam
Valli Thirumanam

முருகப் பெருமானின் மயில் அடி எடுத்து வைப்பதனால் (‘அடி பெயர’) பூமண்டலத்திற்கு ஆதாரமாயுள்ள பாதாளம் அசைகிறது; பழமையான பிரம்மாண்டத்தின் உச்சி முகடு அசைகிறது; பணாமகுடங்களை விரித்து நிற்கும் ஆதிசேடனுடைய முடிகள் அசைகின்றன. [இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோருக்குரிய] எட்டு திக்குகளும் அசைகின்றன. வீசி வெளிவருகின்ற மதம் பாய்கின்ற பெரிய கன்னங்களை உடைய யானைகள் இடம் பெயர்கின்றன. [யானைகள் மூவகைப்படும்:- கிரிசரம் = மலை யானைகள்; நதிசரம் = நதிக்கருகில் வாசம் செய்கின்ற யானைகள்; வனசரம் = காட்டில் வளர்பவை.]

தாளத்துடன் ஆடும் மயில்

பேய்கள் நடைபேதம் கதிபேதம் தவறித் தாளங்கள் போட்டாலும் கூட மகிழ்ச்சியுடன் நடமாடும் சிவனும், அதைக் கண் கொட்டாமல் பார்க்கும் உமையும் மயிலின் விஸ்தார நடனத்தைக் கண்டு மகிழ்கின்றனர். [“திந்திதிமி தோதித் தீதித்தீதி, தந்த தன தான தானத்தான, செஞ்செணகுசேகு தாளத்தோடு நடமாடும் மயில்,” என்று திருப்புகழில் வருகிறது.] அம்மயில் சதுஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீர்ணம் எனும் நடை பேதங்களுடன் விஸ்தாரமாக நடமாடுகிறது].

Thiruvalluvar
இவர் திருவள்ளுவர் ஆவார். இவர் திருக்குறளை இயற்றினார்.

வள்ளுவரின் சகோதரி வள்ளி

‘மாதாநுபங்கி எனும் மாலது சகோதரி வள்ளி’ எனும் குறிப்பு இங்கு வருகிறது. தாய் (மாதா) போன்ற கருணையுடன் உலகோர் உய்யும் பொருட்டு திருக்குறள் எனும் நூலை அளித்த வள்ளுவரையே இங்கு ‘மாதாநுபங்கி’ என்கிறார். இவர் பிரம்மனின் அம்சமாகத் தோன்றியவர் என்று திருவள்ளுவ மாலை கூறுகிறது. திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரமனும், திருமாலின் கண்களிலிருந்து பெருகிய ஆனந்த பாஷ்பத்திலிருந்து தோன்றிய சுந்தரவல்லி எனும் வள்ளியும் சகோதர – சகோதரி முறையாகின்றனர். எனவேதான் பிரம்மனது அம்சமாகிய வள்ளுவரின் சகோதரி என்று வள்ளியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்டது தவிரவும் ஒரு புராணக் குறிப்பை இங்கு பார்ப்போம். கண்வ முனிவரின் சாபம் காரணமாக திருமால் சிவ முனிவராகவும், லக்ஷ்மி மானாகவும், உபேந்திரன் நம்பிராஜனாகவும் காட்டில் திரிந்து வந்தனர். சிவமுனிவரின் திருக்கண் பார்வைபட்டு கர்ப்பம் தரித்த மான், வள்ளிக்கிழங்கைக் கெல்லி எடுத்த ஒரு குழியில் குழந்தையை ஈன்றது. நம்பிராஜன் தனக்கு இறைவன் தந்த வரமாக எண்ணி அப் பெண் குழந்தையை (வள்ளிக்கிழங்கு இருந்த குழியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதால்) வள்ளி என்று பெயரிட்டு வளர்த்தான்.

தணியா அதிமோக தயாபரன்

மாதாநுபங்கியெனும் திருவள்ளுவராகத் தோன்றிய பெருமையுடைய பிரமனது தங்கையும், மலைப் பெண்ணும், வேடர் குலத்தவளும், வேதத்தில் வல்ல முனிவரின் பார்வையால் மனித குலத்தில் மான் மகளாகத் தோன்றியவளுமாகிய [சாரங்கம் = மான்] வள்ளியின் ரத்னச் சிலம்புகள் அணிந்த பாத தாமரையைத் தன் தலையில் சூடிக் கொண்டவன் முருகன்.*

[பணி யா? என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரன் - கந்தர் அனுபூதி].*

“தனக்கு விருப்பமுடைய நீலோற்பல மலர்கள் பூக்கின்ற திருத்தணியில் அமர்ந்திருக்கும் அப்பெருமான், படைகளுடன் வந்த அசுர சேனைகள் பொடியாகும்படி, வாகனமாகச் செலுத்திய வெற்றி மயிலே!” என்று பாடலை நிறைவு செய்கிறார்.

சித்ரா மூர்த்தி,
சென்னை
chitramurthy52@gmail.com