தினமணி கதிர், மார்ச் 1 ,1998

இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் மனதுக்குள் ஒலித்த கேள்வி ‘நான் யார், எங்கிருந்து வந்தேன்?’. ஆனால் அடுத்த வருடத்திலேயே விடை கிடைத்தது: நான் இந்தியாவில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். கேள்விகள் எழுந்து, பதில் கிடைத்து புரிந்து கொண்ட மனதிற்கு உரியவர் – பேட்ரிக் ஹரிகன்.

திருச்செந்தூரில் பேட்ரிக்

‘ரஷ்யர்கள் விண்வெளியில் செயற்கைகோளை ஏவிய போது அமெரிக்கர்கள் விஞ்ஞான முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தார்கள். அனைத்து மாணவர்களும் விஞ்ஞானத்தைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள்.

விண்வெளி இயல் மற்றும் புது உலக விஞ்ஞானத்தைப் படித்ததினால் என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் என் பேராசிரியர்களினால் என் மனதுக்கு ஒப்பக் கூடிய பதிலை அளிக்க இயலவில்லை’. மெல்ல நகைத்தபடி கூறுகிறார் ஹரிகன்.

புத்த மதத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டின் காரணமாக தைவான், தாய்லாந்து முதலிய புத்த மதம் தழுவிய நாடுகளை சுற்றிப் பார்த்தார் ஹரிகன். புத்தர் பிறந்தது இந்திய மண் ஆனதினால் இந்தியாவின் மீதும் அவருக்குப் பற்று ஏற்பட சார்நாத் , டெல்லி என புதிய தேடும் பயணத்தைத் தொடர்ந்தார்.

அங்கே ஒரு முகமதியர் இவரை சந்தித்து இவருடைய கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கும் இடம் இலங்கை என்று அறிவுறுத்தி உள்ளார். அங்கு அவருக்கு ஞான விளக்கம் கொடுக்கக் கூடியவர் கெளரி பாலா குருஜி. இந்த குரு ஒரு ஜெர்மானியர். அவரும் தத்துவ உண்மையை அறிய தமிழரான நல்லூர் யோகாசாமியிடம் வந்து சேர்ந்தவர் . இலங்கை கதிர்காமத்தில் முருகனுக்கு சேவை செய்து வருபவர் . குருநாதர் என்னதான் உபதேசித்தாராம்?

1983 இல் ஜெர்மன் சுவாமி கௌரிபாலாவுடன் பேட்ரிக்

சும்மா இரு என்ற மந்திரோபதேசம்தான். இந்த மந்திரத்தை தன கையில் பச்சை குத்திக் கொண்டார் பாலகிரி. மனக்கிலேசம் ஏற்படும்போது கையைப் பார்த்துக் கொண்டு தெளிவு பெற்று இருக்கிறார். அது மட்டும் இன்றி யாழ்பாணத்தில் சும்மாதான் ஆஸ்ரமம் வைத்து முருகப் புகழ் பரப்பி வந்தவர்.
குருவின் அறிமுகம் தனக்கு தத்துவ விளக்கம் தந்ததாக ஹரிகன் கூறுகிறார். முருகனும் சக்தியுமே தனக்கு அறிமுகம் ஆகி தன் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதாக உணர்ந்து மகிழ்ந்தார்.

இதற்கு இடையில் அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் (யூனிவர்சிட்டி ஆப் மிச்சிகன் ) ஆசியாவைப் பற்றிய பாட இயலில் முதுநிலை பட்டமும் பெற்றார்.

முருகன் பக்தியில் திளைத்ததோடு வள்ளி அம்மையையும் அவர் சார்ந்த வேடுவர் இனம் பற்றியும் ஆராய்ச்சிகளையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டார். ஆறு வருடங்களாக கதிர்காம முருகனுக்கு சேவை புரிந்த இவர் (கைலையும் கதிர்காமனும் ஓரே வான்கோளக் கோட்டில் அமைந்துள்ளது விஞ்ஞானம் சொல்லும் உண்மை) தமிழ் நாட்டிற்கு வந்து ஆறுபடை வீடுகளுக்கும் சென்று முருக சேவையைத் தொடர திட்டமிட்டு உள்ளார்.

கதிர்காம பாத யாத்திரையில் நடந்து செல்லும் பேட்ரிக்

அதன் முதல் முயற்சியாக சமீபத்தில் திருச்செந்தூர் சென்று கந்தர் ஷஷ்டி விழாக்களை அரைமணி நேர ஒலி நாடாக்களாக தயாரித்துக் கொண்டு வந்துள்ளார்.
இவருடைய குடும்பம்?

நடுவே இவரை இவருடைய பெற்றோர்கள் ஒரே ஒரு முறை அமெரிக்காவிற்கு வந்து போகும்படி கடிதம் எழுதி டிகெட்டையும் அனுப்பி வைக்க ‘அதற்காகப் போய் அவர்களைப் பார்த்து விட்டு வந்திருக்கிறார்.

என் முற் பிறவிகள் எல்லாம் இந்தியாவில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறேன். நான் இந்தியாவிலேயே-குறிப்பாக தமிழ்நாட்டிலேயே- தங்கிவிட உத்தேசித்து உள்ளேன்’ என்கிறார் இவர்.

வேலூருக்கு வடக்கே உள்ள வள்ளி மழைப் பகுதியில் சித்த ஸ்தானம் என்ற ஆஸ்ரமம் சச்சிதானந்த ஸ்வாமி உருவாக்கியது. தன் வாழ்நாட்களையும் முருக சேவையும் தொடர்கிறார்.

ஆறுபடை வீடுகளையும் வீடியோ படம் எடுப்பதுதான் இவருடைய இப்போதைய குறிகோள்.

‘அது விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன். பிற முருக பக்தர்கள் உதவியோடு முருகன்-வள்ளி அம்மையின் ஆசிகளோடு வெற்றிகரமாக நிறைவேறும்’ என்று கண்ணில் நீர் மல்க கூறுகிறார் ஹரிகன்.

முருக தத்துவம், அருணகிரிநாதர் பாடல்களில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற சென்னை பல்கலைக் கழகத்துக்கு மனு செய்திருக்கிறார்.

பிரபுசங்கர்

அமெரிக்கரின் முருக தத்துவம்
Tagged on: