ராஜு காளிதோஸ்
தமிழகத்தின் மத்தியக் கால ஆலயத் தேர்கள் (மதுரை: விஜய் பிரசுராலயம் 1989)
original article in English: “The Iconography of Murugan”
தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா
பாகம் 1.26 : முருகனின் உருவமைப்புகள்
சிவன் மற்றும் பார்வதியின் இரண்டாவது மகனான முருகனை சுப்பிரமணியர், கார்த்திகேயன், ஸ்கந்தன், தேவசேனாதிபதி, கார்த்திகேயா, ஷண்முகா, சிக்கில்வாஹனா மற்றும் சரவணபவா என்ற பெயர்களில் அழைக்கின்றார்கள். சங்ககாலம் தொட்டே தமிழகத்தில் முருக வழிபாட்டு இருந்துள்ளது. குமாரதந்திரா மற்றும் ஸ்ரிதத்வநீதி போன்ற நூல்களில் சுப்ரமணியரின் உருவ அமைப்புக்களின் விளக்கம் தரப்பட்டு உள்ளது.
ஆலயங்களில் உள்ள தேர்களில் காணப்படும் முருகப் பெருமானின் சிலை வடிவங்கள் (உருவங்கள்) பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. முக்கியமாக ஸ்கந்த புராணத்தை விளக்கும் காட்சிகள் (4.4% 123/2,795) அவற்றில் அதிகம் உண்டு. இந்தக் கட்டுரையில்அவற்றில் காணப்படும் சுப்ரமணியரின் பல்வேறு உருவங்களின் தத்துவார்த்த அர்த்தங்கள் விளக்கப்பட்டு உள்ளன.
1.26.1. சிக்கில்வாஹனா
சிக்கி அல்லது மயூரா என்றால் மயில் என்று அர்த்தம் தரும். அதன் மீது சுப்பிரமணியர் அமர்ந்துள்ள நிலையைக் குறிப்பதே வாஹனம். குப்தர்கள் காலம் தொட்டே முருகனுடன் மயிலும் இணைத்து கூறப்பட்டு வந்துள்ளது என்பதற்கு ஐந்தாம் நூற்றாண்டில் வெளியான காளிதாசரின் ரகுவம்சம் என்ற நூலே சாட்சியாகும். 203 சிக்கில்வாஹனா என்ற உருவத்தில் சுப்ரமணியருக்கு ஒரு முகமும், மூன்று கண்களும், நான்கு கைகளும் உள்ளன. முன்புறக் கைகள் அபய மற்றும் வரத முத்திரை வடிவங்களைக் காட்டிக் கொண்டு இருக்க, மற்றவற்றில் சக்தியும், வஜ்ரா எனும் ஆயுதமும் காணப்படுகின்றது. அவருடைய மயில் வாகனத்தை இந்திரநீலரதா என்கிறார்கள். 204 ஸ்ரிதத்வநீதியில் முருகனை பத்துக் கைகளைக் கொண்ட கார்த்திகா, பன்னிரண்டு கைகளைக் கொண்ட ஷண்முகா மற்றும் ஆறு கைகளைக் கொண்ட தேசிகா என்றும் கூறி, அவர் மயிலுடன் காணப்படுவதாக தெரிவிக்கின்றது.
பல வடிவமைப்பு தூண்களில் (nos. 970, 971, 977, 987, 989, 998, 1001. 1011, etc.) அவரை ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு முகங்களைக் கொண்ட ஷண்முகா அல்லது சடாணன அல்லது ஆறுமுகனாக காட்டுகின்றன. அவர் கைகளில் காணப்படும் பொருட்கள் சக்தி, அம்பு, கத்தி, வட்டத் தட்டு, கயிறு போன்றவை இருக்க வலது கை அபய முத்திரை காட்டியவாறு உள்ளது. 205 அவருடைய மனைவிகளான தேவசேனா எனும் ஜெயா இடப்புறத்திலும் வள்ளி எனும் விஜயா வலப்புறத்திலும் நின்றவாறு காட்சி தருகிறார்கள். சாஸ்திர விதிகளுக்கு மாறாக இல்லாமல், சாஸ்திரங்கள் ஏற்கும் அமைப்பில் சில இடங்களில் அவர் காணப்படுகிறார்.
சில வடிவமைப்புக்களில் (nos. 977, 939 and 998) அவர் ஜெயா மற்றும் விஜயா என்ற இருவருடன் சேர்ந்தே காணப்படுகிறார். அவர்கள் மயிலில் இரு பக்கங்களிலும் நின்று கொண்டு இருந்தபடியோ அல்லது மயில் மீதே முருகனுடன் அமர்ந்து கொண்டுள்ள காட்சியிலும் உள்ளார்கள்.
ஒரு வடிவமைப்பில் (no.996) ஷண்முகன் சுகமாக அமர்ந்திருக்க அவருடைய தொடையில் அவருடைய இரண்டு மனைவிகளும் அமர்ந்துள்ளபடி காணப்படுகிறார்கள். அவர்களின் ஒரு கையில் தாமரைப் பூ இருக்க, மற்ற கை முருகனின் தொடை மீது வைத்தபடி உள்ளது. அதில் உள்ள மயிலோ தனது தோகையை விரித்தாடியபடி நேராகப் பார்த்தபடி நிற்கின்றது. தற்போது பட்னா கலைக் காட்சியகத்தில் உள்ளதும், முஸாபர்பூரில் கிடைத்துள்ள குப்தர்கள் காலத்தைய சிலையமைப்பையும் அது ஒத்து உள்ளது. 206 விசிறி போல பறந்து விரிந்துள்ள மயில் இறகுகளின் தொகுதிகள் (plumage) அவர்களுக்குப் பின்னால் அமைக்கப்பட்டு உள்ள திரையைப் போல காணப்படுகிறது. 207 திரிபுரான்தகா அமைப்பில் காணப்படும் சிக்கில்வாஹனாவின் இன்னோர் உருவமே ஸ்கந்த மூர்த்தியாகும். அதில் உள்ள நான்கு கைகள், இடிதாங்கி போன்ற கழி , வேல், அம்பு, மற்றும் ஈட்டி போன்றவற்றை ஏந்தியபடி காணப்படுகிறது. 208 அவருக்கு இருபுறமும் வள்ளி மற்றும் தேவசேனா காணப்படுகிறார்கள். இன்னும் பல வடிவமைப்பு தூண்களில் அவர் (nos. 975, 985, 988, 990, 991, 995 and 999) திரிபுரான்தகா அமைப்பில் காணப்படுகிறார்.
சிக்கில்வாஹனாவின் இன்னொரு வடிவமே கார்த்திகேயா வடிவம். குமாரதந்திராவின் கூற்றின்படி அந்த உருவில் உள்ளவருக்கு அவருக்கு ஆறு முகங்களும், ஆறு கைகளும் உள்ளன என்றாலும், ஸ்ரிதத்வநீதியின்படி அவருக்கு ஒரு முகமும் பத்து கைகளும் உள்ளன.
இன்னொரு வடிவமைப்பில் (no. 1012), சுப்பிரமணியர் மயில் மீது தனது இடது காலை மடக்கி வைத்துள்ள ‘உட்குடிகா’ (utkutika ) கோலத்தில் காணப்பட, மயிலின் மற்றொரு பக்கத்தில் நீண்டு வைக்கப்பட்டு உள்ள இன்னொரு காலின் பாதம் மட்டுமே தெரிகின்றது. 210 முன்பக்கத்து வலது கையில் நேராக பிடிக்கப்பட்டு உள்ள ஈட்டி காணப்பட, கீழே நீண்டு உள்ள முன் பக்கத்து இடது கை அவருடைய கால் முட்டி மீது கையை வைத்துக் கொண்டு உள்ள நிலையில் உள்ளது. ஏகவல்லி (ekāvali) எனும் கழுத்தில் அணியும் அட்டிகையுடன் முருகன் காணப்படுகிறார். சில உருவமைப்பில் (no. 994, etc.) சுப்ரமண்யா இரண்டு கைகளுடன் மட்டுமே காணப்படுகிறார். அவரது வரவை எதிர் நோக்கியபடி மயில் நின்றுள்ளது போல காணப்பட, அவரது வலது கையில் பிடித்துள்ள ஈட்டியின் ஒரு முனை பூமியின் மீது பதிந்துள்ளது. இன்னொரு கையோ கத்யவலம்பிகா (katyavalambila) கோலத்தில் உள்ளது. 211 இன்னொன்றில் (no. 981) நின்று கொண்டு உள்ள முருகனுக்கு முன்னால் மயில் அமர்ந்து கொண்டு உள்ளது. அதில் அவரை வேலாயுதா என்கிறார்கள்.
1.2.6.2. புராண சம்பவங்கள்
இந்தக் காட்சிகளில் வடிவமைக்கப்பட்டு உள்ள பல உருவங்கள் (56% 69/123) ஆலயத் தேர்களில் காணப்படுகின்றன. அந்த சிற்பங்களில் அவர் சரவணபவா, அருணருதமூர்த்தி, பிரும்மசாஸ்தா, குருமூர்த்தி, தாரகாரி, க்ருஞ்சபிதகமிர்த்தி, வள்ளி கல்யாண சுந்தரா, மொட்டையாண்டி, மற்றும் பிற புராணக் காட்சிகளில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளார். குமாரசம்பவத்தில் உள்ள குமரனின் பிறப்பைக் காட்டும் காட்சிகளை வடிவமைப்பதை ஓவியர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். அந்தக் காட்சிகளைக் காட்டும் வடிவமைப்புக்கள் (No. 1013 1014 and 1017) பலவும் உள்ளன. அவற்றில் ஒன்று சரவணப்பொய்கை நதியில் ஆறு தாமரை மலர்களில் காணப்படும் ஆறு குழந்தைகளின் வடிவங்கள். அந்த ஆறும் சிவபெருமானின் உயிர் அணுக்களில் இருந்து தெறித்து விழுந்து குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை அரவணைத்து பால் தரும் ஆறுபேரும் ஆறு கிருத்திகைகள் எனப்பட்ட பெண்கள். இன்னும் சில வடிவங்களில் (Nos 1015 and 1016) அந்த ஆறு குழந்தைகளும் ஒரு அம்மனின் கையில் இருக்க, அவற்றை அவள் ஒரே குழந்தைகளாக்கினாள் என்பதை பிரதிபலிக்கின்றது. அப்படி ஒன்றாக்கப்பட்ட கார்திகேயருக்கு ஒரே உடலில் ஆறு தலைகளும், பன்னிரண்டு கைகளும் உள்ளன. அந்த உருவில் காணப்படும் கைகளில் வேல், மணி, கோடி, தாமரை, சேவல், கயிறு, தடி, உளி போன்ற ஆயுதம், வில் மற்றும் அம்பு போன்றவை காணப்படுகின்றன. ஸ்ரிதத்வநீதியில் அவரைக் குறிப்பிடுகையில் அவரை ஒரு முகமும், ஆறு கைகளையும் கொண்டவராக சித்தரிக்கின்றது.
ஆலயத் தேர்களில் காணப்படும் முருகனின் இன்னொரு வடிவம் அருணதமூர்த்தி என்பது (No. 1018 and 10l9). 212 இந்த வடிவத்தில் காணப்படும் முருகன் ஒரு மூர்க்கமான வெள்ளாட்டை வீரபாகுவின் உதவியுடன் அடக்கி, அதை தன்னுடைய வாகனமாக்கிக் கொண்டார் என்பதைப் போல உள்ளது. (No. 1019) ஜடாமுடியுடனும், தாடியுடனும் காணப்படும் பிரும்மா ஒரு பலிதானம் கொடுக்கும் காட்சி உள்ளது. அதில் வளைந்தக் கொம்புகளைக் கொண்ட ஒரு ஆடு யோம குண்டத்தில் விழுவது போலவும், தான் அடக்கிய ஆட்டின் மீது அமர்ந்தபடி முருகன் செல்லும் காட்சியும் காணப்படுகிறது.
பிரும்மசஸ்த்தா எனும் வடிவம், பிரணவ மந்திரம் என்ன என்பதை தெரிந்திராத பிரும்மாவை, அதாவது இந்த உலகைப் படைத்தவரை முருகன் தண்டித்தக் கோலம் ஆகும். இந்தக் காட்சியைக் (Nos. 1020 to 1022) குறிக்கும் மூன்று வடிவமைப்புக்கள் உள்ளன. இன்னும் ஒன்றில் (No. 1020) ஒரு முகமும், நான்கு கைகளையும் கொண்ட முருகனுக்கு முன்னால், அஞ்சலிஹஸ்தா என்ற கோலத்தில் பிரும்மா தனது இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு நிற்கின்றார். முருகனோ இளமையானவர், ஆனால் பிரும்மாவோ அவரைக் காட்டிலும் அதிக வயதானவர். அதில் பின்புறத்தில் உள்ள கைகளில் முருகன் என்ன வைத்துக் கொண்டு உள்ளார் என்பது தெரியவில்லை….பாத்திரம் மற்றும் மணி மாலையாக இருக்கலாம். 213 பிரும்மா சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நிற்பது போல உள்ள அந்த வடிவமைப்பில் பிரும்மாவிற்கு மூன்று முகங்களும், நான்கு கைகளும் உள்ளன. அவருடைய பின்புறக் கைகளில் தண்ணீர்க் குடமும், மணி மாலையும் காணப்பட, முன்னால் உள்ள கைகளில் ஒன்றும் காணப்படவில்லை. அதில் உள்ள முருகனும், பிரும்மாவும் பீதாம்பரத்தை உடுத்திக் கொண்டும், ஸ்கந்தமாலைகளை அணிந்தவாறும் காணப்படுகின்றனர். பிரும்மா ஜடாமுடியுடன் காணப்பட, முருகனோ க்ரிடமுகுடத்தில் இருக்கின்றார்.
(Nos. 1023 to 1036) இதில் சுப்ரமண்யரை குருமூர்த்தியாகக் காட்டும் வடிவமைப்புக்கள் பலவும் உள்ளன. பிரும்மாவை முருகன் சிறை வைத்தவுடன், சிவபெருமான் முருகனிடம் வந்து , அவருக்கு பிரணவ மந்திரத்தின் அர்த்தம் தெரியுமா என்று கேட்கின்றார். அதன் அர்த்தம் தனக்குத் தெரியும் என்றதும், சிவபெருமான் அவர் முன்னால் சிஷ்யராக நின்று கொண்டு அதை முருகனிடம் இருந்து அறிந்து கொண்டார். மூன்று வடிவமைப்புக்கள் (Nos. 1029, 1034 and 1035) முருகன் வீராசனத்தில் அமர்ந்துள்ளதைக் காட்டுகின்றன. அதில் காணப்படுபவரின் வலது கை ஞான முத்திரையைக் காட்டியவாறு இருக்க, தூக்கி வைத்துக் கொண்டு உள்ள தனது கால் முட்டியின் மீது, வரத முத்திரையை காட்டியவண்ணம் உள்ள இடது கையை வைத்துக் கொண்டு உள்ளவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு எதிரில் ஒரு பணிவான மாணவன் நின்றுகொண்டுள்ளதைப் போல, தனது வலது கையினால் வாயை மூடிக் கொண்டு அஞ்சலி பந்த கோலத்தில் சிவபெருமான் நின்று கொண்டு உள்ளார் (Nos. 1034 and 1035).
சிவபெருமானின் பின் உள்ள கைகளில் ஒன்று ஒரு கருப்பு மானிப் பிடித்துக் கொண்டுள்ளபடி இருக்க, இன்னொன்றில் ஒரு சிற்றுளியை வைத்துக் கொண்டு உள்ளவாறு காணப்படுகிறார். சிவபெருமானும் பீதாம்பரத்தை உடுத்தி, ஸ்கந்தமாலை மற்றும் ஆபரணங்களை போட்டுக் கொண்டு உள்ளார். மேலும் பல உருவ அமைப்புக்களில் (Nos. 1030 to 1035) உள்ள குருமூர்த்தி, மொட்டையாண்டியாகக் (துறவி) காட்சித் தருகிறார். உலகப் பற்றித் துறந்து ஒரு பிச்சைக்காரரைப் போல காட்சி தரும் மொட்டையாண்டி, தனது கையில் ஒரு பிட்ஷைப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு உள்ளார். தலையை மொட்டை அடித்துக் கொண்டு அரை நிர்வாண கோலத்திலும், கஷாய மணிமாலையை வைத்துக் கொண்டு உள்ள கோலத்திலும் பல இடங்களில் சித்தரிக்கப்பட்டு உள்ளார். மொட்டையாண்டியாக சித்தரிக்கப்பட்டு (No. 034) உள்ளவர் கையில் ஸ்கந்தமாலையை வைத்துள்ளபடியும் காட்டப்பட்டுள்ளார்.
இன்னும் இரண்டு வடிவமைப்பு மாதிரிகளில், குருமூர்த்தியை சிவபெருமானின் தனது கைகளில் வைத்துக் கொண்டுள்ளது போலவும், (No. 1023) அந்த நிலையில் உள்ளவர் ஒரு மாணவனைப் போலவும் (No 5025) சித்தரிக்கப்பட்டு உள்ளார். பின்னர் படைக்கப்பட்ட சில உருவமைப்பில், குருமூர்த்தி ஒரு உயர்ந்துள்ள பீடத்தில் அமர்ந்து கொண்டு தனது இடது காலை மடக்கி வைத்துக் கொண்டு, வலது காலை தொங்கப் போட்டுக் கொண்டு உட்குடிகா எனப்படும் முத்திரைக் காட்சியை விவரிப்பது போல சித்தரிக்கப்பட்டு உள்ளார். அபூர்வமாக சில வடிவமைப்பில் பார்வதியும் சிவபெருமானுக்கு பக்கத்தில் நின்று கொண்டு உள்ளதை காண முடிகிறது. சிவன் தனது முன்புற இடது கையில் நீண்ட திரிசூலம் ஒன்றை வைத்துக் கொண்டு உள்ளவாறும், சிவபெருமானின் வலது காதில் முருகன் எதையோ கூறுவது போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
சுப்பிரமணியர் யுத்தக் கடவுள் என்பதினால் அவரை தேவசேனாபதியாகக் காட்டி உள்ளனர். அசுரர்களை அழிக்க வலிமையான வீர மகன் வேண்டும் என்ற முக்கியமான காரணத்திற்காகவே குமாரசம்பவம் நிகழ்ந்தது. தாரகா, சூரபத்மன், கஜமுகாசுரா மற்றும் சிதிஷமுகசுரா போன்ற அசுரர்களுடன் யுத்தம் செய்யும் காட்சியில் உள்ள முருகனின் உருவ அமைப்புக்கள் பல ஆலய தேர்களில் காணப்படுகின்றன (Nos. 1037 to 1044). தாரகாசுரனை அழித்ததினால் தாரகாரி எனப் பெயர் பெற்ற ஒரு முகத்துடன் உள்ள முருகன், ஒரு யானை மீது அமர்ந்து கொண்டு தனது ஐந்து கைகளிலும் சேவல், வாள், மணிமாலை, கேடயம், வேல் போன்றவற்றை வைத்துக் கொண்டு, ஆறாவது கையால் அபய முத்திரையைக் காட்டிக் கொண்டு உள்ளது போல காட்டப்பட்டு உள்ளார்.
214 குருஞ்சாபிதாகா எனப்படும் உருவ அமைப்பில் காணப்படும் முருகனின் நான்கு கைகளில், இரண்டு கைகள் வரத மற்றும் அபய முத்திரைகளைக் காட்டிக் கொண்டு இருக்க , மற்ற இரு கைகளும், கரும்பு மற்றும் மலர் அம்பை வைத்துக் கொண்டுள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளார். அதில் அவர் மயில் மீது அமர்ந்து உள்ளார். 215 மேலும் பல வடிவமைப்புக்களில் (Nos. 1037, 1040 and 1044) தேவசேனாபதி தேரில் அமர்ந்து உள்ளார். குதிரைகள் இழுத்துச் செல்வது போன்ற காட்சியில் உள்ள அந்த தேர்கள் கோரதா {goratha (Nos. 1040 and 1044)} அல்லது வைராட்டார் {vairatter type (No 1037) } எனும் கலையில் உள்ளன. இன்னும் ஒரு அமைப்பில் (No. 1040) அசுரனின் தேரை யானை இழுத்து வருவது போல காணப்படுகிறது. தமது தேர்களில் நின்று கொண்டு உள்ள தேவசேனாபதி வடிவமைப்பில் உள்ளவர் அலிதாசனா (ālidhāsana) எனப்படும், வில்லில் அம்பை ஈட்டிய கோலத்தில் காணப்படுகிறார். இன்னொரு காட்சியில் (No. 1041) குருஞ்சா மலையை தனது வேல் கம்பினால் வெட்டிக் கொண்டு உள்ளது போல படைக்கப்பட்டு உள்ளார். மேலும் சில தூண்களில் (Nos. 1045, 1042 and l043) யானை முகத்தைக் கொண்ட அசுரனான கஜமுகாசுரனுடன் அவர் சண்டையிட்டுக் கொண்டு உள்ளது போலவும், சிங்க முகத்தைக் கொண்ட அசுரனான சிம்ஹாம்கசுராவுடன் சண்டையிட்டுக் கொண்டு உள்ளது போலவும் காட்டப்பட்டு உள்ளார்.
சில தூண்களில் முருகன் வள்ளியுடன் காதல் செய்து கொண்டுள்ள காட்சி சித்தரிக்கப்பட்டு உள்ளது . காதலித்தப் பின்னரே அவர் அவளை திருமணம் செய்து கொண்டார். இந்த மையக் கருத்துக்களைக் கொண்டு நடத்தப்படும் கிராமிய தமிழ் நாடகங்கள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. நம்பி என்ற வேடனால் எடுத்து வளர்க்கப்பட்டவள் வள்ளி.
உண்மையில் அவர் ஒரு ரிஷியால் கருத்தரித்த மானுக்குப் பிறந்தவள் என்று நம்பப்படுகிறாள். அதனால் சில பக்கங்களில் (Nos. 1045 to 1049) வள்ளியின் பிறப்பை எடுத்துக் காட்டும் அந்தக் காட்சியில் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அவை சிலவற்றில் ஒரு ரிஷி ஒரு மானை புணர்வது போலவும், அல்லது ஒரு பெண்ணை புணர்வது போலவும் உள்ளன. இரண்டு இடங்களில் (Nos. 1046 and 1047) ஒரு ரிஷியானவர் ஒரு மானுடன் உடலுறவு கொண்டுள்ள காட்சி காணப்படுகிறது. மான் குள்ளமாக (உயரம் குறைந்து) இருப்பதினால் அதைவிட நெட்டையான ரிஷி சற்று குனிந்து கொண்டு தனது உறுப்பை அதன் உறுப்புடன் இணைத்துக் கொண்டு உறவு கொள்ளும் காட்சியில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்னொரு பிரிவில் (No. l049) ஒரு பெண் தனது இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி வைத்துக் கொண்டு ஒரு மிருகம் நான்கு கால்களுடன் நின்று கொண்டுள்ளதைப் போல நின்றிருக்க, இன்னொரு ஆண் மான் அவளுக்குப் பின்புறத்தில் அவள் மீது ஏறி நின்றவாறு அவளுடன் உறவு கொள்வது போல காட்டப்பட்டுள்ளது.
இந்த கலைப் படைப்பின் மூலம் அந்த மானை ரிஷியாக காட்டி உள்ளார்கள். இன்னும் சிலவற்றில் இரண்டு மான்கள் உடலுறவு கொள்ளும் காட்சிகளும் (No. 1045) ஒரு கட்டிலில் மானுடன் சேர்ந்து ஒரு ரிஷி படுத்துக் கொண்டு உள்ளது போலவும் (No. 1048) வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் இருவருமே மனித பிறவிகளாக இருந்திருக்க வேண்டும், அதன் பின் அவர்களில் ஒருவர் மானாகி இருக்க வேண்டும் என்பதையே தத்துவார்த்தமாக அதை படைத்துள்ள கலைஞர் அவற்றின் மூலம் எடுக்காட்டி உள்ளார். 216 பிற பிரிவுகள் முருகன் மற்றும் வள்ளியின் காமக் களியாட்டத்தைக் காட்டுகின்றன. அவற்றின் ஒன்றில் (No. 1051) முருகன் வள்ளியின் இடது கையை பிடித்துக் கொண்டு அவளுக்கு கைரேகை ஜோசியம் கூறுவதைப் போல காணப்படுகிறார் . இன்னொன்றில் (No. 1050) வள்ளியை ஒரு யானை துரத்தி வர, ஒரு வயதான உருவில் அங்கு நின்று கொண்டு உள்ள முருகன் அவளை திருமணத்துக்கு சம்மதிக்குமாறு கேட்பது போல உள்ளது. அதன் பின்னரே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தக் காட்சிகளில் சித்தரிக்கப்பட்டு உள்ள முருகனை வள்ளி கல்யாணசுந்தரம் அல்லது வள்ளிபரியனமூர்த்தி என்கிறார்கள். இன்னும் சிலவற்றில் காணப்படுவது (Nos: 1052 and 1054) முருகன்-வள்ளி திருமணக் காட்சிகள். அதில் கன்னிகா தானம், மற்றும் அக்னி சாட்சியில் பிரும்மாவும் விஷ்ணுவும் நின்று கொண்டுள்ளது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில வடிவமைப்புக்களில் (Nos. 1057 to 1059) முருகனை உலகை ஒரு நொடியில் சுற்றி வந்தவர் என்ற அர்த்தம் தரும் வகையிலான சர்வலோகசனபரதக்ஷனமூர்த்தி என்று கூறியும், அவ்வையாருக்கு நாவல் பழத்தைக் (No. 1050) கொடுப்பது போலவும், மொட்டையாண்டி (Nos. 1060 to 1068) கோலத்திலும் காட்டி உள்ளார்கள். கையில் தராசை வைத்துக் கொண்டு ஒரு நீதிபதி போலவும் முருகன் வடிவமைக்கப்பட்டு உள்ளார். அபூர்வமாக சில இடங்களின் அவரது இடது மற்றும் வலப்புறங்களில் காளி தேவி மற்றும் ஊர்துவதாண்டவமூர்த்தி போன்ற இருவரும் நின்று கொண்டு உள்ளது போலவும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
1.26.3. அபூர்வமான தோற்றங்கள்
சிவபெருமானின் ஊர்ததாண்டவ வடிவமைப்புக்களில் முருகன் கைகளை தட்டிக் கொண்டு உள்ளது போல காணப்படுகிறார். அபூர்வமான ஒரு அமைப்பில் (No. 1082) அவரை மூன்று தலைகளுடன், அதாவது இரண்டு அடுக்கில், உடம்போடு உள்ள ஒரு தலையின் மேல்புறத்தில் இரண்டு தலை உள்ளது போல காட்டி உள்ளார்கள். அதில் உள்ள பன்னிரண்டு கைகளில், முன் இரண்டு கைகளைத் தட்டிக் கொண்டு நிற்பது போல வடிவமைக்கப்பட்டு உள்ளார்.
இன்னும் ஒரு உருவமைப்பில் (No. 1083) முருகனை மூன்று தலைகள் மற்றும் , பன்னிரண்டு கைகளைக் கொண்டவரைப் போலக் காட்டி உள்ளார்கள். இன்னொன்றில் (No. 1089) அவரை ஐந்து தலைகளுடனும், எட்டு கைகளுடனும் காட்டி உள்ளார்கள். அவர் கைகளில் உள்ளவை என்ன என்று தெரியவில்லை. முருகனை (No. 1089) சொவ்ரபேய சுப்ரமணிய எனப்படும் இன்னொரு உருவத்தில், அதாவது நான்கு முகமும், எட்டுக் கைகளையும் கொண்டுள்ளபடி வடிவமைத்து உள்ளார்கள். 218 இன்னும் இரண்டு வடிவமைப்பில் மயில் மீது அமர்ந்துள்ள சுப்ரமணியருடைய கைகள் வட்ட வடிவிலும் (No. 1086) , அறை வட்ட வடிவிலும் (No. 1084) வைத்துள்ளதைப் போல காட்டப்பட்டு உள்ளன. 219 இன்னொரு வடிவமைப்பில் அவருடைய தலை வட்டவடிவில் காட்டப்பட்டு இருக்க, அதில் மத்தியில் உள்ள முகம் மட்டும் தெரியும் வகையில் இருக்க , மற்ற இரண்டு முகங்களையும் காணவில்லை.
சில குறிப்பிடத்தக்க வடிவமைப்புக்களில் (No. 1087) சுகசானா கோலத்தில் மயில் மீது அமர்ந்துள்ள முருகனுக்கு ஐந்து தலைகள் உள்ளன. கைகள் வட்டமாக அமைந்திருக்க, முன்புறத்தில் காணப்படும் இரு கைகளும் வேல் ஒன்றைப் பிடித்தபடி இருக்க, அந்த காட்சியில் உள்ள முருகன் பீதாம்பரத்தை உடுத்திக் கொண்டு, ஸ்கந்த மாலை, கீரியா மகுடம் மற்றும் நகைகளை அணிந்து கொண்டு காட்சி தருகிறார். அந்தக் காட்சி மயில் ஒன்று தனது காலடியில் பாம்பு ஒன்றை அழுத்தி வைத்துக் கொண்டு நிற்பதைப் போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. அந்த வடிவமைப்பில் ஜெயா மற்றும் விஜயா என்ற இருவரும் அதன் இரண்டு பக்கங்களிலும் குள்ளனைப் போல குனிந்து நின்று கொண்டு கையில் தாமரை மற்றும் கஜ ஹஸ்தாவை ஏந்திக் கொண்டு காணப்படுகிறார்கள்.
இன்னொரு வடிவமைப்பில் (No. 1089) சண்முகா நின்ற நிலையில் காட்சி தருகிறார். அந்த வடிவமைப்புக்களில் உள்ளவற்றில் பலரது கைகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. ஆனால் அந்த நிலையிலும் அந்த ஆறுமுக யுத்தக் கடவுள், கையில் வில் மற்றும் அம்புகளுடன் காட்சி தருகிறார். அவர் கொன்று குவித்த அசுரர்களில் தலைகள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடப்பது போன்றக் காட்சியை அந்த வடிவமைப்புக்கள் காட்டுகின்றன.
மற்றும் ஒரு அபூர்வமான வடிவமைப்பில் (No. 1089) முருகன் பத்மாசனத்தில் அமர்ந்து உள்ளார். 220 அதே அமர்ந்த நிலையில் உள்ள வடிவமைப்பில் அவருக்கு பன்னிரண்டு கால்கள் உள்ளது போல காட்டப்பட்டு உள்ளார். அதில் மூன்று அடுக்குகளாக உள்ள அவருடைய முகங்களில், முதலில் மூன்று முகங்கள், அதன் கீழே இரண்டு முகங்கள் மற்றும் அதன் கீழே ஒரு முகத்துடனும் உள்ளது போல வடிவமைக்கப்பட்டு உள்ளது. முன்புறத்தில் காணப்படும் கைகள் அபய மற்றும் வரத முத்திரைகளைக் காட்டியபடி இருக்க, மற்ற கைகளில் உள்ளவை என்ன என்பது தெரியவில்லை.
இன்னும் இரண்டு வடிவமைப்பில் உள்ள சுப்பிரமணியர் வீராசனத்திலும் (No. 1090) சுஹாசனா கோலத்திலும் (No. 1085) ஒரு பீடத்தில் அமர்ந்து உள்ளார். இரண்டிலுமே அவருக்கு ஐந்து முகங்கள் உள்ளன. வீராசனத்தில் உள்ளவர் வலது கையால் ஞான முத்திரையைக் காட்டிக் கொண்டு தக்ஷிணாமூர்த்தியைப் போல காணப்படுகிறார். இரண்டு முகமும் எட்டுக் கைகளையும் கொண்டு காட்சி தரும் இன்னொரு முருகன் அக்னி குண்டத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு உள்ளதினால் அவர் அக்னிஜாத சுப்பிரமணியர் என அழைக்கப்படுகிறார். அவர் கைகளில் நெய் ஊற்றும் அகப்பை, பூ சுற்றிய கத்தி, ஸ்வஸ்திகா, சேவல், கேடயம், மிந்தாங்கி மற்றும் அஷய பாத்திரம் போன்றவைக் காணப்படுகின்றன. 221 இன்னொரு வடிவமைப்பில் முருகன், மேலே தூக்கி வைத்துக் கொண்டுள்ள தனது வலது கையினால் அக்னி குண்டத்தில் நெய்யை ஊற்றுவது போல உள்ள காட்சி உள்ளது.
குமரன் அல்லது முருகன் என்பவர் யுத்தக் கடவுள் ஆவார். அதனால் பெரும்பாலான அவருடைய உருவங்கள் யுத்த கோலத்திலேயே அமைந்துள்ளன. தேவசேனாபதி தாரகி, க்ருன்சேதகமூர்த்தி மற்றும் அருணருதமூர்த்தி என்பவை அவற்றில் சில. காளிதாசரின் குமார சம்பவாவில் கூறப்பட்டுள்ளது உள்ளதைப் போன்ற வீர காவிய புருஷராக அவர் காட்டப்பட்டு இருந்தாலும் சில வடிவமைப்புக்கள் அவருடைய பிறப்பையும் காட்டுகின்றன. தமிழ் கிராமக் கதைகளிலும் நாடகங்களிலும் அவரை ஆற்றல் மிகுந்த வீரனாகவே காட்டுகிறார்கள். முக்கியமாக வள்ளியுடனான காதல் காட்சிகள் கிராம மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. அது போல அவ்வையாருக்கு சிறுவனைப் போல தோற்றம் தந்து நாவல் பழத்தைக் கொடுத்த இடைக் கதையும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவை அனைத்துமே காணப்படும் உருவங்கள் அவருக்கு முறைப்படி அமைந்த உருவங்கள் அல்ல என்றாலும், பல்வேறு பகுதிகளிலும் சற்றே மாறுபட்டு கூறப்படும் குமரப் புராணமும், கிராமியக் கதைகளும் எந்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பைப் பெற்று இருந்துள்ளது என்பது ஆலயங்களின் தேர்களில் அந்தக் காட்சிகளை சித்தரிக்கும் வடிவமைப்புக்களை சிலை வல்லுனர்கள் வடிவமைத்திருப்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம்.
முருகன் ஒரு தமிழ்க் கடவுள் ஆவார். 222 சங்க இலக்கியங்களில் அவரை அப்படித்தான் கூறி உள்ளனர். காலம் செல்லச் செல்ல முருக பக்தி என்பது வாடா நாட்டில் இருந்து வந்த குமார வழிபாட்டு முறையுடன் இணைந்து விட்டது. அதனால்தான் முருகனின் உருவங்களில் அவருடைய தனித் தன்மை வாய்ந்த குணாதிசயத்தை தமிழர்கள் சித்தரித்தது போல வள்ளிகல்யாணசுந்தரராகவும், வடநாட்டில் குமாரசம்பவாவில் கூறப்பட்டு உள்ளதைப் போலவும் சித்தரிக்கின்றார்கள். இப்படியாக காலப்போக்கில் இணைந்துள்ள முருக- குமாரனின் உருவ வடிவமைப்புக்கள் குறுகிய தேசிய மனப்பான்மைகளையும், மொழி பற்றுக்களையும் கடந்து, ஒரு கலாச்சார புரட்சியை ஏற்படுத்தி உள்ளது போன்று வளர்ந்துள்ளது . ஆகவே இந்திய வடக்கு மற்றும் தெற்கு எனும் பிளவை உடைத்து, இரு பிரிவினருமே ஒன்றிணைந்து விட்டதைக் குறிக்கும் கலாச்சாரப் புரட்சியை தோற்றுவிக்கும் முறைக்கு, இந்த உருவ வடிவமைப்புக்கள் ஒரு சாதனமாக இருந்துள்ளன.
Dr. ராஜு காளிதோஸ் |
Dr. ராஜு காளிதோஸ் என்பவர் தஞ்சாவூர் பலகலைக் கழகத்தில் கலைப் பிரிவின் டீன் {(கல்வி நிலைய) முதல்வர்)} மற்றும் வரலாறு மற்றும் சிற்பக் கலை பிரிவின் தலைவர். சிலை உருவ விளக்கங்களைப் பற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாட்டு பத்திரிகைகளில் வெளியிட்டு உள்ளார். இந்திய சிற்பக் கலை, கட்டிடக் கலை மற்றும் உருவ விளக்கம் போன்றவற்றில் பல கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளை ஆற்றி உள்ள அவருக்கு பல அமெரிக்க நாட்டை சேர்ந்த ஒரு வாழ்கை வரலாற்று நிறுவனத்தினால் 1997 ஆம் ஆண்டின் தலை சிறந்த மனிதர் என்ற பட்டம் கிடைத்துள்ளது.