சாது ஸ்ரீகுஹானந்த பாரதி சுவாமிகள் திருப்புகழைப்பாடி இறைத்தொண்டுடன், தமிழுக்கும், தமிழ் இசைக்கும் அருந்தொண்டு ஆற்றியவர். பூர்வாசிரமத்தில் அவ்ர் பெயர் ஆனையாம்பட்டி ஸ்ரீஆதிசேஷையர். ஸ்ரீஆதிசேஷையர் ஆனையாம்பட்டியில் கர்ணமாகப் பணியாற்றியவர். ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சார்யார் அவர்களிடமும், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகள் அவர்களிடமும் அருளாசி பெற்றதோடு, ‘தமிழிசை மணி’, ‘சாஹித்ய கலாநிதி’ முதலிய விருதுகளையும் பெற்றவர்.

சாது ஸ்ரீகுஹானந்த சுவாமிகள்

வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்

அருணகிரிநாதர் அருளிய அருமறையான திருப்புகழைப் பாடிப்பரவி, அருணகிரிநாதரின் புகழைப் போற்றுவதையே தான் பெற்ற பெரும்பேறாகக் கருதினார் முருக பக்தரான வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். இவர் திருப்புகழைத் தொகுத்து திருப்புகழ் பாராயணத் திருமுறையாக வெளியிட்டவர். மகான் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளோடு தனக்கு ஏற்பட்ட சந்திப்புகளை ஒரு அற்புதமான கட்டுரையாக எழுதியிருக்கிறார் ஸ்ரீகுஹானந்த சுவாமிகள். மெய் சிலிர்க்கும் அனுபவங்களை இதயத்தைத் தொடும் இயல்பான நடையில் விவரித்திருக்கிறார். கட்டுரையைப் படிக்கும்போது, நாம் சுவாமிகளையே நேரில் காண்பதுபோல் உணர்கிறோம்.

இவர்களின் முதல் சந்திப்பு 1927ஆம் ஆண்டு ஆனையாம்பட்டியில் நிகழ்ந்தது. அப்போது வள்ளிமலை சுவாமிகள், குஹானந்த ஸ்வாமிகளை திருப்புகழ் பாடுமாறு பணித்தார். குஹானந்த சுவாமிகள் மகானின் தோற்றத்தை வர்ணிக்கையில், “சுவாமிகள் அவர்களுடைய தோற்றமானது ஸ்ரீநாரதமுனி நாதனுடைய அம்சத்தின் தோற்றமேயாகும். முழங்கால்வரை அணிந்த கதர் உடையும் ஒரு தோளில் கெத்து வாத்தியத்தைத் தொங்கவிட்டுக் கொண்டும், மற்றொரு தோளில் மாற்றுடையும் வெற்றிலைப்பெட்டியையும் தாங்கும் கதர் பையையும் அணிந்துகொண்டு தன் கம்பீரமான தோற்றத்துடன் நடையை உடைய அவர்களின் பார்வையைக்கண்டால் திருப்புகழ் பிரசாரத்திற்கென்றே அவதாரம் செய்த துறவியின் காட்சியாகும். அவர்கள் ஸ்ரீஅருணகிரிநாத சுவாமிகள் பாடிய முருகன் திருப்புகழ் பாடல்களை தன் நலம் இல்லாமலும், நகரம் என்றும் கிராமம் என்றும் பாகுபாடு இல்லாமலும், ஸ்ரீமுருகனின் அன்பர்களைத் தேடிச்சென்று திருப்புகழ் பாடி பிரசாரம் செய்ய தவமுனிநாதராக விளங்கியவர்கள்.” என்று விவரிக்கிறார்கள்.

திரு ஆதிசேஷையர் தமது துணைவியார் திருமதி ராஜலெட்சுமி அம்மையாருடன்

இவர்களின் இரண்டாம் சந்திப்பு கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்துக்குச் செல்லும் வழியில் நடந்தது. அதில் வள்ளிமலை சுவாமிகள் திருப்புகழ் வழிபாடு தவறாமல் நடப்பதைக்கேட்டு அறிந்து மகிழ்வுடன் குஹானந்த சுவாமிகளை ஆசி கூறி அனுப்பிவைக்கிறார்.

அவர்களுடைய மூன்றாவது சந்திப்பு வள்ளிமலையில் சுவாமிகள் இருப்பிடத்தில் நிகழ்கிறது. ஆலமரத்தடியில் தவக்கோலத்தில் வீற்றிருந்த வள்ளிமலை சுவாமிகளை வணங்கி, குஹானந்த சுவாமிகள் தனக்கு நண்பர்கள் கொடுத்த அன்பளிப்பு பணத்தை மகானிடம் பாதகாணிக்கையாக சமர்ப்பிக்கிறார்.

சாது ஸ்ரீகுஹானந்த சுவாமிகள்

இவர்களுடைய நான்காவது சந்திப்பு மிக சுவாரசியமானது. அதைப்பற்றி அவரே கூறக்கேட்போம்.

“1945-ம் வருஷம் பார்த்திப வருஷம் புரட்டாசி மாதத்தில் நடந்தது. எளியேனுக்கு 49-ஆவது வயது. ஸ்வாமிகளின் பரிபூர்ண ஆசீர்வாதமும், அனுக்ரஹமும் ஸ்பரிசதீக்ஷையுடன் உபதேசம் பெற்ற ஆண்டின் நிகழ்ச்சியாகும். எனக்கு சித்தூர் ஜில்லா ரிஷிவேலி என்னும் காலனிப்பள்ளிக்குச் சென்றுவரும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனது உறவினர் கே.சீனிவாசய்யர் அப்பள்ளியின் ஆசிரியர். அவர் வீட்டில் நடந்த ஒரு விசேஷத்துக்குச் சென்று திரும்பினேன். வரும் வழியிலே சித்தூருக்கு அருகாமையில் உள்ள வள்ளிமலைக்குச் சென்று சுவாமிகளை தரிசனம் செய்து வரவேண்டும் என்ற நினைவு கொண்டேன். மறுநாள் காலையில் 8 மணிக்கு வள்ளி மலைக்குச் சென்றேன். ஸ்ரீ சுவாமிகளை ஆலமரத்தடியில் தரிசனம் செய்தேன். கனிவுடன் அன்பு நிறைந்த வரவேற்பு அளித்தார்கள். க்ஷேமம் விசாரித்தார்கள். உடனே சரஸ்வதி, லக்ஷ்மி, கௌரி என்று அழைத்தார்கள். பசுக்கள் வந்தன; பால் கறந்தார்கள்; காலை ஆகாரம் முடிந்தது. ஊர் செல்ல விடை கேட்டேன். எளியேனைத் தன்னுடன் ஒரு வாரம் தங்கும்படி சொன்னார்கள். கிராமக்கர்ணம் அலுவல் பார்க்கும் எனக்கு லீவு இல்லை என்றும், வயதடைந்த என் தாயாரையும், தாயற்ற என் இரு சிறு பெண்களையும் பிரிந்திருக்க சௌகரியம் இல்லை என்றும் சொன்னேன். அதற்கு சுவாமிகள் இன்றும், நாளை மாலை வரையிலும் இருந்துவிட்டுப் போங்கள் என்று சொன்னார்கள்; சம்மதித்தேன். அங்கு அப்போது ஸ்வாமிகளுடன் தங்கி திருப்புகழ் பாடும் ஸ்ரீ சுப்ரமண்யம் அவர்களையும், ஸ்ரீ சேதுராமன் அவர்களையும் அறிமுகம் செய்துவைத்தார்கள். அவர்களுக்கு முறையே 12, 14 வயது இருக்கும். அவர்கள் எளியேனுக்கு உபசாரம் செய்தார்கள். சுவாமிகள் அவர்களைப் படிப்புக்காக சென்னை திருவாளர் தணிகை மணி செங்கல்வராய பிள்ளையவர்களிடம் அனுப்பப்போவதாக தெரிவித்தார்கள். பல திருப்புகழ் பாடிக்காட்டி ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். பகல் உணவு முடிந்தது. சஞ்சீவராயன் குண்டு என்ற பாறை அமைப்பு நிழலிலே ஓய்வு பெற்றேன். பகல் 3 மணிக்கு அழைத்து ஆகாரம் கொடுத்தார்கள். ஒரு அபூர்வமான நிகழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.

விண்ணிலிருந்து  பொருள் விழுந்த விந்தை

அதாவது ஒரு சமயம் மலையிலே சில இடங்களை சீர்திருத்தம் செய்தார்களாம். அதற்கு 200 ரூபாய் வரையில் செலவு ஆகிவிட்டதாம். பணத்திற்கு என்ன செய்வது என்ற கவலையுடன் ஸ்ரீ ஆண்டவனைத் துதித்தார்களாம். மறு நாள் காலையில் சுமார் 9 மணி அளவில் அந்த ஆலமரத்தடி நிழலில் அமர்ந்திருந்தார்களாம். சுவாமிகளுக்கு சற்று தூரம் தள்ளி பணமுடிப்பு மூட்டை ஒன்று எதிரில் தொப்பென்று விழுந்ததாம். அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்தார்களாம். 200 ரூபாய் நாணயமாக இருந்ததாம். ஆண்டவன் திருவருள் புரிந்தார் என்று மகிழ்ந்து கூலி பாக்கியைத் தீர்த்தார்களாம். பிறகு சமீப நாளில் ஒரு நாள் சென்னைக்குச் சென்றார்களாம். வழக்கப்படி அன்பர்களைச் சந்தித்தார்களாம். அதில் ஒரு நாள் இப்பால் மறைந்த பிரபல டக்டர் ஸ்ரீ ரங்காச்சாரியார் அவர்களின் இல்லம் சென்றார்களாம். டாக்டர் க்ஷேமம் விசாரித்தார்களாம். ஸ்வாமிகளே! தங்களுக்கு ஒரு நாள் 200 ரூபாய் நாணயமாக ஒரு பையில் கட்டி அனுப்பி வைத்தேனே, அது தங்களுக்குக் கிடைத்ததா? என்று கேட்டார்களாம். ஸ்வாமிகள் பிரமித்து, வியந்து, ஒன்றும் புரியவில்லையே! என்றார்களாம்.. அதற்கு ஸ்ரீ டாக்டர் சொன்னார்களாம்: ஸ்வாமிகளே! ஒரு நாள் இரவில் முருகன் என்னுடைய கனவில் வந்து வள்ளிமலை ஸ்வாமிகளுக்கு 200 ரூபாய் தேவைப்படுகிறது. ஸ்ரமப்படுகிறார். அதை நீ அனுப்பு என்று உத்தரவிட்டாராம். மறுநாள் தன் அலுவல் காரணமாக ஆகாய விமானமூலம் பெங்களூருக்குச் செல்லும் சமயம் அந்தத் தொகையைப் பையில் கட்டி மலைமேல் ஆலமரத்தடியில் ஸ்வாமிகள் இருக்கும் இடத்தை தூரதிருஷ்டிக் கண்ணாடிமூலம் சரியாகக் குறி பார்த்து பணப்பையைப் போட்டார்களாம். என்ன ஆச்சர்யம் என்று சுவாமிகள் வியந்துபோனார்களாம். சுவாமிகள் ஸ்ரீ டாக்டர் அவர்களைப்பார்த்து, ஸ்ரீ முருகன் கனவில் வந்து தங்களுக்குக் காட்சியளித்தானே! நான் இன்னும் அந்த பாக்யம் பெறவில்லையே! என்று ஸ்ரீ டாக்டர் அவர்களைப் பணிந்து போற்றினார்களாம். ஸ்ரீ டாக்டர் அவர்கள் ஸ்ரீ முருகனைக் கனவில் கண்ட பெருமானல்லவா?

சேஷாத்ரி சுவாமிகள் நிகழ்த்திய லீலை

சேஷாத்ரி சுவாமிகள்

மற்றொரு சமயம் தன்னுடைய யாத்திரையில் திருவண்ணாமலைக்குச் சென்றார்களாம். பகவான் ஸ்ரீ ரமண ரிஷிகளை தரிசனம் செய்துவிட்டு திருப்புகழ் பாடி விடை பெற்றார்களாம். வழக்கம்போல் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளைச் சந்தித்து தரிசனம் செய்தார்களாம். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் தன்னுடன் மிகவும் பரிவோடு பேசுவார்களாம். ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளிடம் மறுநாள் காலையில் தான் வள்ளிமலை செல்வதாகச் சொல்லி உத்தரவு கேட்டார்களாம். அதற்கு சேஷாத்ரி சுவாமிகள் அடே! நானும் உன்னுடன் வருகிறேன். இருவரும் போகலாம் என்றார்களாம். அதற்கு நமது சுவாமிகள், ஆச்சர்யத்துடன் பெரும் பூரிப்பை அடைந்து தன்னுடன் சேஷாத்ரி சுவாமிகள் வர இருப்பதை எண்ணி எண்ணி ஆனந்தப்பட்டார்களாம். மறுநாள் ரயில் நிலையத்துக்கு இருவரும் சென்று, ரயில் வந்ததும் ரயில் பெட்டியில் அமர்ந்துகொண்டார்களாம். ரயில்வே சம்பிரதாயப்படி ரயில் புறப்பட்டதாம். உடனே சேஷாத்ரி சுவாமிகள் ரயில் பெட்டியிலிருந்து கீழே குதித்து, கட கடவென்று சிரித்துவிட்டு நீ போ! நான் அங்கு வருகிறேன் என்று சொன்னார்களாம். சித்தில் ஆடல் காட்டும் மகான், ஜீவன் முக்தர், அவர்கள் அனுக்ரஹம் என்னே! ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அவர்களின் பரிபூர்ண அனுக்ரஹம் பெற்றவர்கள் அல்லவா நமது சுவாமிகள்!

வள்ளிமலை

நமது சுவாமிகள் வள்ளிமலை சென்றார்களாம். மலைமேல் மலையின் மேல்புறத்தில் உள்ள ஒரு இடத்தில் பொங்கியம்மன் என்னும் தேவியைச் சிலையில் அமைத்துப் பூஜை செய்வார்களாம். அன்று ஒரு நாள் பூஜை முடித்து அம்மனுக்கு நிவேதனம் செய்துவிட்டு நமஸ்காரம் செய்து எழுந்து, கைகூப்பி கண்மூடி தியானித்தார்களாம். கண் திறந்த சமயத்திலே பொங்கியம்மன் சந்நிதிக்குச் சேர்ந்தாற்போல் தென்புறம் உள்ள இடைவெளியில் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் உருவகத்தை தரிசனம் செய்தார்களாம். பிரமித்து நின்ற நம் சுவாமிகள் உடனே நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்து நின்றவுடன், அந்த இடத்தில் ஒரு அணிற்பிள்ளை துள்ளி விளையாடிக்கொண்டிருந்ததாம். அன்றுமுதல் பொங்கியம்மனுக்கும், சேஷாத்ரி சுவாமிகளுக்கும் தான் அமைத்த சிலைக்கு தினம் பூஜை, நிவேதனம் செய்வார்களாம். என்னே நம் சுவாமிகளின் மன உறுதியும் தவப்பயனும்!

அன்றிரவு ஆகாரம் முடித்துக்கொண்டோம். இரவு சுமார் 8 மணி இருக்கும். சஞ்சீவராயன் குண்டுக்கு எளியேனை அழைத்துச் சென்றார்கள். வடகிழக்கு மூலையைச் சுட்டிக் காண்பித்தார்கள். வெகு தொலைவில் சிறிய அளவில் தெரிந்த வெளிச்சத்தைக் காண்பித்தார்கள். அந்த ஒளியின் இடம்தான் திருத்தணிகைக் கோயில் என்று சொல்லி தரிசனம் செய்துவைத்தார்கள். சோதியுணர்கின்ற வாழ்வு சிவம், என்ற சோலைமலைத் திருப்புகழ் பாடலை நினைவூட்டினார்கள். தான் தினம் தினம் அந்த ஜோதி தரிசனம் செய்துவருவதையும் தெரிவித்தார்கள். சுவாமிகளின் மனம் நெகிழ்ந்த அன்பு நிலைதான் என்னே!

அருணகிரிநாதரின் பெயர் ஆராய்ச்சி

ஸ்ரீ அருணகிரிநாதர்

மறுநாள் காலை ஆகாரம் முடிந்ததும் ஆராய்ச்சியைத் தொடங்கினார்கள். தொடங்கும் முன் நான் நமது ஸ்ரீ சுவாமிகளிடம் ஸ்ரீ அருணகிரிநாதரின் பெயர் ஆராய்ச்சிக்கு உரிய ஒரு கேள்வியைக் கேட்டேன். அதாவது பரப்ரம்மஸ்வரூபமான பூர்ண அம்ச அவதாரங்களான ஸ்ரீ விநாயகருக்கு கணநாதன் என்றும், ஸ்ரீ முருகபிரானுக்கு சுவாமிநாதன் என்றும், ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு சோமநாதன், ஜம்புநாதன், விஸ்வநாதன் என்றும், ஸ்ரீமந் நாராயணன் அவதாரங்களிலே, ராமநாதன், பண்டரிநாதன், துவாரகாநாதன், ஏகநாதன், என்றும் நாத சப்தங்களிலே அர்ச்சனைகளிலும், நாம பஜனைகளிலும் சொல்லி வழிபாடு செய்கிறோம். கிறிஸ்தவர்களும் தாங்கள் கடவுளாக வணங்கும் இயேசுவை, இயேசு நாதர் என்றும் அழைக்கிறார்கள். பரமேஸ்வரனைத் தமிழ் பாடலில் தேவாரம், பண், காந்தாரம், திருவாசகம், இவைகளால் பாடிய அடியார்களை அப்பர் சுவாமிகள், திருஞானசம்மந்தமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசக சுவாமிகள் என்று அழைக்கின்றோம். அத்வைத நிலையைப்பற்றிப் பாடிய பட்டினத்தாரை பட்டினத்தடிகள் என்றும் தாயுமானவரை தாயுமானவ சுவாமிகள் என்றும் அழைக்கின்றோம். ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களையும் பிரபந்தங்களில் பாடிய வைஷ்ணவப் பெரியார்களையும், கம்பனையும், வில்லிப்புத்தூராரையும் ஆழ்வார்கள் என்றே அழைக்கிறோம். அப்படி இருக்க திருப்புகழ் முதல் ஐந்து நூல்களைப் பாடித் தந்திருக்கிற நமது ஸ்ரீ அருணகிரியாரை ஸ்ரீ அருணகிரிநாதர் என்றே அழைக்கின்றோம். இவரை மட்டும் நாத சப்தத்திலே அழைக்கும் காரணம் என்னவென்று நமது சுவாமிகளைக் கேட்டேன்.

நமது சுவாமிகள் உடனே ஆவேச உணர்ச்சியுடன் சிரித்துவிட்டு, என் அருகில் வந்தார்கள். எளியேன் முதுகைத் தட்டித் தடவிக்கொடுத்தபடியே அப்படி கேளடா பாண்டியா? என்று சொல்லிவிட்டு விளக்கம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். என்ன உத்சாகம்! அவைகள் சுவாமிகளின் கற்பனையா? ஆராய்ச்சியா? புராண நூல்களின் ஆதாரமா? என்பவைகளை இதைப் படிக்கும் நமது அன்பர்களின் அபிப்பிராயத்துக்கு விட்டுவிடுகிறேன். நமது சுவாமிகள் சொன்னதாவது: கைலாயத்தில் ஒரு நாள் பரமேஸ்வரன், கணபதி, முருகன், ஸ்ரீ பார்வதி தேவியார் இவர்களுடன் அமர்ந்திருந்தார். அது சமயம் நமது ஸ்ரீ முருகன் தனது இருக்கையைவிட்டு எழுந்திருந்து தன் தகப்பனாரை வணங்கினான்.

ல்லி அருளவேண்டும் என்றான். அதாவது “நான் சிறு குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது பிரம்மாவைப் பார்த்தேன். ஓம் என்ற பிரணவத்துக்குப் பொருள் கேட்டேன். அவரால் சொல்ல இயலவில்லை. பிரணவ அர்த்தம் தெரியாத நீ சிருஷ்டித் தொழிலுக்கு அருகதை இல்லை, என்று சொல்லி அவர் தலையிலே குட்டிச் சிறையில் வைத்தேன். அவர் செய்த சிருஷ்டித் தொழிலைச் செய்துவந்தேன். அது விபரம் தெரிந்த, தாங்கள் நந்திகேசுவரரை அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி சொல்லி அனுப்பினீர்கள். நான் விடுதலை செய்யமுடியாது என்று சொல்லிவிட்டேன். உடனே நந்திகேசுவரர் தாங்கள் சொன்னதைச் சுட்டிக்காட்டி பிரம்மாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தினார்கள். நான் அவர் பேரில் கோபம் கொண்டு, நீ போகிறாயா இல்லையா?

உன்னையும் சிறையில் அடைக்கிறேன் பார், என்று மிரட்டி வீரபாகுவை அழைத்தேன். நந்திகேசுவரர் ஓடிவிட்டார். பிறகு தாங்களே வந்தீர்கள். என்னைப்பார்த்து இது என்ன விளையாட்டு? பிரம்மாவை விடுதலை செய் என்றீர்கள். நான் முடியாது, என்று சொல்லிவிட்டு பிரணவ அர்த்தம் தெரியாத பிரம்மா சிருஷ்டித் தொழிலுக்கு அருகதையல்ல என்றேன். உடனே தாங்கள், என்னைப் பார்த்து உனக்குப் பிரணவ அர்த்தம் தெரியுமா? என்று கேட்டீர்கள். குரு சிஷ்ய சம்பிரதாயத்தில் கேட்டால் சொல்கிறேன் என்றேன். தாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள். பணிந்து நின்று கேட்டீர்கள். நான் உங்கள் குழந்தைதானே. ஏதோ சொன்னேன். நீங்கள் மகிழ்ந்து என்னை குருநாதா! சுவாமிநாதா! என்று அழைத்தீர்கள். அன்று முதல் எனக்குத் தகப்பன் சாமி என்ற பட்டப்பெயரும் வந்துவிட்டது. இதை வெகுநாட்களாகச் சிந்தித்து ஆதி குரு உருவாகியமர்ந்து மௌன நிலையிலே, சனகாதி முனிவர்களான நால்வர்களுக்குத் தாங்கள் சொன்ன மந்திரம் என்ன? நான் பிரணவ மந்திரத்துக்கு என்ன பொருள் சொல்லி இருக்கக்கூடும்? என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன். இது பெரியோர்களுக்குச் செய்த அபசாரச் செயல்தானே! என்று கருதித் தங்களிடம் இதற்கு ஒரு பிராயச்சித்தம் கேட்கிறேன் என்றார்.

சம்பந்தர்

உடனே பரமேஸ்வரன் முருகனை அன்புடனே அழைத்து அணைத்தார். பிராயச்சித்த முறையைச் சொன்னார். அதாவது “கலியுகத்திலே பாண்டியநாடாம் மதுரை மாநகரிலே நிறைந்த சிவநேயச்செல்வர்கள் உண்டு. பிற்கால நிகழ்ச்சியிலே சமண சமயத்தார்கள் அங்கு சென்று அரசனை சமண மதத்தினனாக்கி விடுவார்கள். சமண மதம் பரவி, சைவசமயம் அழிந்துவிடும் நிலை ஏற்படும். அதுசமயம், நீ சீர்காழிப்பதியிலே அந்தணர் குலத்திலே ஞானசம்பந்தராகப் பிறந்து, சிறு குழந்தையாக வளர்ந்து வருவாய். உன்னைப் பிரிய மனம் இல்லாத உன் தந்தை உன்னையும் அழைத்துக்கொண்டு கோயிலில் உள்ள குளத்தின் படியிலே உன்னை விட்டுவிட்டு நீராடச்சென்று நீரில் மூழ்குவார். அது சமயம் நீ தகப்பனைக் காணாத நிலையிலே, அம்மா! என்று அழுவாய். உன் குரல் கேட்டு உன் தாயார் பார்வதி தேவியார் வந்து உனக்குப் பால் ஊட்டுவார்கள். உன் கடைவாயில் பால் ஒழுகுவது கண்ட உன் தகப்பன்  உனக்குப் பால் கொடுத்தது யாரடா? என்று மிரட்டிக் கேட்பார். அதுசமயம் நான் உனக்கு விருஷபத்தில் ஏறிவந்து காட்சி கொடுப்பேன். நீ உடனே அந்த திசையைக் காட்டிப் பாடுவாய். (தோடுடைய செவியன் என்ற தொடக்கப் பாடல்) அது முதல் நீ என்னையே பாடித் துதிப்பாயாக. நான் உன்னை என் குமாரன் என்று ஏற்றுக்கொண்டு பொற்சிவிகையும் பொற்றாளமும் கொடுப்பேன். உன்னை யாவர்களும் முருகன் அவதாரம் என்றே துதிப்பார்கள். நீ மதுரை சென்று சமணர்களை வாதில் வென்று திருநீற்றுப்பதிகம் பாடி அரசனை சைவனாக்கி சைவ சமயத்தை நிலைநாட்டி என்னையே போற்றுவாயாக. அதற்கு இதுதான் பிராயச்சித்தம்” என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியே முருகனுக்கு பிராயச்சித்தமாக நடந்தது. முருகன் ஆறுதல் பெற்றான்.

மீண்டும் கைலையில் ஒரு நாள்

கைலாயத்தில் முன் சொன்னபடி பரமேஸ்வரன் தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தார். நம் முருகனை அழைத்தார். பரமன் முருகனைப் பார்த்து, “முருகா! நீ உன் கடமையைச் செய்து உன் மனோரதத்தைப் பூர்த்தி செய்துகொண்டாய். நீ என் குமாரனே. ஆனாலும் நீ எனக்கு பிரணவ உபதேசம் செய்த குருநாதன் அல்லவா? ஆகவே குருவுக்கு சிஷ்யன் என்ற முறையிலே உனக்கு நான் வழிபாடு செய்து காட்டவேண்டும் அல்லவா? கலியுகத்தின் பின் நாளிலே தமிழ் நடுநாட்டில் தேவி உபாசகர்கள் செய்யும் சாக்தேயப் பிரசாரமும் வைஷ்ணவப் பிரசாரமும் முன்னேறி மக்களுக்குள் குழப்பமும் மனமாற்றமும் ஏற்படும். அரசர்களும் அதை ஆதரிப்பார்கள்.அந்தக்காலத்திலே நான் திருவண்ணாமலையிலே தோன்றி உன்னை குருநாதனாக அடைந்து சைவ, வைஷ்ணவ, தேவி முதலிய தெய்வங்களை பாரபக்ஷமன்னியில் பாடி சமநோக்குடன் மக்களை வழிபாடு செய்யும்படி தொண்டு செய்வேன். ஆகவே நீ எனக்கு குருநாதன் தான்.” என்றுசொல்லிவிட்டு பரமேஸ்வரன் தன் கடமையைச் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆகவே பரமேஸ்வரன் தன் அம்சமாக ஸ்ரீ அருணகிரியாக அவதரித்து ஸ்ரீ முருகனைப் பாடினார். சம நோக்கிலே பரமேஸ்வரன் தானே பாடியதால் அருணகிரிநாதர் எனப் பெயர் பூண்டார். பரமேஸ்வரனின் பூர்ண அம்சமான ஸ்ரீஅருணகிரிக்கு, அருணகிரிநாதர் எனப்பெயர் அமைந்தது முற்றிலும் சரிதானே! என்று திருப்புகழ் பாடலிலே அநேகம் பாடல்களை மேற்கோள் காட்டினார்கள். திருவண்ணாமலை ஸ்தல புராணத்திலும் இதற்குரிய சான்றுகள் இருப்பதாகவும் கூறினார்கள். பகல் போஜனம் முடிந்தது.

திருப்புகழ் கற்றவர் சித்தப் பிரசித்தரே!

அன்று மாலை சுமார் 3 மணிக்கு மீண்டும் சந்தித்தோம். சித்துநிலையைப்பற்றிப் பேசினார்கள். திருப்புகழ் பாடல்களின் கருத்தையறிந்து மனம் நெகிழ்ந்து ஒன்றிப்பாடினால், சித்து நிலை வெளியாகுமாம். அந்த நிலை தனக்கும் தெரியாதாம். வள்ளிமலையிலேயே தான் இருந்த சில சமயங்களில் எல்லாம் தன்னை பல இடங்களில் அன்பர்கள் பார்த்ததாகச் சொல்வார்களாம். சுவாமிகள் சிந்தித்து அவை ஆண்டவன் திருவருள் என்று எண்ணி அதை ஆமோதிப்பார்களாம். அந்த நிலை உமக்கும் ஏற்படும். அதில் நீர் மயங்கிவிட வேண்டாம் என்று எச்சரித்தார்கள். அதற்குச் சான்றாக ஸ்ரீ அருணகிரிநாதர் பாடிய சித்துவகுப்பின் கடைசி அடியில் உள்ள திருப்புகழ் கற்றவர் சித்தப் பிரசித்தரே! என்று மேற்கோள் சொன்னார்கள். அந்த நிலை அவரவர்கள் சுவானுபவ நிலையிலே முழுதும் உண்மைதானே!

சாது ஸ்ரீகுஹானந்த ஸ்வாமிகள் ஆனையாம்பட்டி பஜனை மடத்தில்
சாது ஸ்ரீகுஹானந்த ஸ்வாமிகள் ஆனையாம்பட்டி பஜனை மடத்தில்

மாலை 5 மணியளவிலே சுவாமிகளின் பாத கமலங்களிலே வணங்கி உத்தரவு பெற்றேன். எழுந்து நின்றார்கள். தன் மார்போடு எளியேனை அணைத்தார்கள். எளியேன் சிரசின் மேல் தமது வலக்கரத்தை அமர்த்தினார்கள். எளியேன் உடல் சிலிர்த்தது. திருப்புகழ் பாடல் சொல்லி ஆசி கூறினார்கள். அதாவது சகல துக்கமும் அற சகலசற்குணமும் வர ஜெகத்தினில் புகழ்பெற அருள்வாயே! என்ற பாடலாகும். காசைப் பணத்தைத் தேடி அலையாதீர்! அவைகளைக் கேட்டால் முருகன் உடனே கொடுத்துவிடுவான். அதைக் காவல் செய்வதே நிலைத்துவிடும். பக்தி நிலைக்குப் பாதம் ஆகும். வேண்டும்போது வேண்டும் அளவிலே முருகன் பொருள் கொடுப்பான். அருள் செய்வான் என்று உபதேச மொழி கூறினார்கள். மாலையில் ஆகாரம் கொடுத்தார்கள். உடனே ஒரு அன்பரை அழைத்து வழித்துணைக்கு ஒரு விளக்குடன் வழிகாட்டியாகத் திட்டம் செய்து திருவலம் ரயில்வே நிலையத்துக்கு அனுப்பிவைத்தார்கள். பிரியாவிடை பெற்றுத் திரும்பி ஆனையாம்பட்டி கிராமத்துக்கு வந்தேன்.” இவ்வாறு வள்ளிமலை சுவாமிகளுடன் தன்னுடைய நான்காவது சந்திப்பைப் பற்றி கூறுகிறார்கள்.

சேலம் ரயில் நிலையத்தில் நடந்த இவர்களுடைய ஐந்தாவது சந்திப்பு கடைசி சந்திப்பாக அமைந்தது. மகான் வள்ளிமலை சுவாமிகளின் அருளாசி பெற்ற குஹானந்த சுவாமிகள்  சொலர்க்கரிய திருப்புகழ் உலகில் பரவ ஆற்றிய தொண்டு அளவிற்கரியது.

1931 ஆம் ஆண்டில், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வெள்ளிக்கிழமைதோறும் திருப்புகழ் பாடும் சபையை அமைத்து அதில் சிறுவர்களும், சிறுமிகளும் திருப்புகழ் பஜனையை வார வழிபாடாகச் செய்யவேண்டும் என்று குஹானந்த ஸ்வாமிகள் செய்த ஏற்பாடு 39 ஆண்டுகளாகத் தொடர்ந்து, நடத்தப்பட்டு வருகிறது என்று மகிழ்வோடு எழுதியிருப்பதிலிருந்து, இந்த கட்டுரை 1971 – 72 ல்  எழுதப்பட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.

ஆத்தூரை அடுத்த வட சென்னி மலையில் குஹானந்த  சுவாமிகள் 26.7.1931 முதல் அடியவர்களுடன் திருப்புகழ் பாடி வார வழிபாடு நடத்தத் தொடங்கிய, அரிய செய்தியும் இதில் கிடைக்கிறது. வட சென்னி மலையை  ஒரு முக்கியமான முருகன் வழிபாட்டுத் தலமாக அறியச் செய்ததில் சுவாமிகளின் பங்கு மகத்தானது. 

சுவாமிகள் ஆனையாம்பட்டியில் 1922ஆம் ஆண்டில் தொடங்கிய ஸ்ரீ முருகனின் தைப்பூச வழிபாடு இன்று வரை தொடர்ந்து நடந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவது, சுவாமிகளின் பக்தியுணர்விற்கும், தொண்டுள்ளத்திற்கும் சான்று பகர்வதாகும். சுவாமிகள் முருகக் கடவுள் மீது பாமாலைகள் பல புனைந்துள்ளார். 

“என்ன கவி பாடினாலும்” என்ற உள்ளத்தை உருக்கும் பாடல் சுவாமிகள் உடல் நோய் நீங்கவும் வறுமை நோய் நீங்கவும் முருகக்கடவுளிடம் மனமுருகி வேண்டிப் பாடியது. அவ்விரு நோயும் நீங்க முருகன் அருள்பாலித்ததற்கு நன்றியுடன் முருகன் கருணையை நினைத்துப் பாடியது ‘என்ன கவி பாடினேன் யான்’ என்ற ஆனந்த பைரவி ராகப் பாடல். இனி பாடல்களைப் பார்ப்போம்.  

 தாளம் : ஆதி 

பல்லவி:

என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை 

இன்னும் என்ன சோதனை ஐயா –  முருகா

                                  (என்ன)

அனுபல்லவி:

உன் அன்னையும் அறியவில்லை – தந்தையும் நினைப்பதில்லை 

உன் மாமியும் பார்ப்பதில்லை – மாமனும் கேட்பதில்லை             (என்ன)

சரணங்கள்:

அக்ஷர லக்ஷம் தந்த அன்பன் போஜராஜனில்லை 

பக்ஷமுடனே அழைத்து பரிசளிக்க பிரபு இல்லை 

இக்ஷணத்தில் நீ நினைத்தால் எனக்கொரு குறையும் இல்லை 

லக்ஷணமோ உனக்கில்லை – உன்னை நான்  விடுவதில்லை       (என்ன)

கம்பன் களிக்கச் சடைவள்ளல் இருந்தான் அரூர் 

சுந்தரன் களிக்கவோ சேரன் இருந்தான் தமிழ்ச் 

சங்கப்புலவர் களிக்க மன்னன் பாண்டியனும் தானிருந்தான் 

எங்கள் குறை தீர்க்க இனி யாருண்டு பாரினிலே                             (என்ன)

அன்பர்கள் கூட்டம் கண்டால் அதில் எனக்கு நாட்டமுண்டு 

இன்பமுடன் அவர் பாட இசைக்க உன் தமிழுண்டு 

கர்மவினை நீங்க உந்தன் கழலுண்டு என்பாரன்பர் 

எந்தன் பிணிகள் நீங்க இனி என்ன உண்டு சொல்வாய் அப்பா       (என்ன )


ராகம் : ஆனந்தபைரவி                                                           தாளம்: ஆதி 

பல்லவி:

என்ன கவி பாடினேன் யான் உந்தன் மனம் குளிர்ந்ததையா 

இன்னும் உந்தன் சோதனை இல்லை ஐயா! முருகா!!                  (என்ன)

அனுபல்லவி:

உன் அறிந்து கொண்டாள் தந்தையும் நினைவு கொண்டான் 

உன் மாமியும் பரிந்து பார்த்தாள் மாமனும் மகிழ்ந்து கொண்டான் (என்ன)

சரணங்கள்:

அக்ஷரலக்ஷணம் தெரிந்த ஜெகத்குரு அருளுண்டு 

பக்ஷமுடனே அழைத்து பரிசும் விருந்தும் தந்ததுண்டு 

இக்ஷணத்தில் நீ நினைத்தாய் எனக்கேது குறையுண்டு 

லக்ஷியமும் உனக்கு உண்டு யான் பாடிப் பணிவதுண்டு             (என்ன)

கம்பன் களித்த சடைவள்லலைப் போல ஆரூர் 

சுந்தரர்க்களித்த மன்னன் சேரனைப் போல தமிழ்ச் 

சங்கப் புலவர்க்களித்த மன்னன் பாண்டியனைப் போல 

எந்தன் பிணி தீர்க்கும் வள்ளல் பிரபுக்கள்  உண்டு பாரினிலே (என்ன)

அன்பர்கள் கூட்டம் கண்டால் அதில் எனக்கு நாட்டம் உண்டு 

இன்பமுடன் அவர்பாட இசைக்க உன்தமிழ் உண்டு 

உலகில் என்றும் 

எந்தன்பிணி நீங்கியதால் என்னகுறை சொல்வேன் அப்பா (என்ன)


(ஆதாரம் : மணிப்புகழ் மலர்   முதல் பாகம்  (2ம் பதிப்பு ) ஸ்ரீ சாது குஹானந்த பாரதி சுவாமிகள் வெளியீடு )

சாது ஸ்ரீகுஹானந்த சுவாமிகளின் கட்டுரையைத் தந்து உதவிய சுவாமிகளின் வழித்தோன்றல் ஈரோடு திரு முரளி அவர்களுக்கும், கட்டுரையை எங்களுக்கு அனுப்பி, எமக்கு கட்டுரையில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு உலகத்தின் எந்தப்பகுதியிலிருந்தாலும் உடனுக்குடன் விடை அளித்து உதவி செய்த டாக்டர் சீனிவாசன் அவர்களுக்கும் முருகன் பக்தி இணையதளம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஸ்ரீகுஹானந்த பாரதி ஸ்வாமிகளின் சில பாடல்களை, சுவாமிகளோடு நெருங்கிப் பழகிய ஜலதரங்க வல்லுனர் திரு கணேசன் அவர்களின் மாணவியர் ஜனனியும், பத்மப்ரியாவும் பாடக் கேட்போம்.

சாது ஸ்ரீகுஹானந்த சுவாமிகள்
Tagged on: