முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர்

கே.பி.எஸ். என்ற கே.பி.சுந்தராம்பாள் என்ற கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவர் கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார் கோவை, கொடுமுடியில் 1908 அக்டோபர் 10 அன்று பாலாம்பாளின் புதல்வியாக சுந்தராம்பாள் பிறந்தார். கனகசபாபதி, சுப்பம்மாள் என்ற இரண்டு சகோதரர்கள். சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். ஏழ்மை குடும்பம். கொடுமுடி லண்டன் மிஷன் பள்ளி’யில் கல்வி கற்றார் சுந்தராம்பாள்.

சிறுமி சுந்தராம்பாளை பெரியவர்கள் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்ததுடன் பூஜை நடைபெறும் நேரங்களில் கோயிலில் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் கோயிலில் பாட, படிப்படியாக கோயிலுக்கு கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது. இவ்வாறு சுந்தரம்பாள் ஒரு பாடுகிற பெண் என்று கொடுமுடிப் பகுதியில் பலருக்குத் தெரிந்தது.

கே.பி. சுந்தராம்பாள்

கொடுமுடி சுந்தராம்பாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர். கரூர் இவரது தாயாரைத் திருமணம் செய்து கொடுத்த ஊர். சுந்தராம்பாள் கொடுமுடியில்தான் பிறந்தார், வளர்ந்தார். கொடுமுடிக்கும் கரூருக்கும் அதிகத் தூரமில்லை. இருப்பினும் கொடுமுடி ரயிலடியிலேயே சுந்தராம்பாளின் வீடு இருந்ததால் ரயிலில்தான் கரூருக்குப் பயணம் செய்வது வழக்கம்.

ஒருமுறை சுந்தரம்பாள் கொடுமுடியிலிருந்து கரூருக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். சக பயணிகளாக அந்த ரயிலில் வந்த கொடுமுடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுந்தராம்பாளைப் பார்த்ததும் பாடச் சொல்லிக் கேட்டனர். சுந்தராம்பாள் பாடத் தொடங்கியதும் அந்தக் குடும்பத்தினருடன் சேர்ந்து, அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைவரும் ஆர்வமாகக் கேட்டு மகிழ்ந்தனர்.

இந்த ரயில் பெட்டியில் வேலு நாயர் என்பவரும் இருந்தார். மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், கும்பகோணத்தில் நாடகக் கம்பெனி நடத்திவந்தார். தான் இயக்குகிற நாடகங்களில் குழந்தை வேடங்களில் நடிப்பதற்குப் பொருத்தமான, திறன் வாய்ந்த சிறுவர் சிறுமியரைத் தேடிக் கொண்டிருந்த வேலு நாயருக்கு சுந்தராம்பாளின் பாடும் திறனைத் தெரிந்து கொண்டவுடன், இவரே பொருத்தமாக இருப்பார் என்பதை உணர்ந்தார்.

தனது தாய்மாமா மலைக்கொழுந்துவுடன் ரயிலில் சென்று கொண்டிருந்த சுந்தராம்பாளையும் அவரது மாமாவையும் அணுகி, அவர்களின் சம்மதத்தைப் பெற்று, அவர்களை நேராக கும்பகோணம் அழைத்துச் சென்றார் வேலு நாயர்.

நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளின் மூத்த பிள்ளையான ஞானசேகரன் வேடத்தை சுந்தராம்பாள் ஏற்று ஆண்வேடத்தில் நடித்தார். ‘பசிக்குதே! வயிறு பசிக்குதே’ பாடலை அருமையாகப் பாடி ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சொந்தக் குரலிலேயே பாடி நடித்தார்.

1917−ல் கொழும்பு சென்று நடிக்கத் தொடங்கினார். இலங்கையின் பல ஊர்களிலும் இவர் நடித்த நாடகம் நடைபெற்றது. 1929களில் நாடு திரும்பினார். வள்ளி திருமணம், நல்லதங்காள், கோவலன், ஞானசெளந்தரி, பவளக்கொடி போன்ற அக்காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களில் நடித்தார்.

ரசிகர்களின் பலத்த ஆதரவை குறுகிய காலத்திலேயே பெற்றார் சுந்தராம்பாள். பாட்டு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம் என்று இரண்டிலும் ஒன்றைவிட ஒன்று சிறப்பு என்று பார்த்தோரும், கேட்டோரும் பரவசப்படும் அளவுக்கு திறன்களை முழுமையாக வெளிப்படுத்தினார். காலப்போக்கில் கே.பி.சுந்தராம்பாளுக்காகவே நாடகம் பார்ப்பதற்குக் கூட்டம் அலைமோதியது.

KB Sundarambal as Murugan

மீண்டும் கே.பி.எஸ். 1926−ல் கொழும்புக்கு நாடகக் குழுவுடன் சென்றார். கே.பி.எஸ் புகழ் பரவலாக வளர்ந்திருந்தது. அக்காலத்தில் எஸ். ஜி. கிட்டப்பா தனது குரல் வளத்தால் நடிப்பால் பலரது கவனத்தைப் பெற்று புகழுடன் இருந்து வந்தார். கொழும்பில் கேபிஎஸ் உடன் இணைந்து கிட்டப்பா நடிக்க ஆரம்பித்தார்.

1926ஆம் ஆண்டு சுந்தராம்பாள் – கிட்டப்பா நடித்த வள்ளிதிருமணம் அரங்கேறியது. இருவரும் பின்னர் திருமணம் செய்து கொண்டனர். கே.பி.எஸ் பாடல் இசைத்தட்டுகள் எங்கும் ஒலிக்கத் தொடங்கின.

1933−ல் டிசம்பர் 2-ல் கிட்டப்பா காலமானார். அப்போது அவருக்கு வயது 28. சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார். எந்தவொரு ஆண் நடிகருடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார். அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கேபிஎஸ் 1934−ல் நந்தனார் நாடகத்தில் நடித்தார். தொடர்ந்து நாடகங்களை நடத்தி வந்தார். பெரும்பாலும் ஆண் வேடம் தரித்து பெண் வேடத்துக்கு வேறு பெண் நடிகர்களை அமர்த்தியிருந்தார்.

காங்கிரஸ் பிரசாரங்களில் கேபிஎஸ் தவறாது ஈடுபட்டு வந்தார். கதர் இயக்கம், தீண்டாமை ஒழிப்பு, வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய பாடல்களையும் பாடி வந்தார். பக்த நந்தனார் என்னும் படத்தில் நந்தனார் வேடம் பூண்டு நடித்தார். அப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள். இவற்றில் கேபிஸ் பாடியவை 19 பாடல்கள். 1935-ல் இப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் ஒரு தீ விபத்தில் முழுமையாக எரிந்து போனதால் இதன் பிரதிகள் இப்போது இல்லை. அடுத்ததாக மணிமேகலையில் நடித்தார். 1938−ல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 1940−ல் படம் வெளிவந்தது. இப்படத்தில் 11 பாடல்களை இவர் பாடியிருந்தார்.தமிழிசை முதல் மாநாட்டு இசையரங்கில் (ஜனவரி 4, 1944) கலந்து கொண்டார்.

தொடர்ந்து கேபிஎஸ் ஔவையார் என்ற படத்தில் ஔவையார் வேடமேற்று நடித்தார். இப்படம் 1953−ல் வெளிவந்தது. ‘பொறுமை யென்னும் நகையணிந்து’ , ‘கன்னித் தமிழ்நாட்டிலே – வெண்ணிலவே’ போன்ற பாடல்கள் பிரசித்தமானவை. ஒளவையார் படத்தில் 48 பாடல்கள். இவற்றில் கேபிஎஸ் பாடியவை 30. 1964 பூம்புகார் படம் வெளிவந்தது. இப்படத்தில் கவுந்தி அடிகள் பாத்திரத்தை கேபிஎஸ் ஏற்று நடித்திருந்தார்.

மகாகவி காளிதாஸ் (1966), திருவிளையாடல் (1965), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை] (1967), துணைவன் (1969), சக்தி லீலை (1972), காரைக்கால் அம்மையார் (1973), திருமலை தெய்வம் (1973) உள்ளிட்ட 12 படங்களில் கேபிஎஸ் பாடி நடித்தார்.

1980 செப்டம்பர் 19-ல் கேபிஎஸ் மறைந்தார். கே.பி.சுந்தராம்பாளும் கிட்டப்பாவும் சேர்ந்து இதிகாச நாடகங்களில் தொடக்கத்திலிருந்தே நடித்து வந்தாலும், அக்கிரம ஆட்சிக்கு எதிரான ஏராளமான பாடல்களை அந்த நாடகங்களின் இடையிலேயே கதையுடன் இணைத்துப் பாடினர். அந்நியர் எதிர்ப்புப் பாடலைப் புரிந்து கொண்ட மக்கள் உற்சாகத்துடன் கைதட்டி தங்களது உணர்விணை வெளிப்படுத்தினர்.

நாடகங்களில்லாமல் தனித்த பாடல்களாகவும் விடுதலைப் போராட்டப் பாடல்களை இவர்கள் இருவரும் பாடினர். இப்பாடல்களில் ஈர்க்கப்பட்ட காங்கிரஸ் இயக்கத் தலைவர்கள் சத்தியமூர்த்தி, காமராஜ் ஆகியோர் நேரடியாக கொடுமுடிக்குச் சென்று காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியமான கூட்டங்களில் பாடுவதற்கு கே.பி.சுந்தராம்பாளை அழைத்தனர். சுந்தரம்பாளும் அவர்களின் அழைப்பையேற்று கூட்டங்களில் பாடி தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உணர்வையும் ஊட்டினார். 1937 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் நீதிக்கட்சியும் களத்தில் இருந்தன. காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலெல்லாம் தலைவர்கள் உரையாற்றுவதற்கு முன்பு கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். ‘ஓட்டுடையோர் எல்லாம் கேட்டிடுங்கள்’ என்ற பாடலை தனக்கே உரிய கணீரென்ற குரலில் கம்பீரமாக சுந்தராம்பாள் பாடத் தொடங்கினால், வெட்டவெளி மைதானமாக, பெட்டல்காடாகக் கிடக்கிற பொதுக்கூட்ட மைதானம், மனிதத் தலைகளால் நிரம்பி வழியும்.

கூட்டம் முடியும் போதும் சுந்தரம்பாள் பாடுவார் என்று அறிவித்துவிட்டு தலைவர்கள் பேசுவர்கள். கூட்டம் முடியும்போது ‘சிறைச்சாலை என்ன செய்யும்?’ என்ற பாடலை சுந்தராம்பாள் பாடக்கேட்டு, அனைவரின் நெஞ்சுக்கும் சிறைச்சாலைக் கொடுமைகளைத் துச்சமென மதிக்கத் தோன்றும்.

KB Sundarambal
கே.பி. சுந்தராம்பாள்

காந்தியடிகளைப் பற்றிய கே.பி. சுந்தரம்பாளின் பாடல்களை மேடைதோறும் மக்கள் கேட்டு உருகிப் போவது மட்டுமின்றி, இசைத் தட்டுகளாகவும் அப்பாடல்கள் வெளிவந்தன. ‘காந்தியடியோ பரமஏழை’ என பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. காந்தியடிகளைப் பாடல்கள் மூலம் பரப்பிய பெருமைக்குரியவர்களில் கே.பி.சுந்தராம்பாள் மிகவும் முக்கியமானவர்.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன் அன்றைய காலகட்டத்தில் (1953) 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாகத் தயாரித்த ‘அவ்வையார்’ படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியவர் கே.பி.சுந்தராம்பாள். ‘அவ்வையார்’ ஒரு அற்புத காவியமாக அமைந்தது. கே.பி.எஸ்ஸின் பாடல்களும் நடிப்பும் ரசிகர் இதயங்களைத் தொட்டன. கறுப்பு_ வெள்ளையில் தயாரான மிகச்சிறந்த படங்களில் அவ்வையாருக்கு நிச்சய இடம் உண்டு. கலைஞர் கருணாநிதி தயாரித்த ‘பூம்புகார்’ (1964) படத்தில் கவுந்தியடிகளாகவும், ஏ.பி.நாகராஜன் தயாரித்த ‘திருவிளையாடல்’ (1965) படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் கே.பி.எஸ். நடித்தார்.

திருவிளையாடலின் மாபெரும் வெற்றிக்கு கே.பி.எஸ். பாடிய பாடல்கள் பெரிய பலமாக இருந்தன. மகாகவி காளிதாஸ் (1966), கந்தன் கருணை (1967), உயிர் மேல் ஆசை (1967), சின்னப்ப தேவரின் துணைவன் (1969), காரைக்கால் அம்மையார் (1973), திருமலைத்தெய்வம் (1973) ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்தார்.

டி.ஆர்.ராஜகுமாரியின் சகோதரர் டி.ஆர். ராமண்ணா தயாரித்த ‘சக்திலீலை’ படத்தில் நடித்தார். கே.பி.எஸ்ஸின் கடைசி படம் இதுதான்.

1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுந்தராம்பாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகக் கோளாறு, இதயக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மருந்து சாப்பிட மறுத்து வந்தார். அவர் மயக்க நிலையில் இருந்தபோது மருந்து செலுத்தப்பட்டது.

செப்டம்பர் 19அன்று அவர் உடல்நிலை மிக மோசம் அடைந்தது. அதனால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் சுந்தராம்பாளைக் காப்பாற்ற முடியவில்லை. வளர்ப்புமகள் ராமதிலகம், மருமகன் ரத்தினசபாபதி, தம்பி கே.பி.கனகசபாபதி ஆகியோர் அருகே இருந்தனர்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தார்.

“கே.பி.எஸ். தேசிய நடிகை. அவர் உடலை நடிகர் சங்கத்தில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்க வேண்டும். அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். அதை சுந்தராம்பாள் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதன்படி, நடிகர் சங்கத்துக்கு சுந்தராம்பாள் உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். முதல்_அமைச்சர் எம்.ஜி.ஆர்., கவர்னர் பட்வாரி, அமைச்சர்கள், தி.மு.கழக தலைவர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் நடிகர் _ நடிகைகள், பிரமுகர்கள் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று மாலை நடந்த இறுதி ஊர் வலத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர். உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. “சிதை”க்கு சுந்தராம்பாளின் தம்பி கே.பி.கனகசபாபதி தீ மூட்டினார்.

குரல்வளத்தாலும், பாடும் திறத்தாலும் நடிப்புத்திறனாலும் ஒரு கலைஞரான கே.பி.சுந்தராம்பாள் சிறுவயதில் பட்ட துன்பங்கள் நிறைய. திருமண வாழ்வில் எதிர்கொண்ட ஏமாற்றங்களும் அதிகம். ஆனாலும் கே.பி.எஸ். கலையின் மேல் கொண்டிருந்த பிடிப்புகளும் அதற்கான சமூக உந்துதல்களும் பெரும் காரணிகளாக முன் நின்றிருக்கின்றன. எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும், ஒரு பெண்ணாக மணவாழ்வில் அவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும் உதாசீனங்களும் நிகழ்கலைகளில் ஈடுபடும் பெண்கலைஞர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்ள நேர்கிற அவலத்தையே சுட்டி நிற்கின்றன. இது கே.பி.எஸ். காலம் தொட்டு இன்று வரை தொடரும்அவலம்தான்.

கே.பி. சுந்தராம்பாள் கிட்டப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே அவருடைய அக உலகையும், பெண்மனத்தின் நெகிழ்ச்சியையும் புலப்படுத்தும் ஆதாரமாக உள்ளன. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த ஒரு காலகட்டத்தில் பாரம்பரிய இசை குறித்தும் கர்நாடக இசை குறித்தும் அவர் மேற்கொண்ட நிலைப்பாடுகள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. இசையில் பிராமணிய மதிப்பீடுகளின் மேலாண்மைக்கும், வட நாட்டு மெல்லிசையை அப்படியே எடுத்தாளும் வர்த்தக சினிமாவின் போக்குக்கும் எதிராக அவர் இயக்கம் கொண்டு அதனாலேயே புறக்கணிக்கப்பட நேர்ந்தது கூடுதலான சமூகப் பரிமாணங்கள் கொண்டது.

சுந்தராம்பாள் நாடக மேடைகளிலும் சினிமாப் படங்களிலும் தனியாகவும் பாடிய 200க்கு மேற்பட்ட பாடல்கள் இசைத் தட்டுகளாக வெளிவந்துள்ளன. சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய “ஞானப்பழத்தைப் பிழிந்து” என்ற பாடலையும் “தனித்திருந்து வாழும் தவமணியே” என்ற பாடலையும் காலத்தால் அழியாவண்ணம் அற்புதமாகப் பாடியுள்ளார், கே.பி.எஸ்.

தேசியவாதியான கே.பி.எஸ். பண்டித நேருவின் தந்தை மோதிலால் நேரு இறந்தபோது “பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே” என்ற பாடலையும், கஸ்தூரிபாய் கால மானபோது “உன்னை மறந்திடப்போமா” என்ற பாடலையும், காந்தி மறைந்தபோது “உத்தமராம் காந்தியை” என்ற பாடலையும் தனி இசைத்தட்டாக உள்ளம் உருகப் பாடினார்.

மகாத்மா காந்தியை சுந்தராம்பாள் இரண்டு முறை சந்தித்து இருக்கிறார். 1937ல் காந்தி ஈரோடு வட்டாரத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது சத்தியமூர்த்தியின் ஏற்பாட்டின்படி கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டில் உணவருந்தினார். மகாத்மாவுக்கு ஒரு தங்கத்தட்டில் உணவு பறிமாறினார் கே.பி.எஸ். “எனக்குச் சாப்பாடு மட்டும்தானா? தட்டு கிடையாதா?” என்று காந்தி சிரித்துக்கொண்டே கேட்க, விருந்து முடிந்ததும் தங்கத்தட்டை காந்தியிடம் வழங்கினார் கே.பி.எஸ். காந்தி அதை அங்கேயே ஏலத்தில் விட்டு, பணத்தை காங்கிரஸ் நிதியில் சேர்த்துவிட்டார்.

1958ல் காமராஜர் முதல்வராக இருந்தபோது, கே.பி.எஸ். தமிழக மேல்_சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கி கவுரவித்தது. தருமபுரம் ஆதினம் “ஏழிசை வல்லபி” என்ற பட்டத்தையும், தமிழிசைச் சங்கம் “இசைப் பேரறிஞர்” பட்டத்தையும் வழங்கின.

அவ்வையார் திரைப்படத்தில் நடிப்பதற்கு, ஜெமினி எஸ்.எஸ். வாசன் கே.பி. சுந்தராம்பாளுக்கு அதுவரை தமிழ் சினிமாவில் யாருக்கும் இல்லாத ரூ. 1 லட்சம் தந்தார்.

KB Sundarambal and SG Kittappa
கருணாநிதி வசனத்தை எதிர்த்த கேபி சுந்தராம்பாள்

கே.பி. சுந்தராம்பாள்
Tagged on: