மாண்புடைய மார்கழியும் விழாக் கோலம் பூணும் தை மாதமும்

மார்கழி மாத முழுவதும்
மாலை நினைக்க வைத்தாள்
மாண்புடைய மண் மடந்தை கோதை

அவனுக்காக தொடுத்த பூமாலையை
தான் சாற்றிக்கொண்டாள்
அரங்கனை தன் அத்தானாக
வரித்துக் கொண்டாள் .

நாளுக்கொரு பாமாலை
பாடினாள் .பரவசமானாள்.
 நம்மையெல்லாம்
அவன் உறையும் கோயிலுக்கு
அனுதினமும் அழைத்துச் சென்றாள்
அவனோடு அயிக்கியமாகிவிட்டாள் .
நிலையாக சிலையாக
அவளருளால்
அனுதினமும்
சுதினமாகிவிட்டது

அடுத்து வந்ததோ தை தை  என
ஆடி வந்தது தைத் திங்கள்

உள்ளத்தில் பக்தி பொங்கி
வழிந்தோடிககொண்டிருக்கும்
நேரத்தில் அடுப்பில் பால் பொங்கி
பகலவனுக்கு இனிப்பான பொங்கலைப்
படையலிட்டு நன்றியுடன்
வணங்கி பொங்கல் விழாவினைக்
கொண்டாடி  மகிழந்தோம் .

அடுத்து வந்தது பவுர்ணமி நன்னாள்
செல்வநாயகி  இலக்குமியின்  சோதரன்
பாற்க் கடலிலிருந்து தோன்றியதால்
என்னவோ பால் போல் குளிர்கின்றான்
நம் உள்ளம் முழுவதும்
உவகையினால் நிறைக்கின்றான்

இன்று  தைப் பூச நன்னாள்.
ஹரனுக்கும் அவன் மகன் குகனுக்கும்
பெருமை சேர்க்கும் நன்னாள்

ஓவியம்:தி ரா.பட்டாபிராமன் 

ஹரனின் களிக் கூத்தினால்
இந்த அண்டம் முழுவதும்
இன்று மகிழ்ச்சியில் திளைத்து
உள்ளம்  எழுச்சி பெறுகின்றது.

ஓவியம்:தி ரா.பட்டாபிராமன் 

ஓவியம்:தி ரா.பட்டாபிராமன் 

அசுரர்களை ஒழித்து அவர்களை
அவன் அடியார்களாக
மாற்றிக்கொண்டான்  குகன்

நம் மனதில் பதுங்கிக்கொண்டு
நம்மையெல்லாம்
ஆட்டி படைக்கும் காம குரோதாதிகளை
அவன் நாமம் துணை கொண்டு
விரட்டிஅடிப்போமாக

ஓவியம்:தி ரா.பட்டாபிராமன் 

பசித்திரு,தனித்திரு விழித்திரு
என்ற தாரக மந்திரத்தை
உலகிற்கு அளித்த வள்ளல் பெருமான்.

எல்லா உயிரும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயம் எல்லாம்  ஓங்குக
கண்மூடிப் பழக்கங்கள் மண் மூடிப் போக
ஜோதிதான் தெய்வம். மீதியெல்லாம் அதன் நிழல்களே
என்று உண்மையை நமக்கு உரைத்த வள்ளல் பெருமான்
ஜோதியிலே கலந்துவிட்ட நாள். தைப் பூசம்

அவர் கூறிய ஜோதி வழிபாடு நடக்கிறது
மீதி கொள்கைகள்  காற்றில் போய்விட்டது.
என்ன செய்ய?

இந்த நன்னாளிலிருந்தாவது அவைகளை
கடைபிடிக்க ஒரு சிலரேனும் முயற்சி செய்தால் அந்த
நல்ல உள்ளம் மகிழும்.

இறை சிந்தனையோடு எப்போதும் இருப்போம்
என்றும் நிறைவான வாழ்வு அமைந்து இன்பமாக
இவ்வுலகில் வாழ்வோம்

Courtesy: Pattabi Raman vijayakoti33@gmail.com

மாண்புடைய மார்கழியும் விழாக் கோலம் பூணும் தை மாதமும்