படையப்பா!
18-10-1998 தினமணி கதிர்
அவருடைய எண்ணம், எழுத்து, சொல் மற்றும் செயல் அனைத்துமே படையப்பாதான். அதாவது அந்த ஆறுபடை வீட்டின் அதிபதியான முருகன். அவர் முருகனைப் பற்றி பேசாத நேரம் இல்லை. நினைக்காத நாள் இல்லை. முருகனைப் பற்றி எங்கு எந்தவிதத் திருவிழாக்களோ, கருத்தரங்குகளோ நடந்தாலும் அங்கு இவரைக் காணலாம். இறுதியாக இவரைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான விஷயம். முருகனை இப்படி விடாமல் பற்றிக் கொண்டு இருக்கும் பேட்ரிக் ஹாரிகன் ஒரு அமெரிக்கர். வயது 48.
அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் ஒன்றான மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் இள நிலைப் பட்டம் பயின்றபோது இவருடைய முக்கிய பாடங்கள் மத சம்பந்தப்பட்டவை. பிறகு ஆசியாவில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆசிய மொழிகளும் இலக்கியங்களும் இவரைப் பெரிதும் கவரவே பௌத்த மதம் குறித்து ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார்.
இந்திய மதங்கள் பற்றி அமெரிக்காவில் கிடைத்த அத்தனை புத்தகங்களையும் தேடித் தேடி படிக்க ஆரம்பித்தார். படித்தார் என்று கூறுவதைவிட வெறியோடு கரைத்துக் குடித்தார் என்பதே சரி. இப்படி ஊன்றிப் படித்தும் இவருக்கு திருப்தி கிடைக்கவில்லை. இன்னும் இன்னும் என்று அலைந்தார். தேடியபோது அங்கிருந்த மிகப் பெரிய நூலகங்களில் கூட இவருக்குத் தேவையானவை கிடைக்கவில்லை. இந்தத் தேடல் இவரை அமெரிக்காவை விட்டு வெளியேறச் செய்தது.
பௌத்த மதம் மிகவும் பரவலாக காணப்பட்ட இடமான இலங்கையை நோக்கிப் படை எடுத்தார். இதற்கு முன்னர் ஜப்பான், தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இதே முயற்சியாகச் சென்ற போதும் அங்கும் இவருடைய தேடலுக்குப் பற்றாக்குறை ஏற்படவே இலங்கைக்குச் சென்றார். இலங்கையில் இவரது தேடல் ஓரளவுக்கு நிறைவு பெற்றது.
யாழ்ப்பாணத்தில் கெளரிபாலா என்ற மகானை சந்தித்தார். அதன் பிறகு இவரது வாழ்க்கையே திசை மாறியது. ‘தான் யார்?’ என்று தன்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தார். தமிழ் மொழி மேல் ஏற்கனவே ஓரளவுக்கு இவருக்கு ஆர்வம் இருந்தது. தமிழையும் கற்க ஆரம்பித்தார்.
திரிகோணமலையிலிருந்து கதிர்காமம் வரை வருஷம்தோறும் முருக பக்தர்கள் மேற்கொள்ளும் பாத யாத்திரையில் தானும் சென்றால் என்ன என்ற எண்ணம் மேலோங்க 1972 ஆம் ஆண்டு முதன் முறையாக அந்தப் பாத யாத்திரையில் கலந்து கொண்டு பக்தர்களோடு பக்தனாக கந்தனைச் சந்திக்கக் கிளம்பினார். 44 நாட்கள் நடையாய் நடந்த இந்த யாத்திரை இவருக்கு புதியதோர் அனுபவத்தைத் தந்தது. இந்தப் பாதயாத்திரைதான் படையப்பனாகிய முருகனோடு இவருக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு.
முருகனைப் பற்றி அறிந்து கொள்ளவும் முருக பக்தியைப் பற்றிப் புரிந்து கொள்ளவும் வேண்டுமானால் இந்த பக்தர்களோடு சங்கமம் ஆகிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தார். இந்து மதக் கோட்பாடுகள் இவரை பெரிதும் கவரவே படையப்பனோடு ஐக்கியமாகி விட்டார். அமெரிக்கா திரும்பினார். தன் தாயாரிடமும் சகோதரிகளிடமும் விடை பெற்றுக் கொண்டு மீண்டும் இலங்கை திரும்பினார். இலங்கையில் தங்கி இருந்து வருடா வருடம் இந்தப் பாத யாத்திரையில் கலந்து கொண்டு முருகனை தரிசிப்பதை தலையாய கடமையாகக் கொண்டார். 44 நாட்கள் காட்டுவெளிப் பயணம். நிறையப் பழங்குடி மக்களை சந்தித்தார். பழங்குடியினரின் முருக பக்தியை பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுத ஆரம்பித்தார். பழங்குடியினரை பேட்டி கண்டு வீடியோ பதிவுகளும் செய்தார்.
இந்த பாதயாத்திரைகளை மேற்கொண்டபிறகு முருகன் மேல் இவரது பக்தி வளர்ந்து கொண்டே போய் ‘கதிர்காம அடியார்கள் தர்ம நிலையம்’ என்ற அமைப்பில் தன்னை ஒரு தொண்டனாக இணைத்துக் கொண்டார். இந்தப் பாத யாத்திரையின் போது மிகச் சாதாரணாமாக நடைபெறும் ஒரு நிகழ்வு இவரை மிகவும் பாதித்ததாகக் கூறுகிறார். தமிழர்கள், சிங்களவர்கள், பௌத்தர்கள், மற்றும் காடு வாழ் வேடர்கள் எனப் பலரும் ஒன்றாக இணைந்து இன ஒருமைப்பாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் முருகனை தரிசிக்கச் செல்வதுதான் அது. ஒருமைப்பாட்டுக்கான முக்கியக் கடவுள் முருகன் என்பது இவர் ஆழ்ந்து, ஆராய்ந்து உணர்ந்த உண்மை.
இந்த உண்மை, முருகனின் தாயகமான இந்தியாவுக்கு இவரை இழுத்து வந்தது. அதற்குப் பிறகு இந்தியாவிலேயே தங்கி விட்டார். இருந்தபோதிலும் கதிர்காம பாத யாத்திரையை இவர் மறக்கவில்லை. 88, 89, 90, 91 ஆகிய ஆண்டுகளில் வருடம் தவறாமல் இந்த பாத யாத்திரையில் கலந்து கொண்டு வந்திருக்கிறார். சமீப காலத்தில் போக முடியவில்லையே என்பதில் இவருக்கு மன வருத்தம். போக முடியாததற்குக் காரணம் பணமின்மை. எப்படியும் அந்த படையப்பன் அருள் புரிவான், மீண்டும் அந்த பாத யாத்திரையில் கலந்து கொள்வேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
இந்தியா வந்த பிறகு இவர் தேர்ந்தெடுத்த தலைப்பு ‘கல்ட் ஆப் ஸ்கந்த முருகன்’ (Cult of Skanda-Murugan). இந்த விதமான ஆய்வுக் கட்டுரைகளோடு இவர் திருப்தி அடைந்து விடவில்லை. புகைப் படங்கள், வீடியோ என்று அடுத்த நிலைக்குத் தாவினார்.
கதிர்காமப் பாதயாத்திரை, அங்கு நடக்கும் கோயில் திருவிழா பற்றிச் சுமார் 100 மணி நேரத்துக்கும் மேலாக வீடியோ எடுத்து உள்ளார். இதை சுவையாக ‘எடிட்’ செய்து அரை மணி நேரப் படங்களாக மாற்றி வைத்து உள்ளார். தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளைப் பற்றியும் பல்வேறு வகைகளிலான முருக ஓவியங்களையும் தனது வீடியோவிற்குள்ளும், கம்ப்யூட்டரிலும் பதிவு செய்து வைத்திருக்கிறார். திருச்செந்தூர் கந்த சஷ்டியையும் அரை மணி நேரச் செய்திப் படமாகத் தயாரித்து வைத்து இருக்கிறார்.
இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஆசியவியல் நிறுவனம் சார்பாக சென்னையில் 1998 டிசம்பர் 28, 29, 30 ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் கந்தன்-முருகன் பற்றிய முதல் உலக ஆராய்ச்சிக் கருத்தரங்கிற்கான ஆதார வேலைகளில் தற்சமயம் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார். உலகளாவிய பல்துறை அறிஞர்களையும் இந்தியா, இலங்கை மலேஷியா மற்றும் (ஆங்கிலம் அறிந்த) பிறநாட்டு முருக பக்தர்களையும் ஒன்று சேர்க்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாக இந்தக் கருத்தரங்கம் அமையும் என்கிறார் பேட்ரிக் ஹாரிகன்.
ஆசியவியல் நிறுவனத்தில் தமிழ் பேராசிரியர் டாக்டர் சண்முகம் பிள்ளையிடம் ஆறு வருடங்கள் தமிழ் பயின்று, தற்போது தமிழில் சரளமாக பேசுகிறார். நம்மையும் தமிழிலேயே அவருடன் உரையாடச் சொல்கிறார். அண்மையில் சண்முகம் பிள்ளை காலமாகி விட்டார். அவரது மறைவு இவரை பெரிதும் பாதித்து இருக்கிறது. முருகன் அவரைப் பறித்துக் கொண்டு விட்டானே என்று ஆதங்கப்படுகிறார்.
தமிழ் தவிர சமிஸ்கிருதம், ஹிந்தி, உருது, சிங்களம், ஜெர்மன், நேபாளி போன்ற மொழிகளும் இவருக்கு அத்துப்படி. தனது முற் பிறவிகளெல்லாம் இந்தியாவில் அதிகமாக குறிப்பாக தமிழகத்தில்தான் நிகழ்ந்து இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புகிறார். எனவே தனது வாழ்நாள் முழுவதும் தமிழகத்திலேயே கழித்து விட வேண்டும் என்றும் அதற்கு முருகப் பெருமான் நிச்சயம் உதவி செய்வார் என்றும் நம்புகிறார்.
தற்போது இண்டர்னெட்டில் முருகக் கடவுளது அனைத்துச் செய்திகளையும் படங்களையும் பதிவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார். மேலும் பக்தி என்ற பத்திரிகையையும் இண்டர்னெட்டில் கொண்டு வரும் முயற்சியில் தீவீரமாக இருக்கிறார். இந்தப் பத்திரிகைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.
இலங்கையில் இருக்கும்போது கதிர்காம அடியார்கள் தர்ம நிலையத்தின் சார்பாக இலவசப் பிரசுரமாக பக்தி பத்திரிகையை தனி ஒருவனாக நடத்தி வந்திருக்கிறார். பத்திரிகையின் ஆசிரியராக அவர் இருக்கும் போதும் ஒரு பத்திரிகைக்கான அனைத்து வேலைகளையும் இவர் ஒருவராக செய்ததை பெருமையுடன் நினைவு கூர்கிறார். இந்தப் பத்திரிகை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வெளி வந்தது. பத்திரிகை முழுக்க முழுக்க முருக பக்தியை மையப் பொருளாக கொண்டது. வெள்ளை வேட்டியுடன் எளிமையாகக் காட்சி தரும் பேட்ரிக் தற்சமயம் ஆசியாவில் நிறுவனம் இவருக்காக தந்துள்ள சிறிய அறையில் தங்கி இருக்கிறார். தானே சமையல் செய்து கொண்டு எப்போதும் முருகனை எண்ணிக் கொண்டும் தனது வேலைகளை செம்மையாகச் செய்து வருகிறார்.
நிறுவனத் தலைவர் ஜான் சாமுவேல் இவருக்கு தனது முழு ஆதரவையும் அளித்து வருகிறார்.திரும்ப அமெரிக்கா செல்லும் எண்ணம் உண்டா என்று கேட்டால், போதுமான பணமும் கிடைத்து முருகன் அருளும் இருந்தால் செல்வேன் என்கிறார். தாயைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர் கண்ணில் தெரிகிறது.
தமிழ் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டால் புன்னகையுடன் அதற்கும் முருகன் அருள் வேண்டும் என்கிறார். திரைப்படங்களைப் பார்க்கும் வழக்கம் உண்டா என்ற வழக்கமான கேள்வியை இவரிடம் கேட்டபோது வித்தியாசமான பதில் வந்தது. கந்தன் கருணை போன்ற முருகன் படங்களையே பார்ப்பேன். வேறு படங்கள் எதுவும் பார்க்கும் பழக்கம் இல்லை என்று கூறி மெல்லியதாக சிரிக்கிறார்.
முருகா, முருகா என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக் கொண்டிருக்கும் இவரை பேட்ரிக் என்று அழைப்பதை விட படையப்பா என்று அழைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்கிறார் மற்றொரு முருக பக்தர்.
டிசம்பரில் நடைபெறவிருக்கும் கந்தன்-முருகன் பற்றிய முதல் உலக ஆராய்ச்சிக் கருத்தரங்கில் ஒலிப்பேழை படக்காட்சித் திட்டம் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். இதில் ஜெர்மனியை சேர்ந்த பேராசிரியர் நிகலஸ் எடுத்த வீடியோ படமான வைகாசி விசாகத் திருவிழா- மதுரை மற்றும் திருப்பரம்குன்றம், இலங்கையை சேர்ந்த சந்திரசாகரா தயாரித்துள்ள கதிர்காமம்-கந்தன் -முருகன் முத்தொகுதி நாடகம், ஸ்பெயின் நாட்டவரான இசபெல் உருவாக்கி உள்ள பாதயாத்திரை- ஓர் ஆன்மீகப் பயணம் இவற்றோடு பேட்ரிக் உருவாக்கி உள்ள திருச்செந்தூர்- கந்தர் சஷ்டி ஒளிப் பேழை படக் காட்சியும் இடம் பெற இருக்கின்றன.
பேட்ரிக் தனது ஆஸ்திரேலியா நண்பருடன்
See also these related research articles about the cult of Skanda-Kumara in Sanskrit sources:
- “Murugan Bhakti: A User’s Manual” by Patrick Harrigan
- “Skanda-Subrahmanya in Sanskrit Tradition” by S.S. Janaki
- “Skanda in ancient North India” by R.K. Seth
- “The Skanda cult in India: Sanskrit sources” by K.V. Sarma
- “Karttikeya in Early Indian Coinage” by S. Suresh