Lord Skanda-Murugan
 

 

திருப்புகழில் திருவண்ணாமலை

அருணகிரியார்
அருணகிரியார்

திருவண்ணாமலை என்றதுமே முருகபக்தர்களின் நினைவுக்கு வருவன திருப்புகழ் ஆதிய நவமணி நூல்களும் அவற்றை நமக்களித்த அருணகிரிநாதருமே. சிவபெருமானுக்குத் தேவாரம் போன்று நாராயணனுக்கு ஆழ்வார்கள் பாசுரம் போன்று முருகப்பெருமானுக்கு உகந்தவை அருணகிரிநாதரின் சந்தப்பாக்கள் கயிலை முதல் கதிர்காமம் வரையிலுள்ள கோயில்களைத் தரிசித்துப் பாடியவர் திருவண்ணாமலையில் மட்டுமே சுமார் 78 பாடல்களைப் பாடியுள்ளார். நாற்பதாண்டுகளாகத் திருப்புகழ் பாடியும் பரப்பியும் தொண்டாற்றிவரும் எனக்கும் என் கணவர் ஈ.என். மூர்த்தி அவர்களுக்கும் அருணகிரிநாதரின் பார்வையில் அண்ணாமலைக்கோயிலை வலம் வர ஆவல் ஏற்பட்டது. அதன் விளைவாக் ஒரு புநித யாத்திரையும் ஏற்பாடாயிற்று.

திருவண்ணாமலைக்கோயிலின் முகப்பில் நின்று ராஜகோபுரத்தைத் தரிசித்ததுமே "அடல் அருணைத் திருக்கோபுரத்தே"

என்று துவங்கும் கந்தர் அலங்காரச் செய்யுள் நினைவுக்கு வருகிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணீயமாயிற்றே; ஆனால் அது என்ன ‘

அடல் அருணை?' அடல் என்பதற்கு வீரம் என்பது பொருள்; ஆனால் இங்கு அது ஞான வீரம் என்று பொருள்பட அமைந்துள்ளது'' என்கிறார் கி.வா.ஜ. அவர்கள். குகைநமசிவாயர் குருநமசிவாயர் ரமணமகரிஷி சேஷாத்ரி ஸ்வாமிகள் யோகி ராம் சூரத்குமார் போன்ற ஞானிகளைப் பிற்காலத்தில் நமக்குக் காட்டித்தந்த அருணாசலம் அல்லவா! எனவே அன்றே தீர்க்கதரிசியாக நம்மவர் அடல் அருணை என்று பாடி வைத்துவிட்டார் போலும்!

முருகன் அருணகிரியாரது இஷ்ட தெய்வம்; குறிக்கோள் தெய்வமும் கூட; அதனால் கோபுரத்தின் வடவாயிலுக்கு அருகிலுளள முருகன் அவருக்கு முதலில் தென்படுகிறான்;ஆனால் அண்ணன் விநாயகரை வணங்காமல் பாடத் துவங்க முடியுமா? எனவே

"அடல் அருணைத் திருக்கோபுரத்தே அந்த வாயிலுக்கு

வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில்.

தடபடெனக் குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்

கட தட கும்பக் களிற்றுக்கிளைய களிற்றினையே

என்று பாடுகிறார். நாமும் கோபுரத்திலுல்ள மூத்த களிறைத் தரிசித்தபின் கோபுரத்திளையனார்' என்றழைக்கப்படும் இளைய களிற்றைத் தரிசிக்க விரைகிறோம். வல்லாள அரசனால் புதுப்பிக்கப்பட்ட கோபுரத்தை ஒட்டி அமைந்துள்ளது கோபுரத்திளையனார் சந்நிதி. இவரைப்பற்றிப்பாடும்போது

"ஆடக விசித்ர கன கோபுர முகப்பில்

அருணாபுரியில் நிற்கும் அடையாளக்கரனும்"

திருப்புகழில்

என்கிறார் அருணகிரியார். வல்லாள கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளவிருந்த அருணகிரியாரைத் தாங்கிப்பிடித்து உலக வாழ்க்கையில் மிகச்சலிப்புற்றிருந்த அவருக்கு உபதேசமும் செய்தருளிய கருணாமூர்த்தி இவனே என்று நமக்கு அடையாளம் காட்டுகிறார். "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்ப"

என்று கூவித் தம் பக்தரைக் காத்த சிவபிரானது மரபில் வந்தவனல்லவா இவன்! அருணகிரியாருக்கு நயனதீக்ஷை அளித்து ‘அருணகிரிநாதன்' என்ற பெயரையும் கொடுத்து "நம் புகழைப்பாடுவாயாக" என்று ஆணையும் இட்டான். எப்படித் துவங்குவது என்று பிரமித்து நின்றவருக்கு சுந்தரருக்குத் தன் தந்தை ‘பித்தர்' என்று அடி எடுத்துக் கொடுத்ததைப்போல ‘முத்து' என்ற சொல்லை வைத்துப் பாடத்துவங்கும்படிக் கூறினவர் கோபுரத்திளையனார். [சந்நிதிக்கு அருகிலேயே பல திருப்புகழ் பாடல்களின் கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.]

"உமைக்கு ஒரு முத்தாய் முளைத்த குருநாதக் குழந்தையாம் முத்துக்குமர"னாகிய தன்னை வைத்துப்பாடுவதற்காக அவ்வாறு அடியெடுத்துக் கொடுத்தானோ?முத்தம்மை என்ற பெயரை உடைய புலவரது தாயார் பெயரை முதலாக வைத்துப் பாடச் சொன்னானோ குழந்தை?

எது எப்படி ஆனால் என்ன காலத்தால் அழிக்க முடியாத முத்துப் போன்ற தூய சந்தப் பாமாலையை நாம் அனைவருமே இறைவனுக்குச் சமர்ப்பிக்கும் படியாகத் தந்துவிட்டுச் சென்றிருக்கும் அருணகிரியாரின் கருணையை என்னென்று சொல்வது?

 கோபுரத்திளையனாரையும் எதிரிலுள்ள சிவகங்கைத் தீர்த்தம் சர்வசித்தி விநாயகர் சந்நிதி இவற்றைத் தரிசித்தபின் தீர்த்தக் கரையிலிருக்கும் கம்பத்திளையனார் சந்நிதியை நோக்கிக் கால்கள் தாமாக விரைகின்றன. 'முத்த்மிழ் விரகன் நாற்கவிராஜன்' முருகன் இங்குள்ள மண்டபத்தில்தானே ஒரு பெரிய நாடகத்தை அரங்கேற்றியிருந்தான்! அந்தக் கதையைச் சற்றுப் பார்ப்போம்.

அருணகிரியார் வாழ்ந்தகாலத்தில் ப்ரபுடதேவன் எனும் அரசன் திருவண்ணாமலையை ஆண்டு வந்தான். அருணகிரிநாதர்மீது பெரும் மதிப்பும் நட்பும் கொண்டிருந்தான். மன்னன். சிவபிரானது திருக்கோலத்தைக் காட்டியருளும்படி சோமாசிமாற நாயனார் சுந்தரரிடம் வேண்டிக்கொண்டது போல அரசனும் அருணகிரியாரிடம் முருகவேளைத் தமக்கு காட்டுமாறு வேண்டிக் கொண்டான். அரசனுடைய மற்றொரு நண்பனான சம்பந்தாண்டான் இதைக் கேட்டு மிகுந்த பொறாமை அடைந்தான். தான் தேவியைச் சபையில் வரவழைத்துக் காட்டுவதாகவும் அதே போல அருணகிரியாரும் முருகனைச் சபையில் வரவழைத்துக் காட்டினால் மட்டுமே அரசன் அவரிடம் நட்புப் பூணலாம் என்று சூளுரைத்தான். சிவகங்கைத் தீர்த்தக் கரையில் சபை கூடியது. எவ்வளவோ முயன்றும் சம்பந்தாண்டானால்
Arunagiri worships Lord Murugan who had just rescued him from certain death by suicide
தேவியை வரவழைக்க முடியவில்லை அருணகிரியாரின் முறை வந்ததும் சிவகங்கையில் மூழ்கி எழுந்து முருகனைத் துதித்துப் பாடலானார். முருகன் வரத் தாமதமான போது கீழ்வரும் வரிகளை மனம் உருகப்பாடினார்.

"இருவர் மயலோ அமளி விதமோ,

எனென செயலோ அணுகாத

இருடி அயன் மால் அமரர் அடியார்

இசையும் ஒலிதான் இவைகேளா[து]

ஒருவன் அடியேன் அலறு மொழிதான்

ஒருவர் பரிவாய் மொழிவாரோ."

என்று தொடர்ந்து பாடினார். "தங்கள் இருமருங்கிலும் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வயானை இவர்கள் மீதுள்ள அன்பின் பெருக்காலும் அதனால் ஏற்பட்ட மயக்கத்தாலும். என் முறையீடைக் கேட்கவில்லயோ? உனது சந்நிதியை நெருங்க முடியாத முநிவர்களும். பிரமன். தேவர்கள். அடியார் இவர்களது இரைச்சல் தான் காரணமோ? இவர்களுள் ஒருவர் கூட உன்னிடம் வந்து எனக்காகப் பரிந்துரைக்கமாட்டார்களோ" என்றெல்லாம் இங்கு முறையிடுகிறார். அடுத்ததாக "அதல சேடனார் ஆட. அகிலமேரு மீதாட" என்று வரவேண்டியவர்களின் ஒரு பெரும் பட்டியலே போட்டு. "மயிலுமாடி நீ ஆடி வரவேணும்."

என்று பாடும்போது மயில் துள்ளிக் குதித்து முருகனிடம் சென்றதாம். பாட்டைக் கேட்டு மகிழ்ந்த அன்னயின் கைகள் நெகிழவும். முருகன் அவளது மடியை விட்டிறங்கிச் சென்று மயிலின் மீது ஏறி அமர்ந்தார்; கோயில் மண்டபத்திலுள்ள ஒரு தூணில் நொடியில் அனைவருக்கும் தரிசனம் தந்தார். மகிழ்ச்சி மிகுதியில்.

"உதயதாம மார்பான ப்ரபுடதேவமாராஜன்

உளமுமாட வாழ்தேவர் பெருமாளே"

என்று பாடி முடித்ததும். சம்பந்தாண்டான் வெட்கித் தலை குனிந்தான். இப்படி நடந்தது சத்தியம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில்.

"சயிலம் எறிந்த கை வேற்கொடு

"யிலினில் வந்தெனை ஆட்கொளல்.

ஜகம் அறியும்படிக் காட்டிய குருநாதா"

என்று திருச்சிராப்பள்ளியிலும். "எமன் வந்து என்னைக் கொண்டு போகு முன் அன்று ஒரு முறை அருணையில் வந்தாயே அது போல் மீண்டும் நீ வர வேண்டும்" எனத் திருச்செங்கோட்டிலும் கூறுகிறார். தற்போது கம்பத்திளையனாருக்கெனத் தனிச் சந்நிதி அமைத்து நமது கற்பனைக் காட்சியைச் சற்று சிதறடித்து விட்டனர் என்றே கூறலாம்.

 வல்லாள அரசன் கோபுரத்தைத் தாண்டி. கிளி கோபுரத்தை நோக்கிச் செல்கின்றோம். [நமக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக கிளிச்சிற்பத்திற்கு பச்சை வண்ணம் அடித்து வைத்திருக்கிறார்கள்!] முந்தைய கதை இங்கேயும் தொடர்கிறது. கம்பத்திளையனாரைக் கண்ட அரசனின் கண்பார்வை பறிபோயிற்று. உடனே சம்பந்தாண்டான் மனதில் மேலும் ஒரு சூழ்ச்சி தோன்றியது. "

விண்ணுலகம் சென்று பாரிஜாதம் கொண்டு வந்தால் அரசருடைய பார்வை சரியாகிவிடும்." என்றும். "பெரும் சித்தராகக் கருதப்படும் அருணகிரிநாதரே அதற்குத் தகுந்தவர்" என்றும் அறிவிக்கிறான்.

அரசன் மீது அளவற்ற அன்புடைய அருணகிரியார். இதற்கு ஒப்புக்கொண்டு அண்ணாமலையில் பூத உடலை விட்டுவிட்டு கிளிரூபத்தில் இந்திரலோகம் சென்றார். அவர் திரும்பி வருவதற்கு முன் அருணகிரி இறந்துவிட்டான் என்று கூறி அவரது உடலைத் தகனம் செய்துவிட்டான் சம்பந்தாண்டான். பாரிஜாதத்தை பூமிக்குக் கொண்டுவந்த அருணகிரியார் நடந்ததைக் கேள்வியுற்றுச் சற்றும் வருந்தினாரில்லை.

இருவினைக்குக் காரணமான இப்பூத உடலை இறைவன் எடுத்துக் கொண்டு விட்டதை எண்ணி மகிழ்ந்து கிளி ரூபத்தில் இருந்து கொண்டு கந்தர் அனுபூதி எனும் மஹாமந்த்ர நூலைப் பாடினார் என்பது செய்தி. "

பௌதிக உடம்பை மாற்றி இந்த உலகம் என்ற நினைவு இல்லாத சுகசொரூபமாக நின்ற பொழுது இறைவனுடைய மயமான ஒரு நிலையில். பசுகரணங்களெல்லாம் மாறிப் பதிகரணம் ஆன பொழுது பாடிய பாட்டு கந்தர் அனுபூதி" என்கிறார் கி.வா.ஜ. அனுபூதியில் "கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை மெய்ப்பொருள் பேசியவா" என்றும் பின் கிளி ரூபத்திலே இருந்து கொண்டே பாடிய திருவகுப்பில் "ஏழையின் இரட்டைவினையாயதொருடல் சிறையிராமல் விடுவித்தருள் நியாயக்காரன்" என்றும் பாடி மகிழ்கிறார்.

அருணகிரியாரின் ஏனைய பாடல்களைக் காட்டிலும் மிகுந்த ஞான வாசம் வீசுபவையாக அமைந்துள்ளன கந்தர் அனுபூதிப் பாடல்கள். கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி பாடிய அருணகிரியார். "ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கி. அனுபூதி அடைவித்ததொரு பார்வைக்காரன்" என்று நன்றி கூறுகிறார்.

"ஆடும் பரி. வேல். அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய்" என்று அனுபூதி வரிகளைப் பாடிய வண்ணம் கிளியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது. இடப்பக்கத்திலுள்ள யானை திறை கொண்ட விநாயகர்' நம் கவனத்தை ஈர்க்கிறார். இவரை "யானை திறை கொண்டவனை என்னுள்ளத்தே கொண்டு"

என்று சோணாசலமாலைக் காப்புச் செய்யுளும். "

வயல் அருணை வாரணத்தானைத் திறை கொண்ட யானை" என்று கந்தரந்தாதிச் செய்யுளும் குறிப்பிடுகின்றன. இவருக்கு இப்பெயர் வரக் காரணம் என்ன? அதற்கும் ஒரு சுவையான கதை இருக்கிறது.

முகிலன் என்ற அரசன் அண்ணாமலையை ஆண்டு வந்தான். அடியார்களுக்கு அவன் மிக்க இடையூறுகள் செய்வதைக் கேள்வியுற்ற ஞானி குகை நமசிவாயர் "சூலம் கரத்திருக்க. சோதி மழுவாளிருக்க ஆலமுண்ட காலத்தருள் இருக்க மேலே எரித்த விழியிருக்க. இந்நாட் சோணேசர் தரித்ததென்ன காரணமோ தாம்." என்று துதித்துப் பாடினார்.

சிவனுடைய ஆக்ஞையால் அன்றிரவு விநாயகக் கடவுள் யானை உருவுடன் சென்று முகிலனைப் பலவாறாகப் பயப்படுத்தினார். தவறை உணர்ந்த முகிலன். திறையாக[காணிக்கையாக] விநாயகருக்கு அனேக யானைகளைக் கொடுத்தான். இவ்விநாயகருக்கு ஆனை திறை கொண்ட விநாயகர்' பெயர் வர இதுவே காரணமாயிற்று.

இவரையும் இங்குள்ள உண்ணாமுலை அம்மையையும் அருணகிரியார் கந்தர் அந்தாதிக் காப்புச் செய்யுட்களில் வைத்துப் பாடியிருப்பதால் கந்தர் அந்தாதியும் இங்கு தான் பாடப் பட்டிருக்க வேண்டும். என்று உறுதியாகிறது. மூலவர் அண்ணாமலையாரின் சந்நிதியை நோக்கிச் செல்கிறோம். இறைவனைக் கண்டு மெய் சிலிர்க்கிறோம். அங்கும் அருணகிரியாரின் வாக்கினாலேயே அவரைத் துதிக்கிறோம்.

"திருமுடி அடி பார்த்திடும் என இருவர்க்கு அடிதலை தெரியாப்படி நிண அருண சிவசுடர் சிகிநாட்டவன்" என்றும். "மால். அம் பழமறை மொழி பங்கயன். இமையவர் தம் பயமுற விடமுண்டு எருதேறி. அரவொடு. மதி. அம் பொதி சடை மிசை கங்கையுமுற அனல் அங்கையில் மேவ. அரிவையும் ஒரு பங்கிடமுடையவர் தங்கு அருணை" என்றும் பாடி மகிழ்கிறோம்.

மூலஸ்தானத்தை ஒட்டிய ப்ராகாரத்தில் சுற்றி வரும் போது. அறுபத்துமூவரை அடுத்து கௌதம முநிவர் வீற்றிருப்பதைக் காண்கிறோம். "கவுதம புனிதமுநி தொழ அருணையில் அறம் வளர் கருணை உமை" என்கிறார் அருணகிரியார்.

இறைவனது இடப்பாகத்தைப் பெற விரும்பிய பார்வதி தேவி இறைவன் ஆணைப்படி திருவண்ணாமலைக்குத் தவம் செய்ய வந்தபோது அங்கு கௌதம முநிவர் ஆசிரமத்தில் தான் வந்து தங்கியதாக அருணாசல புராணமும் கூறுகிறது. ["கோதமனார் ஆசிரமந் தன்னிற் குறுகினாள்."]

அருணாசலேஸ்வரர் சந்நிதியை வலம் வரும் பொழுது தவறாமல் கண்ணில் படுபவர் வேணுகோபாலன். "வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல்புரி செங்கண் மால் மருக" எனும் பழனிப் பதித் திருப்புகழ்ப் பாடல் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் சேஷாத்ரி சுவாமிகள் திடீரென்று "க்ருஷ்ண பகவான் தன் கையிலிருந்த சுதர்சன சக்கரத்தைக் கீழே வைத்துவிட்டு வேணுகானம் செய்கிறார். உள்ளே இருக்கும் சிவம் கூத்தாடுகிறது" என்று கூறினாராம்.

அருணாசலேஸ்வரருக்குப் பின்னால் எழுந்தருளியிருக்கும் வேணுகோபாலனைத்தான் அவ்வாறு குறிப்பிட்டார். [ஆதாரம்-நாராயண சாஸ்த்ரிகள் எழுதிய மகான் சேஷாத்ரி சுவாமிகள் சரிதம்.] அடுத்ததாக உண்ணாமுலை அம்மையின் திருமுன்பில் சென்று நிற்கிறோம்.

தமது ஊர் அருணையாதலின். கந்தர் அந்தாதிக் காப்புச் செய்யுளில். அருணகிரியார். 'ஒப்பில் உண்ணாமுலை உமை மைந்தா. சரணம். சரண் உனக்கே' என்று துதிக்கிறார். குமரக் கடவுளுக்கு ரத்னக்கிண்ணியில் தனது முலைப்பாலை எடுத்தூட்டிய உமையவள். இங்கு உண்ணாமுலை அம்மையாக வீற்றிருக்கிறாள்.

இதை அருணையில் உறையும் அருந்துணாமுலை அபிநவ வநிதை தரும் குமார' என்று பாடுகிறார். அம்மையையும் அப்பனையும் தரிசித்த பின்னர் வெளிப்ராகாரத்திற்கு வந்து. ஸ்தல விருக்ஷமாகிய மகிழ மரத்தின் கீழ் நின்று ஒன்பது கோபுரங்களையும் ஒரு சேரத் தரிசித்து மகிழ்கிறோம்.

அறிவு வாய்ந்த பெரியோர்களும் என்னுடன் கூடி உன்னைப் பாட அண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றீருப்பவனே'என்ற பாடல் வரிகள் மனத்தில் நிழலிடுகின்றன.' அப்படியே மூலவர் சந்நிதிக்குப் பின்னால் சென்று அண்ணாந்து பார்க்கும் போது கோயிலின் மேற்குக் கோபுரம் தெரிகிற்து.

அதன் பின்னால் கம்பீரமாக எழுந்து நிற்கும் மலைச் சிகரத்தைப் பார்க்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது. இக்கோயிலில் இருக்கும் மிகப் பெரிய நந்தி மட்டும் சிவன் இருக்கும் திசையைப் பார்க்காமல். கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலைச் சிகரத்தைப் பார்த்தபடி முகம் திருப்பியுள்ளது.

இதை தீபம் பார்க்கும் நந்தி' என்றழைக்கின்றனர். தம் பாடல்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அருணகிரியார் பாடிய அருணைப் பாடல். "ஜெய ஜெய அருணாத்திரி. சிவய நம" என்று துவங்குகிறது இப்பாடலில் வரும் முக்கிய வரிகளை. மட்டும் இங்கே காண்போம்.

"ஜெய ஜெய அருணாத்திரித்னின் விழி வைத்து. ஹர ஹர சரணாத்திரி என உருகிஜெய ஜெய குரு பாக்கியம் என மருவிச் சுடர்தாளை. சிவ சிவ சரணாத்திரி ஜெய ஜெயென. சரண் மிசை தொழுதேத்திய சுவை பெருக. திருவடி சிவ வாக்கிய கடலமுதைக் குடியேனோ" என்று உருகுகிறார். பஞ்சாக்ஷரமும். நினைத்தால் முக்தி அளிக்கும் அருணாத்திரி எனும் திருநாமமும் இப்பாடலில் வருவதால். இது தினசரிப்பாரயணத்திற்கு மிகவும் உகந்த பாடல் என்பர் வாரியார் சுவாமிகள் போன்ற பெரியோர் பலர்.

சரணாத்திரி' என வரும் இடங்களில் சரண- அத்திரி. ‘திருவடி மலை' என்று பொருள்படும். திருவடி சரணாத்திரி என வரும் இடங்களிலும் திருவடி என்பது சிவனையே குறிக்கும். [திருவடியே சிவமாவது என்கிற்து திருமந்திரம்] திருப்புகழ்ப் பாக்களைத் தொகுத்து அவ்றறிற்கு உரை எழுதியுள்ள டாக்டர் வ.சு. செங்கல்வராயப்பிள்ளை அவர்கள். "அருணாசலம். அண்ணமுடியாதவராய்ச் சிவம் நின்ற இடமாதலால் அது அண்ணாமலை சிவமலை" ஆகும் என்று கூறுகிறார்.

அண்ணாமலையே அருணாசலேஸ்வரர் தான் என்ற இக் கருத்திலிருந்து உதித்ததுதான். இன்றைக்கு மிகப் பிரபலமான கிரிவலம். கிரிவலப் பாதையில் முருக பக்தர்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டியது அடி அண்ணாமலை அல்லது ஆதி அருணாசலேஸ்வரர் கோயில் கிரிவலம் வரும் போது. அருணாசல சிவ என்று ஜபித்த வண்ணமே நடக்க வேண்டும; நாம் நடக்கும் பாதை எண்ணற்ற சித்தர்கள் நட்மாடும் பாதை; அவர்களுக்கு இடையூறு வராத வண்ணம் ஒதுங்கி அமைதியாக நடக்க வேண்டும் என்பதெல்லாம் நாம் ஏற்கனவே. அறிந்திருந்த விஷயங்களே.

ஆனால் அருணகிரியாரோ ஒருபடி மேலே போய். அருணாபுரி வீதிகளிலெல்லாம் முருகன் நிற்கிறான் என்று பாடுகிறார். அருணையின் தெற்கு. வடக்கு வீதிகளிலுள்ள முருகன் கோயில்களுக்கெல்லாம் சென்று பாடியுள்ள அருணகிரியார். மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கும் முருகோனே' என்றும் பாடுகிறார்.

இரையைத் தேடி அலையாமல். இறையைத் தேடும் ஞானத் தபோதனரை வரவேற்றருளும் அருணாசல வீதிகள். இறைவனின் அகமாகத் திகழ்கிறது. ஞானத் தபோதனரை வாவென்று அழைக்குமலை அண்ணாமலை. அருணகிரியாரின் அழகிய சந்தப் பாக்களின் மூலமாக அண்ணாமலையாரையும் அம்மையையும் மூத்த களிற்றினையும் இளைய களிற்றினையும் பாடித் துதித்து அருள் பெறுவோமாக. சித்ரா மூர்த்தி.

Chithra Murthy

நன்றி: திரிசக்தி தீபாவளி மலர். 2011