Lord Skanda-Murugan
 

முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்

Original Article in English: "Sacred Trees in Murukan Temples"
by Dr. Prof. Mrs. V. Balambal, M. A. B. T. Ph. D. FRAS (London),
Senior Fellow, Indian Council of Historical Research, New Delhi, Professor (Retd.) of History, University of Madras, Chennai)

வள்ளி தெய்வானை சமேத முருகன்
வள்ளி தெய்வானை சமேத முருகன்
வள்ளி முருகன்
வள்ளி முருகன்
குமாரர்
குமாரர்

மூலக் கட்டுரை ஆங்கிலத்தில்: புரோபஸ்சர் திருமதி V. பாலம்பாள்

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

இந்துக்கள் இயற்கையை வழிபட்டவர்கள். அவர்கள் மும்மூர்த்திகளை வணங்கினாலும் இயற்கை வழிபாடுகளை கைவிடவில்லை. மனித குல மேம்பாட்டிற்கு அத்யாவசயம் என்பதினால் காற்று, நீர், நிலம், நெருப்பு மற்றும் வாயு போன்ற ஐந்தையும் புனிதமாகப் போற்றி வணங்கி வந்தார்கள்.

அது போலவே மரங்களும் மனித வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சில மரங்களை ஸ்தல விருட்ஷங்கள், அதாவது ஆலயத்து புனித மரங்கள் என அவற்றை மக்கள் தற்போது வணங்கி வந்தாலும், பண்டையகால மனிதர்களும் மரங்களை இயற்கை வழிபாடு என்ற பெயரில் வணங்கி வந்துள்ளார்கள்.

பிறந்தது முதலே முருகனும் மரங்கள் மற்றும் செடி கொடிகளுடன் சம்பந்தப்பட்டு உள்ளார். சிவனுடைய மூன்றாம் கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாக வெளி வந்தவரை வாயுவே (வாயு பகவான்) எடுத்துச் சென்று சரவணப் பொய்கை எனும் நதியில் இருந்த ஆறு தாமரை மலர்கள் மீது ஆறுமுகமாக வைத்தார்.

முருகப் பெருமான் தன்னுடைய பிறப்பில் இருந்தே இயற்கையின் ஐந்து புலன்களுடன் சம்மந்தப்பட்டு இருந்துள்ளார். சங்க இலக்கியங்களில் அவரை செடி கொடிகளும் மரங்களும் அடர்ந்த குறிஞ்சி மலையின் அதிபதி என்று கூறி உள்ளார்கள்.

பண்டையக் காலம் முதல் எங்கெல்லாம் மலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் ஆலயங்களை எழுப்புவதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள். தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனைக் கொல்லச் சென்ற போது அவன் ஒரு மாம்பழ மரமாக தன்னை உருமாற்றிக் கொண்டு நின்று கொள்ள, அதை கண்ட முருகனும் ஒரு அம்பை எய்து அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து விட ஒன்று அவருடைய மயில் வாகனமாகவும், இரண்டாவது அவருடைய சேவல் கொடியாகவும் மாறியது.

ஆகவே சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஆலயங்களில் நடைபெறும்போது இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதமாக அங்கு மாம்பழ மரத்தைப் போல ஒன்றை வைப்பது வழக்கம்.

காலம் செல்லச் செல்ல பக்தர்கள் முருகனுக்கு ஆலயங்களை அமைக்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் இருந்த ஸ்தல விருட்ஷங்களையும் வணங்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட ஒரே மரம் தல விருட்ஷமாக இருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

உள்ளூர் நிலைக்கேற்ப முருகன் ஆலயங்களில் இருந்த தல விருட்ஷங்கள் வெவ்வேறாக இருந்தன. இந்த கட்டுரையின் நோக்கமே தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் உள்ள மரங்களின் வரலாற்று மகத்துவத்தையும், மருத்துவ குணங்களை ஆராய்வதுமே ஆகும்.

அவற்றைக் குறித்த புராணக் கதைகளையும் ஆராய்ந்தேன். இதில் ஸ்தல புராணங்கள், படித்தப் புத்தகங்களின் சாரம், மற்றும் அந்தந்த ஆலயங்களுக்கு விஜயம் செய்த போது அங்கு கேட்டறிந்த செய்திகள் போன்ற அனைத்தையும் கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் முருகனுடைய ஆலயம் பல இடங்களிலும் இருந்தாலும், வெவ்வேறு தல விருட்ஷங்களைக் அடங்கிய ஆலயங்களையே ஆராய்ந்தேன்.

தாமரை மலர்கள் மற்றும் மாம்பழ மரங்களைத் தவிர இந்தக் கட்டுரையில் காணப்படும் மரங்கள் வருமாறு: ராணி மலர் அல்லது மருதம் (Terminalia Arjuna), பன்னீர் அல்லது இந்திய கற்பூரவல்லி (Guettarda speciosa), புன்னை (Calophyllum inophyllum ), நெல்லி (Emblica officinalis), மகிழம் (Mimusops elengi), பலா (Artocarpus integrifolia), குரா (Webra corymbosa), பத்ரி ( Stereospermum suaveolens), வன்னி (Prosopis spicigera) மற்றும் கல் அதி (Ficus retusa auct) போன்றவை அவை.

தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை தண்டாயுதபாணி ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் 'மருதமரம்'. அதை சமஸ்கிருதத்தில் 'அர்ஜுனா' என்கிறார்கள். இந்த ஆலயத்தை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் மருத மரங்கள் அதிகமாக உள்ளதினால் அந்த ஆலயத்தின் பெயரும் அதனால் வந்திருக்கலாம். இந்த மரத்தில் சிறிய சிறிய பூக்களே பூக்கின்றன.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷத்தை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இந்த மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள பட்டைகளை உபயோகித்து ஆயுர்வேத மருத்துவத்தில் இருதய நோய்க்கு மருந்தை தயாரிக்கின்றார்கள்.

'வாகதத்தா' மற்றும் 'சக்ரதத்தா' போன்ற பெரும் மருத்துவ நிபுணர்கள் இருதய சிகிச்சைக்கான வேறு பல மருந்துகளுடன் இந்த மரத்தில் இருந்து செய்த மருந்தையும் கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதில் செய்யப்படும் மருந்துகள் ஆஸ்துமா நோய்க்கு நல்ல மருந்தாகும். இதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடைந்து போன எலும்புகள் இணையும்போது அவை வலுப்படும். வயிற்று நோயான பேதியை நிறுத்த மருதப் பொடியை உண்ணலாம்.

இளம் பெண்களின் முகங்களில் தோன்றும் சிறு பருக்களுக்கு இந்த மரப்பட்டையின் பசையைத் தடவலாம். தேள் கடிக்கு இந்த மரத்தின் பட்டையை எரித்து அதன் சாம்பலை தடவினால் உடனே குணமாகும். இயற்கையில் நுண்ணுயிரிகளால் விளைவும் தீமைகளை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும் சக்தி கொண்டது இந்த மரம்.

திருச்செந்தூரில் உள்ள முருகனின் ஆலயத்தில் பூஜை செய்த வீபுதியை பன்னீர் இலை மீது வைத்தே பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதற்குக் காரணம் பன்னீர் மரம் அங்கு முருகப் பெருமானுக்கு உகந்த மரம் ஆகும். இந்த மரத்தின் வெள்ளை நிறப் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. சில ஆலயங்களில் பன்னீர் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது.

இரவில் பூத்துக் குலுக்கும் இந்தப் பூவின் வாசனை நல்ல நறுமணத்தைக் கொண்டு உள்ளது. இந்த மரத்தின் பூக்களை அர்ச்சனை செய்யவும், மாலையாகக் கோர்த்து தெய்வங்களுக்கு அணிவிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் பட்டைகள் மருத்துவக் குணங்களைக் கொண்டு உள்ளது. இந்த மரப்பட்டையை வயிற்று நோயான பேதியை நிறுத்தும் மருந்துகள் செய்யவும், வீடுகளில் மேஜை நாற்காலிகளை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் உடலில் தோல் பகுதிகளில் உப்பிக் கொள்ளும் இடங்களில் இந்த மரத்தின் இலைகளை வைத்துக் கட்ட உப்புசம் குறையுமாம்.

புன்னை மலர்கள் சாதாரணமாக சிவபெருமானின் காலை வேளை பூஜையில் போடப்படும் மலராகும். புன்னை மரம் கடலூரில் மைலம் எனும் இடத்தில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தின் ஸ்தல விருஷம் ஆகும். இது வாழ்கையில் வளர்ச்சியைக் குறிக்கும் மரமாம்.

புராணங்களில் 'புன்னக வனம்' என்று கூறி இந்த மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசத்தைப் பற்றிய குறிப்புக்கள் நிறையவே உள்ளன. பண்டைய காலத்தில் கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்ததாம். பூக்க வேண்டிய காலத்தில் இந்த மரத்தில் பூக்கள் தோன்றவில்லை என்றால் ஊர் பெண்கள் அந்த மரத்தை சுற்றி நின்றவாறு நடனம் ஆடிக்கொண்டே அதை எட்டி எட்டி உதைப்பார்களாம்.

அப்படி செய்வதின் மூலம் பூக்காத மரங்களும் பூக்கத் துவங்கும் என்பது ஆச்சர்யமான உண்மையாக இருந்துள்ளது (Agrawala, Ancient Indian Folk Cults, 1970, Varanasi). புன்னை மலரின் சாற்றைப் பூசுவத்தின் மூலம் மேக நோயும் (venerial disease), உடலில் தோன்றும் கொப்புளங்களும் குணமாகுமாம்.

புன்னை மர இலைகளை பொடி செய்து உபயோகித்தால் தலை சுற்றலும், தலை வலியும் குணமாகும். நரம்பு தளர்ச்சி போன்ற வியாதியும் (நடுக்கம்) இதன் மூலம் குணமாகிறது. இந்த மரத்தின் அடிமரப் பட்டையின் சாற்றை உட்கொண்டால் உடலுக்குள் மற்றும் வெளியில் வெளியேறும் ரத்தம் கெட்டிப்பட்டு நின்று விடும்.

இந்த மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை ஊசி மூலம் தசையில் செலுத்திக் கொண்டால் தொழு நோயினால் ஏற்படும் வலியை குறைக்க முடியும் என்பது ஆச்சர்யமான செய்தியாக உள்ளது (Dustur, J. F., Medicinal Plants of India and Pakistan, 1962, Bombay).

இந்த மரத்தின் விதையில் இருந்து பெறப்படும் பச்சை வண்ண எண்ணை நாற்றம் அடித்தாலும், தசை வலி, மூட்டு வலி, தோல் வியாதி மற்றும் சீழ்ப்புண் (அல்சர்) போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றது. (Cowen, D. V., Flowering Trees and Shrubs in India, 1984, Bombay). இதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் கட்டி அதாவது சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். (Krishnamurthy, T, Minor Forest Products of India, 1993, Delhi). புன்னை பழங்களில் இருந்து பசை கிடைக்கின்றது.

மகிழ மரம் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்த மலர்கள் என்பதினால் வைஷ்ணவர்களும், சைவர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். அவர்களைத் தவிர ஜைன மற்றும் புத்த மதத்தினரும் அதை பயன்படுத்துகிறார்கள். மகிழ மரங்கள் அமராவதி மற்றும் சாஞ்சி ஸ்தூபிகளுக்கு அருகிலும் உள்ளன.

'நெமினத' எனும் ஜெயின் தீர்த்தங்கரர் இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு மோட்ஷம் அடைந்தாராம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூரில் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், மதுரை மாவட்டத்தில் பூம்பாறையில் உள்ள குழந்தைவேல் ஆலயம் போன்றவற்றில் இந்த மரம் ஆலய ஸ்தல விருட்ஷமாகும். இந்த மரத்தின் மலர்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்ட பூக்கள் ஆகும். அவை வாடினாலும் மணக்கும்.

இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் நிறையவே உள்ளன. இந்த மரத்தின் அடியில் இளம் பெண்கள் அமர்ந்து கொண்டு உணவு அருந்தனாலும், அதன் மீது எச்சில் துப்பினாலும் அந்த மரம் அதிக பூக்களை பூக்குமாம் (M. Amirthalingam, Sacred Trees of Tamil Nadu, Chennai, 1998, p 167). இந்தியப் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை பெறுவது வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. அப்படி ஆண் குழந்தைகள் இல்லாதவர்கள், ஆலயங்களில் உள்ள இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு தொட்டிலைக் கட்டி விட்டால் ஆண் குழந்தைப் பிறக்குமாம்.

அது போல தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு கயிற்றைக் கட்டுவார்களாம். கோரிக்கை நிறைவேறியதும் ஆலயத்துக்குச் சென்று அங்கு கட்டி இருந்தக் கயிற்றை அவிழ்த்து விடுவார்களாம். முருகனை சியோன் என கருதுவதினால் (son of Korravai & Siva) குழந்தை வரம் கேட்டு அவரை வணங்குவார்களாம்.

குரா எனப்படும் சுரைக்காய் போன்ற மரம் தந்தைக்கும் மகனுக்கும் உகந்த மரமாம் (Siva and Murugan). நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள திருவிடைக்காய் எனும் இடத்தில் உள்ள குமாரசிவம் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷமாம் இந்த மரம்.

இந்த மரத்தை ஜைனர்களும் புனித மரமாக கருதுகிறார்கள். காஞ்சீபுரத்தில் ஜைன காசி என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றம் எனும் இடத்தில் உள்ள வர்த்தமானீஸ்வரர் ஆலயத்திலும் இதுவே ஸ்தல விருட்ஷம் ஆகும். இந்த ஆலயத்தின் ஒரு கல்வெட்டு செய்தியின்படி ' தர்மத்தைக் குறிக்கும் என்றும் அழிவில்லாத திரிலோக்யனாதாவின் வாசஸ்தலத்தின் வாயிலில் நிற்கும் இந்த மரம் பெரியதாக வளர்வதும் இல்லை, சிறியதாவதும் இல்லை. அது மன்னனின் செங்கோலைக் காத்து நிற்கின்றது' (South Indian Inscriptions Vol. VII, No. 399).

ஸ்தல புராணத்தின்படி நல்ல மணம் கொண்ட இந்த மரத்தின் பூக்களை முருகன் பெரிதும் விரும்புகிறார். இந்த மரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டிவிட்டு, ஆண் குழந்தை வேண்டும் என வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமாம்.

இந்த மரம் திருவிடைக்காளி ஆலயத்தில் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பொந்தில் உள்ள உள்ள நாகத்தை அங்குள்ள பண்டிதர் தினமும் பூஜித்து வருகிறார் . இந்த ஆலயத்தை சுற்றி உள்ளப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் யாருமே இதுவரை பாம்புக் கடிபட்டு இறந்தது இல்லையாம்.

கல் அதி அல்லது குறுகலான இலைகளைக் கொண்ட நாவல் மரமும் திருப்பரம்குன்றத்து சுப்பிரமணியர் ஆலயத்தில் உள்ள முருகனுக்கு உகந்தப் புனிதமான மரமாம். திருப்பரம்குன்றம் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். சிறு மலைக் குன்றின் மீது உள்ள இங்குதான் சூரபத்மனைக் கொன்றப் பின் முருகப் பெருமான் வந்து தேவசேனாவை மணந்து கொண்டார்.

சங்க காலத்தை சேர்ந்த சிறப்பான பத்து காப்பியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் நக்கீரனார் இயற்கையாகவே அழகாக அமைந்து உள்ள இந்த இடத்தின் பெருமையை விவரித்து உள்ளார். இந்த மரப்பட்டையின் சாறு வயிற்றுப் புண் மற்றும் கல்லீரல் கோளாறுகளை குணப்படுத்துமாம்.

பலா, வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற மூன்றுப் பழங்களிலும் பலா முக்கியப் பங்கை வகிக்கின்றது. சேலம் மாவட்டத்தின் கொல்லிமலை ஆறுமுகப் பெருமான் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷம் பலா மரமாகும்.

பலா மரத்தின் இலைகள் வாழை இலையைப் போன்ற புனிதமான இலை என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளில் கலசம் வைக்கும் பெண்கள் வாழை இலைகளை வைப்பது போல பலா இலைகளைக் கூட உபயோகின்றார்கள். பண்டைக் காலத்தை சேர்ந்த சில புத்த மத சிலைகளில் கூட பலா மர சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்த மரத்தின் அடியில் கடவுட்கள், அகமாக்கள், வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் அமர்ந்து இருந்ததான செய்தியைக் குறிப்பிட்டு அதன் புனிதத் தன்மையை எடுத்துக் காட்டி உள்ளார்கள் (M. Amirthalingam). இந்த மரத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றினாலும் அது தெய்வங்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்த பலனைத் தருமாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டை முருகன் ஆலயத்தில் உள்ள முத்துக் குமரன் ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் பத்ரி மரமாகும். இதன் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. இந்த மரத்தின் பூக்கள் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்தவை.

அது மட்டும் அல்ல இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டுதான் பதினோராவது தீர்தங்கரான வசுபூஜ்யா என்பவர் ஞானம் அடைந்தாராம். அவர்களைத் தவிர ஒரு யக்ஷாவும் இந்த மரத்துடன் சம்மந்தப்பட்டு உள்ளது (Bhattacharya, Jaina Iconography, Delhi, 1974). திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த மரமே ஸ்தல விருட்ஷமாகும்.

இத மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருந்துதான் பார்வதி தேவி தனது பாபங்களை விலக்கிக் கொண்டாராம். (Sthala Purana of Padaleeswarar temple). பண்டைய இந்திய மருத்துவ மேதைகளான 'சரகா', 'சுஸ்ருதா' மற்றும் 'வராஹமித்ரா' என்பவர்கள் இந்த மரத்தில் பல்வேறு பகுதிகளை பல தரப்பட்ட வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்த மரத்தின் பட்டைகள் இருமல், வயிற்று வலி மற்றும் ரத்தசோகை போன்ற வியாதிகளை குணப்படுத்துமாம். இதன் பூக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் ரத்த வெளியேற்றத்தைத் தடுக்கும். இந்த மரத்தின் வேர் வயிற்று வலியை குணப்படுத்தும்.

தமிழ்நாட்டு சிவன் ஆலயங்கள் பலவற்றில் வன்னி மரமே ஸ்தல விருட்ஷமாக உள்ளது. அதே வன்னி மரம் திருச்சி மாவட்டத்தின் குமாரவயலூர் ஆலயத்தில் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் புனிதத்தைப் பற்றி ரிக் வேதம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன.

அக்னி பகவான் இந்த மரத்தில் வாசம் செய்ததான கதை உள்ளது. ஆகவே யாகங்களில் எழுப்பப்படும் ஹோமங்களில் இது விசேஷமானதாக கருதப்படுகிறது. தீ மூட்டி வளர்க்கப்படும் ஹோமங்களில் வன்னிமரப் பட்டை, ஆல மர மற்றும் அரச மரக் குச்சிகளை பண்டிதர்கள் பயன்படுத்துகிறார்கள் (Macdonell & Keith, Vedic Index, Delhi, 1982). வன்னி மரம் சனி பகவானுக்கும் புனிதமானது என்று செய்தி ஆச்சர்யமாக இருக்கும். இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் பலவும் உண்டு. வன்னி மரப் பட்டைகள், இலைகள், பழம் மற்றும் அதன் மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த மர இலைகளின் சாற்றை அருந்தினால் மூட்டு வலி, தசை வலி மற்றும் பித்த வியாதிகள் குணமாகும். கர்பிணிகள் இந்த மரத்தின் மலர்களை சக்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படாது. இந்த மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலையின் சாறுகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் பாம்புக் கடி விஷம் முறியும் (Shanmugam N. K. Mooligai Kalai Kalanjiyam, Madras, 1989).

மிகவும் வலிமையான இந்த மரத்தின் கட்டைகளைக் கொண்டு விவசாய நிலங்களில் உழுவதற்கு பயன்படுத்தப்படும் மரத்திலான கருவிகளை செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு வன்னிமரம் குலதெய்வத்தைப் போன்ற பாதுகாப்பைத் தரும் மரம். ஆகவே வன்னியர்கள் மரணம் அடைந்தால் அவர்களது இறுதிக் காரியங்களில்-தகனத்திற்கு- வன்னி மரக் கட்டைகளையே பயன்படுத்துவார்கள்.

தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலை ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்குதான் அவர் பிரணவ மந்திரத்தை சிவனுக்கு போதித்தாராம். ஆகவே அந்த ஆலயத்தில் உள்ள ஸ்வாமிநாத ஸ்வாமியை தகப்பன் ஸ்வாமி என்றே அழைக்கின்றார்கள். சிவனை மாணவராகவும், முருகனை குருவாகவும் சித்தரித்து உள்ளார்கள்.

சிவனுக்கும், விஷ்ணு ஆலயங்களிலும் புனிதமாக கருதப்படும் நெல்லி மரமே ஸ்வாமி மலையிலும் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் பழத்தில் லஷ்மி தேவி குடி இருப்பதாகக் கருதப்படுவதினால் அது வளமான வாழ்வையும், செல்வத்தையும் கொடுக்கும் மரம் என்கிறார்கள். கனகதாரா ஸ்தோத்திரத்தை தோத்திரம் செய்து தனக்கு நெல்லிக் கனியைத் தந்த ஏழைப் பெண்ணை ஆதி சங்கரர் பெரும் செல்வந்தர் ஆக்கினார் என்பது கதை.

நெல்லிக்காயை அமலாக்கி பழம் என்று குறிப்பிட்டு அதைப் பற்றிய செய்திகள் ஜைமீனிய உபநிஷத், சந்தோக்ய உபநிஷத், குமார புராணா மற்றும் சங்கரத புராணா போன்ற பல மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாஞ்சியில் உள்ள ஸ்தூபாவிலும் நெல்லி மரத்தின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அதிக சத்து உள்ள பழம் மட்டும் அல்ல, நெல்லி உயிர் அணுக்களை அதிகரிக்கும் குணம் கொண்டது.

ஆண் குழந்தைகள் வேண்டும் என வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த ஆலய மரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிற்றைக் கட்டுவார்கள். கோரிக்கை நிறைவேறியதும் அதை கயற்றி விடுவார்கள். இந்த மரத்துக்கு சந்தனம் மற்றும் மஞ்சள் பசைகளை தடவி, குங்குமம் இட்டு , மாலைகளைக் கட்டி கற்பூரம் காட்டி வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஸ்தல புராணத்தின்படி இந்த மரம் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நடப்பட வேண்டும். புராணக் கதை ஒன்றில் இந்த பிரபஞ்சமே பிரளயத்தில் முழுகியபோது அதைக் கண்டு பிரும்மா பயந்து போய் வாயை பிளந்து கொண்டு நின்றபோது அவர் வாயில் இருந்து கீழே சிந்திய உமிழ் நீரே நெல்லி மரமாக மாறியதாக (Padma Purana, Uttarakanda, 47. 7-11) கூறப்பட்டு உள்ளது. ஸ்கந்த புராணமோ பிரும்மா செய்த ஒரு தவத்தின் முடிவில் அவர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் இருந்து இந்த மரம் வந்தது என்று கூறி உள்ளது (II, 4. 12. 13).

இந்த புராணக் கதைகளைத் தாண்டி இந்த மரம் மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உண்மை. இதன் இலைகள், கனி, பூக்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவை சில மருந்துகளை தயாரிக்க உதவுகின்றன. ஒரு நெல்லிக் கனியின் சத்து மூன்று ஆப்பிள் பழங்களின் சத்துக்களுக்கு இணையானது.

இதில் வைட்டமின் C அதிகம். இந்தக் கனியை தேனுடன் கலந்து சாப்பிட்ட ஆஸ்துமா, TB எனும் நுரையீரல் நோய் , மார்புச் சளி, கல்லீரல் கோளாறு, சக்கரை வியாதி போன்றவை குணமாகும். பல் ஈறுகளில் இருந்து வெளியேறும் ரத்தம் நிற்கும். இந்த மரக் கனியை உண்டால் களைப்பு ஏற்படாது, மன அழுத்தம் குறையும். கண் பார்வைகளுக்கு நல்லது.

ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்த கனியின் பதப்பட்ட சாறு ஜீரணக் கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவற்றை குணப்படுத்தி மூக்கு அடைப்பையும் விலக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து உள்ளார்கள். இந்த மரத்தின் பல பாகங்களை பயன்படுத்தி பல்வலி, நரம்பு தளர்ச்சி எனப்படும் நடுக்கம், தொண்டை புண், போன்றவற்றை குணப்படுத்த மருந்துகளை தயாரிக்கின்றார்கள்.

கருப்பையை பலப்படுத்தும் மருந்தையும் இந்த மரத்தின் சில கலவைகளில் செய்கிறார்கள். தேள்கடியை குணமாக்க நெல்லி மரப்பட்டை மற்றும் வெங்காய சாறு இரண்டும் கலந்த கலவையை பயன்படுத்துகிறார்கள்.

முடிவுரை

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல இடங்களிலும் முருகனின் ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று அந்தந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களை வணங்குகிறார்கள். அங்குள்ள மரத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல மரங்களும் அங்குள்ள தெய்வங்களுக்கு இணையானதே என்று நினைக்கின்றார்கள்.

அந்த மரங்களை வழிபடுவதின் மூலம் தமது வேண்டுகோட்கள் நிறைவேறும் என்று நம்புவதினால் அவர்கள் அந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்களை வழிபடுவது போலவே அங்குள்ள ஸ்தல விருட்ஷங்களுக்கும் மாலைகள் போட்டு, பூஜைகள் செய்து அவற்றையும் வழிபடுகிறார்கள். ஆலயங்களில் உள்ள கருவறைக்கு சென்று தெய்வத்தின் பக்கத்தில் பக்தர்கள் நிற்க முடியாது. ஆனால் அவர்களால் ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களின் அருகில் அவர்களால் செல்ல முடியும்.

ஆகவே அவர்களது ஸ்தல விருட்ஷங்களின் மீதான நம்பிக்கை அபாரமானது. அந்த ஸ்தல விருட்ஷங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த மரங்களில் இருந்து செய்யப்படும் மருந்துகள் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. புராணங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மருத்துவ குணம் போன்றவற்றைத் தவிர இயற்கை சூழ்நிலையை பாதுகாக்கவும் மரங்கள் இன்றி அமையாதவை.

ஆகவே சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு பராமரித்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் மூலமே ஒரு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். அதற்கு உதவியாக இருப்பது மக்களின் கடமை. ஸ்தல விருட்ஷங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. ஸ்தல விருட்ஷங்கள் எனப்படும் அந்த மரங்களைப் பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டு, அவற்றை புனிதமாக போற்றி வணங்குவது மட்டும் அல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாப்பதையும் தமது கடமையாக நினைக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அவரவர்களின் சார்ந்துள்ள மதங்கள் அனுமதிக்கும் எதையுமே மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகின்றது . ஸ்தல விருட்ஷங்கள் அதற்கு ஒரு உதாரணம். முருக வழிபாடும் ஒரு விதத்தில் இதற்கு உதவுகின்றது.

"Facets of Murukan" by Prof. Dr. Mrs. V. Balambal
"Murukan, The Protector and Healer" by Prof. Dr. Mrs. V. Balambal
Index of research articles from International Conferences on Skanda-Murukan