Murugan Bhakti

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்


“தாதையெனத் தண்ணருள் பொழிந்திடர் தடிந்தே
 தீதில் நெறி யுய்த்தெமது பாசமது தீயக்
கோதில் வழி காட்டுகடைச் சாமி, குருவள்ளல்
பாதமலர் சிந்தையிற் பதித்தினிது வாழ்வாம்”

திருச்சிற்றம்பலம்

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்

ஆதிகடைநாதன் என்று ஆரா அன்புடன்  கொண்டாடப்படும் யாழ்ப்பாணம் கடையிற்-சுவாமிகள் இலங்கையில் ஒரு அருட்பரம்பரைக்கு மூலவித்திட்ட குரு முதல்வராவார். எமது குருவள்ளலுடைய அருட்பெருமை இப்பிரதியில், அடியார் பக்தி ததும்ப அழகாக வரையப்பட்டுள்ளது. எமது நாட்டு மங்களவளம் அனைத்துக்கும் மூலமங்கள நிதியாய், வளங்கொழிக்கும் வற்றாத பேராறாய் சுவாமிகளுடைய கருணை இன்றும் விளங்குகிறது. 

புன்புழுக்களாகிய யாம் உய்யவேண்டும் என்ற திருவுள்ளத்தராய், சுவாமிகள் வைத்த கருணாகடாட்சம் இன்றேல், எமது நாட்டில் நன்மை ஏது? நலம் ஏது? ஆகையால் நன்றியுடனும் பக்தியுடனும், எமது நாட்டு அருட்தந்தையின் குருபூஜைத் திருநாளை வீட்டிலும், நாட்டிலும் அருட்கோலத்துடன் கொண்டாடவேண்டும். இதற்கு அன்பர்களும் சமய சங்கங்களும் தொண்டாற்றவேண்டும்.

ஸ்ரீயோக ஸ்வாமிகள் அருளியதுபோல், “புத்தர் கிறிஸ்து முதலாயினோரினும் பன்மடங்கு பெரியவ”ரான சுவாமிகளை, கீழ்த்தேவதைகளை வாலாயம்பண்ணும் பான்மையில், மது மாமிசம் வைத்து அவருடைய குருபூஜைத் திருநாளைக் கொண்டாடுவது கேவலமான அஞ்ஞானம். மெய்யன்பர்கள், சுவாமிகளுடைய தவப்பெருநிலையைச் சிந்தித்து, அசுத்தப் பொருட்களைக் குருபூஜையில் தவிர்த்துத் தூய்மையடைவார்களாக.

-கிருஷ்ணானந்த முனிவன்
கதிர்காமம்


யாழ்ப்பாணத்தில் வண்ணார்பண்ணைப் பகுதியை, முக்கியமாகப் பெரியகடையிலிருந்து சிவலிங்கப்புளியடி வரையிலுள்ள நிலப்பரப்பை, புண்ணிய பூமியென அழைக்கலாம். தமிழோடும் சைவத்தோடும் நெருங்கிய தொடர்புடைய கதிரேசன் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், வைத்தீஸ்வர வித்தியாலயம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பள்ளிக்கூடம், சிவதொண்டன் நிலையம், இந்துக் கல்லூரி, சைவப்பிரகாச அச்சகம், முதலாய தலைசிறந்த நிலையங்கள் இந்தப் பிரிவில்தான் மிளிர்கின்றன. ஈழத்தில் எந்தப் பிரிவிலும் காணமுடியாத திருவருட்காட்சி இது. இத்தனிப்பெருமைக்குக் காரணம், இப்பகுதியில் சென்ற நூறு வருஷங்களாக யோகிகளும், சித்தர்களும், சீவன்முத்தர்களும் இடைவிடாது தொடர்ந்து நடமாடியதால், அவர்கள் திருப்பாதபூதிச் செல்வம் தங்கியிருப்பதாகும்.

இம்மகா புருஷர்களுள், முதன்மை பெறுபவர் கடையிற் சுவாமிகளாவார். அவர் அவதரித்த ஊர்; பெற்றோரின் குலம் கோத்திரம், அவர்களால் இவருக்குச் சூட்டப்பட்ட நாமம், ஒன்றுமே இதுவரையில் தெரியாது. மகான்கள் தமது வாழ்க்கையின் உலகத்தொடர்புடைய பகுதியைப் பிறருக்குச் சொல்லுவது வழக்கமில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில், அப்பாகம் இறந்துபட்ட ஒன்றல்லவோ? எனினும் இத்தவ சிரேஷ்டர், கன்னட தேசத்தவர்; யாழ்ப்பாணம் வருமுன்னர், சுவாமி முக்தியானந்தா என்ற தீக்ஷாநாமம் உடையவர் என்பது அறியக்கிடக்கின்றது. ஆங்கிலம், வடமொழி, கன்னடம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளையும் பயின்றவர். உயர்ந்த உத்தியோகத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட வைராக்கியம் காரணமாக, அதனை உதறிவிட்டுத் துறவு பூண்டவர் என்பது, அவருடன் ஆரம்பத்திலிருந்து நெருங்கிப் பழகிய அடியார்கள் அறிந்த உண்மையாகும்.

மைசூரைச் சேர்ந்த இம்மகானுக்கு, ஞானோபதேசம் அருளிய குரு எவராக இருக்கலாம் என அறிந்து கொள்வது கஷ்டமான காரியமல்ல. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகள் தென்னிந்தியாவில் இருட்காலம் எனலாம். அரசியல் பொருளாதாரத் துறைகளில் அந்த நாடு, மிகவும் சீர்கெட்ட நிலையிலிருந்தது. அந்த இருளையகற்ற, தெய்வத் திருவருள் முதலில் அனுப்பி வைத்தது ஒரு ஞான சூரியனையாகும். அவர்தான் மைசூர் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரிய பீடத்தில் 32ஆவது தலைவராக வீற்றிருந்து, 1817ஆம் ஆண்டு தொடக்கம், 1879ஆம் ஆண்டு வரையில், அருட்செங்கோலோச்சிய அற்புத ஞானசித்தர் ஸ்ரீ நரசிம்ம பாரதியாகும். இவர் இணையற்ற ஆத்மசித்தி கைவரப் பெற்றவர்; பல ஞானிகளையும், யோகிகளையும், சித்தர்களையும், சீவன்முக்தர்களையும், சிருஷ்டிக்கக் கூடிய அற்புத சக்தி வாய்ந்தவர். தமது அறுபத்தீராண்டு திருவருள் ஆட்சிக்காலத்தில், நாற்பது ஆண்டுகளைத் திக்கு விஜயத்தில் கழித்தவர். அதிலும் இறுதிக்காலம் பன்னீராண்டைத் தமிழ் நாட்டின் ஆன்மீகப் பணிக்கே அர்ப்பணித்தவர். தமது உத்தம சீடரும் தம்மைப்போல் ஞானசித்தருமான ஸ்ரீ சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்மருடன் ஊர் ஊராய்க், கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு சமய மறுமலர்ச்சியை உண்டாக்கினார். அப்பணியை மேலும் மேலும் தொடர்ந்து செய்ய அநேக மகாத்மாக்கள் ஆங்காங்கு தோன்றினர். அவர்களுள் சதாசிவப்பிரமேந்திரா, சுயம்பிரகாசப் பிரமேந்திரா, சுந்தர சுவாமிகள், அப்பையசிவம், திருவருட் பிரகாச வள்ளலார், இல்லற ஞானியான ராஜு சாஸ்திரிகள், முதலானோரை இங்கு முக்கியமாகக் குறிப்பிடலாம்.

தாய்நாட்டிற்போலவே சேய்நாட்டிலும், அதேகாலத்தில், சமய மறுமலர்ச்சியும், குருபக்தியும், அடியார் பணியும், தலைசிறந்து விளங்கியதைக் காண்கின்றோம். “அண்ணலடியார் தமை அமுது செய்வித்தலே, மண்ணிற் பிறந்தார் பெறும் பயன்”, என்ற கொள்கை சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில், யாழ்ப்பாணக்குடா நாட்டின் நாலா பக்கங்களிலும், பரவியிருந்தது என்பதற்குச் சான்றுகள் பல உள. பரமகுருவடிகளின் வரலாற்றுச் சுருக்கத்தை வரைந்த பக்தர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“கடையிற் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் எழுந்தருளிய சில காலத்தில், கீரிமலையில் எழுந்தருளியுள்ள அடியார்களில் ஒருவர் பரமகுருவடிகள். கடையிற் சுவாமிகளின் அணுக்க விளக்காகிய குழந்தைவேலடிகளுக்குச் செவ்வியுரை ஆசிரியராக இவர் வாய்த்திருந்தார். கடையிற் சுவாமிகளை சிவப்பிழம்பாகவும், குழந்தைவேலடிகளைப் பிள்ளையார்ப் பிழம்பாகவும், பரமகுருவடிகளை முருகப்பெருமானாகவும், அன்றைய ஆன்றோர்கள் கருதிப் போற்றி வந்தனர். குழந்தைவேலடிகள், அருளம்பலவடிகள் இருவரின் ஆசிரிய வாழ்த்துச் செய்யுள் வாயிலாக இவ்வுண்மை புலனாகின்றது”.

சுவாமி முக்தியானந்தர், அவரது சகோதர சன்னியாசிகளான சின்மயானந்தர், நிரஞ்சனானந்தர் ஆகிய இருவருடன் ஈழத்திற்கு வந்த காலம் நிச்சயமாகச் சொல்ல முடியாது. அது 1862ஆம் ஆண்டை அடுத்திருக்குமென யூகிக்க அகச்சான்றுகள் உள. அக்காலத்தில்தான், ஸ்ரீ நரசிம்மபாரதி அவர்கள் இராமநாதபுர மாவட்டத்தில் திக்விஜயம் செய்து கொண்டிருந்தார். கடையிற் சுவாமிகளுடைய ஈழத்தின் முதல் சீடரும், யாத்திரை செய்தபோது அவரைத் தென்னாட்டில் தரிசித்து ஆசி பெற்றவருமான வண்ணார்பண்ணை வைரமுத்துச் செட்டியார் அவர்களே குறித்த மகானின் யாழ்ப்பாண வருகைக்குத் துணைக்காரணமானவர். 1860ஆம் ஆண்டளவில் கிராமங்களில் தங்கி ஆன்மீகப்பணி, யாத்திரையில் ஈடுபட்டிருந்த அடியார் கூட்டத்தைச் சந்தித்திருக்க வேண்டும். பரமகுரு அடிகள் மீது பாடப்பெற்ற தோத்திரங்கள் சில அவரைக் “கிடாரிபருப்பதம் மேயபிரானே!” என்று குறிப்பிடுகின்றது. இந்த இடம் இராமநாதபுரத்துக்கருகிலுள்ள கிடாரிப்பட்டியாக இருக்கலாம். அந்த இடத்தில் பல சாதுக்கள் சத்சங்கம் நடாத்தி வந்தமைக்குச் சான்றுகள் உளதென்று ஓர் அடியவர் உரைத்தார்.

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்

மேலே குறிப்பிட்ட மூன்று பெரியார்களும், தமிழ் நாட்டில் ஒரே குரு பரம்பரையைச் சேர்ந்திருந்தபோதிலும், சேய்நாட்டில் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட குரு பரம்பரை மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த அடியார் கூட்டம் முழுவதும் கடையிற் சுவாமிகளுக்கே முதலிடம் வழங்கி வணங்கினர். உதாரண்மாக நிரஞ்சனானந்தரைத் தமது குருவாக ஏற்றுக் கொண்ட குழந்தைவேலடிகளின் பாடல்களில் ஒன்று இந்த உண்மையைத் தெளிவுபடுத்துகின்றது:

“வீறுபடு பில்லிமுதல், வெஞ்சினப் பசாசும்
 வேறுசெய் மருந்து விசர்கொண்டு திரி பித்தம்
 நீறுபட வேண்டுமெனில் நீவிர் வந்து செய்மின்
 கூறு கடைச் சாமி குருபூசையினை அன்றே”

கடையிற் சுவாமிகளின் புகைப்படம் எவராலும் எடுக்கப்படவில்லை. இப்போது பலரிடம் இருக்கும் படங்கள் ஓவியக்கலைஞரான ஒரு பக்தரால் வரையப்பட்டதாகும். அதிலிருந்து அவர் விசாலமான தோள்களையும், நீண்ட கரங்களையும் உடையவரென்பதும், முகத்தில் சதா ஓர் புன்னகை ஒளி வீசிக்கொண்டிருந்ததென்பதும், அந்த முகத்திற்குப் பிறிதோர் அழகுக்குறியாக, நீண்ட நுனியில் வளைந்த மூக்கு அமைந்திருந்ததென்பதும் தெரிய வருகிறது. துடுக்கான, வேகமான, கம்பீரமான நடையும் ஹாஸ்யப்பேச்சும் அவரது சிறப்பான குணங்களென அவரது நேர் அடியார் பலர் சொல்லக் கேட்டுள்ளோம். அவர் மீது பதிகம் பாடிய பக்தர் ஒருவர் அவரது திருக்கோலத்தையும் உடையையும்

“பெரியகடை நாதன், பித்தன் திருக்கோலம்
 கரிய வர்ணச் சீலை, கரித்தோலெனச் சால்வை” 

என வர்ணிக்கின்றார். சிவஞான சித்தியார் சுபக்கம் எட்டாம் சூத்திரத்தில், ஞான மார்க்கத்தையும் அந்நெறி சென்று நிஷ்டை கூடிய ஞானிகளின் தனிச் சிறப்பையும் விவரிக்கும் அருமையான பாடல்கள் பல உள. அவ்ற்றுள் ஒன்று:

 “ஞாலமதின் ஞான நிட்டை யுடையோருக்கு
    நன்மையொடு தீமையிலை நாடுவதொன்றில்லை
 சீலமிலைத் தவமில்லை விரதமோடாச்சிரமச்
    செயலில்லை தியானமிலை சித்தமலமில்லை,
 கோலமிலை புலனில்லை கரணமில்லைக்
    குணமில்லைக் குறியில்லை குலமுமில்லை
 பாலருடன் உன்மத்தர் பிசாசர் குணமருவிப்
    பாடலினோடாடலிவை பயின்றிடினும் பயில்வர்”

என்பதாம். இப்பாடல் தரும் இலக்கணத்திற்கு இணையற்ற இலக்கியமாய் வாழ்ந்தவர் எங்கள் கடையிற் சுவாமிகள்.அவரது பெருமையைத் தமது அடியார் சிலருக்கு விளக்கும்போது, ஸ்ரீ யோக சுவாமிகள் கூறிய அரியபெரிய வாக்கு இவ்விடத்தில் சிந்தனைக்கெட்டுகிறது: “ஆடையற்ற மாதொருத்தியுடன் கைகோத்து ஆடினாலும், தன் சொரூபநிலையிலிருந்து தழம்பாத தனிப்பெருந்தவத்தோன் அவர்; புத்தர், கிறிஸ்து, முதலாயினோரிலும் பன்மடங்கு பெரியவர் ஆவர் அவர்”, என்பது அப்பொன்னுரை.

அவர் தமக்கு உறைவிடமாகக் கொண்டு உகந்தது பெரியகடைச் சதுக்கம்- பொதுச் சொத்து. அதின் மேற்கு, வடக்கு வீதிகளிலிருந்த வியாபார நிலையங்கள் பெரும்பாலும் வாணிபச் செட்டியார்களுக்குச் சொந்தமாயிருந்தன. அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் இயல்பாகவே, தெய்வ பக்தியிலும், அடியார் சேவையிலும், ஆர்வமுள்ளவர்கள். அவர்களில் சிலரே சுவாமிகளின் மகிமையை முதலில் அறிந்து கொண்டனர். முதன்முதலாக சுவாமிகள் வீடு தேடிச்சென்று உணவு கேட்டருந்தியது, திரு வைரமுத்துச் செட்டியார் மனையிலாகும். இவர் ஓர் பழைய தொண்டர். இவரின் குரு, பக்தியின் சின்னமாகப் பின்னாளில் தோன்றியதே கந்தர்மட அன்னசத்திரம். சுவாமிகளைக் குழந்தையாகப் பாவித்து அவருக்கு அன்னங்குழைத்து ஊட்டிய சின்னாச்சிப்பிள்ளை அம்மையார், ஸ்ரீ அருளம்பல சுவாமிகளின் தாயார் ஆவார். 

யோகரின் குருநாதருமான, நல்லூர் செல்லப்ப சுவாமிகள்

அம்மையாரின் ‘கடைக்குட்டி’யான அருளம்பலம் மூன்று வயது பாலகனாய்ச் சுவாமிகளுக்கருகிலிருந்து, அவர் உண்ணும்போது பங்கெடுப்பதுண்டாம். இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் அருளம்பல அடிகள் சில அன்பர்கட்கும் எமக்கும் நேரில் சொன்ன விஷயமிது. எவ்வளவு அன்பாகத்தான் அடியார்கள் அவரை ஆதரித்து அமுது வழங்கிய போதிலும், மறுபடியும் அதே இல்லங்களுக்குச் செல்வது அவர் வழக்கில் இருக்கவில்லை.

தம்மையடைந்த மெய்யடியாரிடையே சாதிபேதம், உயர்வுதாழ்வு, செல்வர் வறியர் என்ற வித்தியாசம் பாராது எல்லாருக்கும் ஒரேவித கருணைகாட்டி அவர்களது உடல்நோய்க்கும், மனநோய்க்கும், வறுமைக்கும், பரிகாரம் செய்வதில் அனுக்கிரகம் காட்டத் தொடங்கவே, அடியார் கூட்டம் பெருகியது. ஏழைகளின் இல்லங்கட்கும் எழுந்தருளுமாறு அழைப்புகள் அதிகரித்தன. அதற்கிணங்கிச் சென்றபோதெல்லாம், அவர்கள் அவருக்குத் தாம் வழக்கமாகப் பாவிக்கும் மச்ச மாமிச மது சேர்ந்த விருந்தையே அளித்தனர். விருப்பு வெறுப்பற்றவரான சுவாமிகள் அவற்றையும் ஏற்றனர். தனக்கென ஓர் செயலற்றுத் தானதுவாய் நின்ற அருட்பெரியோனின் இந்த முறை, வைதீகச் சைவர்களிடையே குரோதத்தையும் விஷமத்தையும் உண்டாக்கியது. அவ்ர்களையும் அப்பன் தடுத்தாட்கொண்ட தன்மை அற்புதத்தின் அற்புதமாகும். உதாரணமாக இணுவில் ஆசிரியர் அம்பிகைபாகரின் மனமாற்றத்தைக் குறிப்பிடலாம். அத்தொடர்பில் ஸ்ரீ யோக சுவாமிகள் எமக்குக் கூறிய ஓர் அரும் சம்பவத்தை மாத்திரம் இங்கு சுருக்கமாகக் குறிப்பிடுகின்றோம்:

ஸ்ரீ யோக சுவாமிகள்

கடையிற் சுவாமிகளின் உத்தம சீடர்களுள் ஒருவரும், யோகரின் குருநாதருமான, நல்லூர் செல்லப்ப சுவாமிகளுக்கே, தமது குருநாதன் மதுபானம் அருந்துகிறாரென்பதைப் பிறர் சொல்லக் கேட்டுச் சகிக்கமுடியவில்லையாம். அது அவரால் நம்ப முடியாத விஷயமாகவும் இருந்ததாம். நேரே பரிசோதிக்கக் கருதி ஒரு போத்தல் சாராயத்துடன் குருநாதரைத்தேடி பெரியகடை சென்றார். போத்தலைச் சால்வையில் சுற்றி மறைத்துக்கொண்டு அருகில் உட்கார்ந்ததும், “ஓகோ! நீயும் எனக்குச் சாராய விருந்தளிக்க விரும்பிவிட்டாயா? சரி பின்னாலே மறைத்து வைத்திருக்கும் போத்தலை எடுத்துத் திற. நீயும் நானும் இங்கிருக்கும் அன்பர்களும் எல்லாரும் பகிர்ந்து குடிப்போம்”, என்றாராம். நடுக்கத்துடன் செல்லப்பா சுவாமிகள் போத்தலை முன்வைத்துத் திறந்ததுமே, திராவகம் முழுவதுமே ஆவியாக மாறிக் காற்றோடு கலந்துவிட்டதாம். சீடர் குருநாதரின் பாதங்களை இறுகப்பிடித்துக் கண்ணீரால் கழுவிவிட்டு நல்லூர்த் தேரடிக்குத் திரும்பிவிட்டாராம்.

இதுபோன்ற அற்புத நிகழ்ச்சிகள் அளப்பில. அவரது ஊன் எச்சிலை உண்டு நோய் தீர்ந்தோர் பலர்; சித்திகள் பெற்றோர் சிலருமுண்டு. சுதுமலையைச் சேர்ந்த ஒருவர் சோதிட வல்லுனரானார்; இன்னொருவர் புகழ் பெற்ற வைத்தியரானார். மீன் பிடிக்கப் போயிருந்த கரையூர் வாசியான சுவாமிகளது அடியார் ஒருவர், நடுநிசியில் புயல்காற்றினாலும், பெருமழையினாலும் தாக்கப்பட்டு ஆழ்கடலில் அமிழ்ந்திப் போகும் வேளையில் வேறு தஞ்சமின்றி, கருணைமலையான சுவாமிகளைச் சிந்தித்து அலறவே, உடனே, அப்பக்தனது குடிசைக்குச் சென்று சவளக்கோல் ஒன்றை எடுத்து, “ஏலேலோ”ப் பாடி முற்றத்து மண்ணைக் கிளறி, அந்தப் பக்தனின் உயிரை அவர் காப்பாற்றின அருட் கதை கேட்போர் உளத்தை உருக்குந்தரத்தது.

இவ்விதம் முப்பது ஆண்டளவு யாழ்ப்பாண மக்களுக்கு அல்லல் களைந்து, அளப்பரும் அத்யாத்ம வழிகாட்டி, ஞானகுரு பரம்பரைக்கு வித்திட்ட இந்த மகானுபவர், கர வருடம், புரட்டாசி மாதத்தில் பூரணையும் பூரட்டாதி நட்சத்திரமும் பொருந்திய புண்ணிய வேளையில் மகாசமாதியடைந்தனர். சுவாமிகளுடைய சமாதிக் கோயில் வண்ணார்பண்ணை நீராவியடியில் உள்ளது.


(இக்கட்டுரை வானொலியில் நிகழ்ந்த ஒரு சொற்பொழிவைத் தழுவியது.)

This radio talk in Tamil was first translated and published as “Kadai Swami of Jaffna” in The Island (Colombo) of 6th October, 1992.

யாழ்ப்பாணம் கடையிற் சுவாமிகள்
Exit mobile version