Murugan Bhakti

படித்ததில் பிடித்தது

Bala Murugan peacock banner

ஆன்மீக மாத இதழ்  ஞான ஆலயத்தில் மே மாதம்  (வைகாசி விசாகம் முருகன் சிறப்பிதழ்) வெளி வந்த ‘வில்லேந்தியவன் வேலனா? இராமனா? என்ற   மிகச் சுவையான கட்டுரையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மாலதி ஜெயராமன்.

வில்லேந்தியவன் வேலனா? இராமனா?
(திருமதி உமா பாலசுப்பிரமணியன்)

“சூலம், வாள், தண்டாயுதம், செவ்விய வேல், கோதண்டம் (வில்) இவைகளை அணிந்துள்ள தோள்களையும் அகன்ற அழகிய திருமார்பையும், தூய்மையுள்ள தாளில் அமைந்துள்ள தண்டையையும் நான் காணும்படி, அன்பு கொண்டுள்ள மயிலின் மீது ஏறி என் முன்னே வந்து திருவருள் புரிய வேண்டும்” என்று திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரிநாதர் வேண்டுகிறார்.இப்பாடலிலிருந்து முருகன் கையில் கோதண்டம் இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் மூத்த புலவராக இருந்த நக்கீரரும், திருமுருகாற்றுப் படையில் “வானோர் வணங்கும் வில் தானைத் தலைவா” எனப் பாடியிருக்கிறார்.     

இராமன் என்றாலே வில்லுடன் கூடிய கோதண்ட ராமன்தான் எல்லோர் நினைவுக்கும் வரும்.ஆனால் மேற்கண்ட பாடல்களிலிருந்து முருகனும் வில்லைப் பிடித்தவனாக வில்லேந்திய வேலவனாக விளங்குகிறானே! என்று வியக்கத் தோன்றுகிறது.

வேலவன் வில் ஏந்தியது ஏன்?

     முருகன் எப்பொழுது வில்லை ஏந்தினான்? இதற்கு ஏதேனும் அதாரம் இருக்கிறதா? என்ற கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழுகின்றன. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் “சுப்பிரமண்ய பராக்ரமம்” என்ற பழம் தமிழ் நூலில், முருகன் வில்லேந்திய காரணம் சுவையாகக் கூறப்பட்டிருக்கிறது.

கங்கையாற்றின் கரையில் ‘சிருங்கிபேரி புரம்’ என்ற ஒரு ஊர். அங்கு வசித்து வந்த வேடர்களின் தலைவன் குகன் ஆவான்.
 
     உருவிலும் உடையிலும், தொழிலிலும், உணவிலும் மென்மை என்பதே அறியாத குகன், அயோத்தியிலிருந்தே சக்ரவர்த்தித் திருமகனான மென்மையான இராமனிடம், அளவு கடந்த அன்பு கொண்டிருந்தான்.

தந்தைக்கு மரியாதை அளித்து, தாய் சொல்லைத் தட்டாது, வனவாசம் செல்லக் காடுகளைக் கடந்து, கங்கையைக் கடக்கும் தருவாயில், இராமனும் வேட்டுவத்தலைவன் குகனும் சந்திக்க நேர்ந்தது.
 
    மறு நாள் கங்கையைக் கடக்க நாவாய் எடுத்து வரச் சொன்னபோது வருத்தமுற்று, இராமனிடம் தான் வைத்திருந்த அன்பினை அழகாக வெளிப்படுத்தினான்.

குகன் சொல்கிறான், “காளத்தி அப்பனது இன்னல் கண்டு, தன் கண்களையே எடுத்து அப்பினான் என் தொல்குல முன்னொருவன். யான் அவ்வாறு செய்ய முடியாத கள்வனாக இருக்கிறேன். ஆதலால் என்னை மிக வெறுத்து நீ அகற்றுகின்றனை போலும்? ஐயனே! இவ்வாறு செய்யலாகாது. கண்ணிடத்து அப்பவல்லன் அல்லேன் ஆயினும், என்னாலான அடிமையைச் செய்யப் பணிந்தருள். நானும் உன்னோடே வருகிறேன்” என்று சொல்ல இராமபிரானும் தன் அருகிலிருந்த சீதைக்கும் தன் தம்பிக்கும் தன் பால் குகன் வைத்திருந்த தீராக் காதலை எடுத்துரைத்தான்.

 பின், “என் உயிர் போன்றவன் நீ. என் தம்பி, உனக்குத் தம்பி. இந்தச் சீதை உனக்கு உறவினள். குளிர்ந்த கடலால் சூழ்ந்த இடமெல்லாம் உன்னுடையது. நான் உனக்குத் தொழில் செய்யும் உரிமையுடையேன். இனி, நாம் ஐவரானோம்” என்று சமாதானம் கூறி கங்கையைக் கடந்து சென்றான்.

 இதற்குப் பிறகு ஆண்டுகள் பல சென்றன. வேடர் தலைவனுக்கோ இராமனைப் பற்றிய தகவல் ஒன்றும் தெரியவில்லை தெற்கே சென்றவர்கள் எங்கிருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள், என்றெல்லாம் தெரிந்து கொள்ள வழியும் இல்லை. குறித்த காலம் வந்துவிட்டதா? இல்லையா எனக் கூடத் தெரியாத நிலை.இதே நினைவாக, இதனையே சிந்தனை செய்து அன்ன ஆகாரம் இன்றி உடல் மெலிந்து உள்ளம் நைந்து உருகி நின்றான் குகன்.

குகனின் துயர் தீர்த்த குமரன்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் குகன் படும் துயர் தீர்க்க அவன் வழிபட்டு வந்த கடவுளாகிய முருகப் பெருமான், ஒரு திட்டம் தீட்டினான். தன் மனைவியரான வள்ளியை சீதையாக மாற்றி, தெய்வயானையை லட்சுமணனாக ஆக்கி, வேல் ஏந்திய கையில் வில்லை ஏந்தி, தாமே இராமன் உரு ஏற்று, குகன் கனவில் தோன்றி, “தம்பி, கவலைப்படாதே. எங்களுக்குக் குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் இருக்கிறது. விரைவில் திரும்பி விடுவோம். கவலையை விடு” எனச் சொல்லி மறைந்து விடுகிறான். குகனும் அன்று முதல் தேறி வந்து இராமன் வருகைக்காகக் காத்திருந்தான்.

     ஆனந்தத்தை அருளிய அந்த குகன், அன்று முதல் குகஸ்வாமி மூர்த்தி என்றும், ஆனந்த நாயக மூர்த்தி என்றும் பெயர் பெறுகின்றான். இந்த வரலாற்றைத் திருச்செந்தூர் புராணமும் கூறுகிறது.

சுந்தரச் சிலை யிராமன் தோற்றமும் காட்டி ஞான
முந்திய பிரம்மானந்த சித்தியும் கொடுத்து வேத
மந்திரக் குகஸ்வாமி என்னவும் வாய்ந்தது பேர்
ஆனந்த நாயகன் என்று ஓது நாமமும் குமரன் பெற்றான்.

வில்லேந்திய வேலனை இங்கும் காணலாம்

வில்லேந்திய வேலனை, திருவையாற்றில், ஐயாரப்பன் சன்னதியில் மூல ஸ்தானத்திலேயே தரிசிக்கலாம். வில்லுடையான் பட்டியில் வில்லேந்திய வேலனின் விசேஷ சன்னதி உள்ளது. திருவெண்காட்டை அடுத்த சாய்காட்டில் நின்ற நிலையில் நான்கு கரங்களுடன் (வில்லுடன்) வில்லேந்திய வேலன் செப்பு உருவில் திகழ்கிறான். இந்த வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தான் என்றும் கூறப்படுகிறது.

 போர்க்காலத்தில் வில்லேந்தி ஒய்யாரமாக நிற்கும் முருகனை திருப்போரூருக்குச் சென்றால் காணலாம். பிரகாரத்தின் ஒரு கோடியில் மிக கம்பீரமான அழகிய செப்பு வடிவம், ஒரு காலைத் தரையிலும் ஒரு காலை மயிலின் முதுகிலும் ஊன்றி உடல் வளைத்து நிற்பதில் சேனாபதியின் மிடுக்கு தெரிகிறது.

வீரவேல் முருகனுக்கும் வெற்றி வில் இராமனுக்கும் உரியவைகளாயின.

இவ்வாறு வில்லும், வேலும் அறத்திற்குத் துணையாக நின்று, மறத்தினை அறுத்த சரித்திரம் இரண்டு காவியங்களில் விளக்கப் படுகிறது. பெருமை வாய்ந்த வில்லவனையும் வேலவனையும் மனதார நினைந்து அவர்களின் அருளைப் பெறுவோமாக! 

இக்கட்டுரையை எழுதிய திருமதி உமா பாலசுப்பிரமணியன் அவர்கள் தன் தந்தையார் வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்களைப் போலவே  இறைப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்கவர். இவர் சென்னையில் பல இடங்களில் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார். திருப்புகழ் இசைப் பேருரைகள் நிகழ்த்துகிறார். இவர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் பல தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த சமூக ஆர்வலர்.

நன்றி:  ஞான ஆலயம்


உமா பாலசுப்பிரமணியன்,
சென்னை.
கை பேசி எண் — 9962608538
மின்னஞ்சல் முகவரி —  uma_kbs@yahoo.com

‘பத்தித் திருமுகம்’ என்ற  அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரத்தின்  உட்பொருளை அதன் ஆழத்திற்குச் சென்று ஆய்ந்து எழுதியவர் திருமதி உமா பாலசுப்பிரமணியன். அருணகிரிநாதரின் நூல்களில்  மிகுந்த ஆர்வம் கொண்டு பல அருமையான கட்டுரைகள் எழுதி வருகிறார். இவருடைய கட்டுரைகள் பல, தமிழ்ப் பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. சிறந்த திருப்புகழ் ஆசிரியர். சென்னையில், ஆர்வமுள்ள பலருக்குத் திருப்புகழ் பயிற்றுவிக்கிறார் . ஆழ்ந்த தமிழ்ப்பற்றும் இறைப்பற்றும் மிக்கவர்.

படித்ததில் பிடித்தது
Exit mobile version